வேளாண் சூழலியலை மேம்படுத்துவதற்கான வழிகள்


உணவுத் தேவைகள், வாழ்வாதாரங்கள், உள்ளூர் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகளை இணைப்பதால், வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் இடம் சார்ந்தவையாக இருக்கின்றன. வேளாண் சூழலியல் பற்றிய கல்வி என்பது இந்த இணைப்புகளை இணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையாகும், அங்கு விவசாயிகள், முழு செயல்முறையின் மையமாக இருக்கின்றனர்.


ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகளை உணர்ந்து, அரசு சாரா நிறுவனங்களும் (NGOs) மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளும் (CBOs) பல ஆண்டுகளாக விவசாயத்தில் ரசாயனமற்ற அணுகுமுறைகளை ஊக்குவித்து வருகின்றன. நிலையான வேளாண்மை, இயற்கை வேளாண்மை, உயிரியக்க வேளாண்மை, இயற்கை வேளாண்மை, மீளுருவாக்க வேளாண்மை, வேளாண் சூழலியல் அணுகுமுறைகள், குறைந்த வெளியிடு பொருள் கொண்ட நிலைத்த வேளாண்மை (LEISA) மாடு சார்ந்த வேளாண்மை போன்ற பல்வேறு பெயர்களில் இவை ஊக்குவிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்புக்கான (UNFCCC) இந்தியாவின் மூன்றாவது இரண்டாண்டு அறிக்கையின்படி, பசுமை குடில் வாயு (GHG) உமிழ்வுகளுக்கு, வேளாண்மையே பெரும் பங்களிக்கிறது. இந்திய அரசும் இயற்கை விவசாயம் என்ற பெயாில் நாடு முழுவதும் விவசாய அணுகுமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

வேளாண் சூழலியல் அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது நவீன விவசாயம் புவியியல் சார்பற்றது. மேலும், நவீன வேளாண் தொழில்நுட்பம் விவசாயிகளை, வெறும் தொழில்நுட்பத்தின் நுகர்வோர்களாக மாற்றியுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு ஏற்ற விதைகளைத் தேர்ந்தெடுப்பது, மண்ணின் வகை, வானிலை மதிப்பீடு செய்தல் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், பயிர்களிலிருந்து சிறந்த விதை வகைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற பாரம்பாிய திறன்களை இழக்கிறார்கள்

வேளாண் சூழலியல் அணுகுமுறைகளில், விவசாயத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்பு என்பது உயிரியல் மற்றும் உயிரற்ற சூழலைப் பற்றியது மட்டுமல்ல, பொருளாதார மற்றும் சமூக அரசியல் சூழலைப் பற்றியதும் ஆகும். விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பாதிக்கும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பண்ணை சுற்றுச்சூழல் அமைப்பு, விவசாயிகளின் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து வேறுபட்டது. இதை கல்வியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்வதற்கு வளங்களை எவ்வளவு திறமையாகப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றியது அல்ல. விவசாயம் என்பது ஒரு குறிப்பிட்ட வேளாண் சூழலியல் சூழ்நிலையில் விவசாயி தன்னிடம் உள்ள வளங்களைக் கொண்டு செய்வதேயாகும். இது உள்ளூர் கலாச்சாரம், உள்ளூர் நிலைமைகள் மற்றும் உள்ளூர் சூழலுடன் இணைக்கப்பட்ட ஒரு வாழ்வாதார விருப்பமாகும். எனவே, வேளாண் சூழலியல் கல்வியானது, உணவு உற்பத்தியை மட்டுமல்ல, சக மனிதர்களின் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பகுத்தறிவு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உணவுத் தேவை, வாழ்வாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இணைக்கும் கல்வியே இன்றைய தேவை.

பண்ணை கல்விக்கான அணுகுமுறைகள்

எந்தவொரு புதிய தொழில்நுட்பம் அல்லது செயல்முறையை ஏற்றுக்கொள்வதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் முக்கியம்: (1) தேவையான பொருட்கள் மற்றும் உறுதியான ஆதாரங்கள் (வன்பொருள்), (2) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவு மற்றும் பயிற்சி, மற்றும் (3) அத்தகைய தொழில்நுட்பத்தை ஏன் புரிந்துகொண்டு பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகள். கொள்கைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு அல்லது புவியியல் மாற்றத்துடன், தொழில்நுட்பம் (பயன்படுத்தப்படும் பொருட்கள்) மாறுபடலாம் மற்றும் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். எடுத்துகாட்டாக, உயர்கல்வி சாதனையாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த எழுத்தறிவு கொண்ட விவசாயிகளுக்கு பயிற்சிப் பொருட்கள் மற்றும் முறைகள் வேறுபட்டதாக இருக்க வேண்டும். கருப்பு மண்ணில் வேலை செய்வது சிவப்பு மணல் மண்ணில் வேலை செய்யாது, மலைகளுடன் ஒப்பிடும்போது சமவெளிகள் வேறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளன.

மிக நீண்ட காலமாக, அரசாங்கம் தனது விவசாய விரிவாக்க அமைப்பு மூலம் விவசாயிகளுக்கு தகவல்களைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தற்போதைய முறையைக் கொண்டு ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைவது மிகவும் கடினம் என்பதால், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் விவசாயிகளைச் சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரங்கிற்கு வந்ததால், அனுபவ கற்றல் மையமாக மாறியது. கண்டுபிடிப்பு கற்றல் செயல்முறையை அனுபவிப்பதற்காக வயல்வெளிப்பள்ளி (FFS) போன்ற முறைகள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளின் குழு அவ்வப்போது சந்தித்து, ஒரு பருவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான நிலத்தில் பயிர்களை கவனித்து, பயிரை புரிந்து கொள்வார்கள். வானிலை, பூச்சி இயக்கவியல், பூச்சி வாழ்க்கை சுழற்சி, பூச்சி மற்றும் பாதுகாவலர் உறவுகள், பூச்சிகளால் ஏற்படும் இழப்பைக் கண்டறிதல், தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகளின் செயல்திறன் ஆகியவை முக்கிய கற்றல்களில் சில. கற்றல் பயனுள்ளதாகவும், வலுவூட்டுவதாகவும் இருக்கும் போது, செயல்முறை வளம் மிகுந்ததாகும். சமூக வள நபர்களை உருவாக்க இந்த முறை பயன்படுத்தப்படலாம்.

பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு செயல்முறை, தேவையான பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் மற்றொரு அணுகுமுறையாகும். பல நிறுவனங்கள் பயிற்சி செயல்முறை மூலம் விவசாயிகளுக்கு கல்வி அளிக்கின்றன. கல்வியியலில், கல்வி என்பது விவசாயிகளுக்குத் தொிந்தவற்றிலிருந்து தொடங்குவதும் அதைக் கட்டமைப்பதும் ஆகும். விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதில், உள்ளூர் மொழி மற்றும் கலைச்சொற்கள் மிகவும் முக்கியமானவை. விவசாயிகளின் அனுபவம், உள்ளூர் வளங்கள் பற்றிய அறிவு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் வேளாண்மையில் வேளாண் சூழலியல் அணுகுமுறைகளில் முக்கியமானது. பயிற்சியின் போது, உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்துகொள்வது பயிற்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் வகுப்பறையில் அமர்ந்து சொற்பொழிவு கேட்பது விவசாயிகளுக்கு பழக்கமில்லை. ஆடியோ காட்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது முக்கியம்.

வேளாண் உயிர்ச்சூழல் கல்வியியலில் சி.எஸ். ஏ – வின் பங்கு

நிலைத்த வேளாண்மைக்கான மையம் (சி.எஸ்.ஏ) என்பது நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு தாக்கத்தை உருவாக்கும் அமைப்பாகும். அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள், சமூகம்; சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (எப்.பி.ஒ) போன்றவை இணைந்து வெற்றிகரமான மாதிரிகளை மேம்படுத்தவதன் மூலம் அறிவியல் பின்னணியின் அடிப்படையில் மாதிரிகளை உருவாக்கி வருகிறது. பூச்சிக்கொல்லி அல்லாத மேலாண்மை (என்.பி.எம்), காிம/இயற்கை விவசாயம், திறந்த மூல விதை அமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் பொதுக் கொள்கை சிக்கல்கள் ஆகியவை சி.எஸ். ஏ வின் முக்கிய பங்களிப்புகளாகும்.

90 களின் பிற்பகுதியிலும், 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், பூச்சிக்கொல்லிகள் முக்கிய பிரச்சனையாக இருந்தன. NPM இல் விவசாயிகள் மற்றும் விவசாயிகளுடன் பணிபுரியும் மக்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் சி.எஸ்.ஏ பூச்சிப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தது.NPM என்பது இரசாயன பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பூச்சி மேலாண்மை நடைமுறைகளின் பல்வேறு முறைகள் பற்றியது. பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி, நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளுக்கு இடையிலான வேறுபாடு மற்றும் பயிர் முறையில் பொறி பயிர்கள் மற்றும் எல்லைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முறைகள், இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்தல் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் தாவரங்கள், விலங்குகளிலிருந்து கிடைக்கும் வளங்களைக் கொண்டு உயிரியல் உள்ளீடுகளைத் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்கப்பட்டது. இந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள கொள்கைகளை விவசாயிகள் புரிந்துகொண்டபோது, அவர்கள் தங்களின் பாரம்பாிய அறிவு மற்றும் CSA நவீன அறிவியல் அறிவின் அடிப்படையில் பல்வேறு தாவரங்களை பாிசோதிக்கத் தொடங்கினர். CSA தனது பணியை NPM உடன் தொடங்கினாலும், அது ஒரு முழுமையான புரிதலுடன் செயல்பட்டது. கையில் ஒரு சிக்கலோடு தொடங்கி, விவசாயத்தின் மற்ற அம்சங்களை தடையின்றி ஒருங்கிணைத்தது.

விவசாயிகளுக்கு கல்வி கற்பிக்கும் செயல்பாட்டில், சமூக வள நபர்களை விரிவுரையாளர்களாக உருவாக்குவது நல்ல பலனைத் தந்தது. விவசாய சமூகத்தில் வேளாண் சூழலியல் அணுகுமுறைகளை அளவிடுவதில் சமூக வள நபர்கள் முக்கிய பங்குவகித்தனர்.

வேளாண் சூழலியல் என்பது பழைய முறைகளுக்குச் செல்வது அல்ல, ஆனால் விவசாயத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டமிடப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க பாரம்பாிய அறிவை நவீன அறிவியல் புரிதலுடன் இணைப்பதாகும். இந்தச் செயல்பாட்டில், விவசாயிகளுக்கு வேளாண் சூழலியல் அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு உதவும் திட்டங்களை தொடங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆதாரங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இணையச் சகாப்தத்தை ஒட்டி,CSA பல மொபைல் (ஆண்டராய்டு) அடிப்படையிலான பயன்பாடுகளை உருவாக்கியுள்ளது. அவை களப்பணியாளர்கள், சமூக வள நபர்கள் மற்றும் படித்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெஸ்டோஸ்கோப் இது போன்ற ஒரு பயன்பாடாகும். இது கள அளவில் பூச்சிகளை அடையாளம் காண பயனுள்ளதாக இருக்கும். களப்பணியாளர்கள் பிரச்சனையை படம் எடுத்து கேள்வி அனுப்பலாம். அனுப்பப்படும் புகைப்படங்கள் தானாகவே புவி குறியிடப்படும். நிபுணர் குழு பதிலளித்து தீர்வை அனுப்புகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, இணையப் பக்கமாகவும் (https//pestoscope.com/) கிடைக்கும். இதேபோல், ஒரு Youtube சேனல்,ekrishi.tv  (https://www.youtub.com/c/KrishiTV) CSA ஆல் நடத்தப்படுகிறது. பல்வேறு மொழிகளில் பல்வேறு தலைப்புகளில் அனுபவங்கள், தயாரிப்புகள், திரைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வீடியோ அடிப்படையிலான உள்ளடக்கம் இதில் உள்ளது.

CSA பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வேளாண் சூழலியல் அணுகுமுறையில் அதன் தொடக்கத்தில் இருந்து பயிற்சி அளித்துள்ளது. கோவிட் 19 இன் போது ஊரடங்கு நிலை, மெய்நிகர் பயிற்சிகளை ஆராய CSA க்கு வாய்ப்பாக இருந்தது. மெய்நிகர் பயிற்சிகள் சமூகத்திற்கும் CSA க்கும் மிகவும் புதியதாக இருந்தாலும், விரைவில் CSA அதை ஏற்றுக்கொண்டது மற்றும் அதற்கேற்ப உள்ளடக்கம் மாற்றப்பட்டது. தற்போது, மெய்நிகர் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் விவாதங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

CSA ஆனது கிராமீன் அகாடமி (http://www.grameenacademy.in) என்ற கிராமப்புற கல்வி போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இது பல்வேறு கிராமப்புற மேம்பாடு தலைப்புகளில் படிப்புகளை ஒழுங்கமைக்கிறது. கிராமீன் அகாடமி, கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புறத் துறையில் தங்கள் வேலைவாய்ப்பு அல்லது தொழில் முனைவோர் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மற்றவர்களின் அறிவு மற்றும் திறன்களை உருவாக்க மாற்று கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு பாடங்களில், உடல்ரீதியாக, மெய்நிகராக மற்றும் இரண்டும் கலந்த பாடங்களை வழங்குகிறது. படிப்புகளை வழங்குவதில் கிராமீன் அகாடமி பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறது. CSA தவிர, மற்ற நிறுவனங்களும் இந்த மேடையில் பரஸ்பர விவாதங்களுடன் படிப்புகளை வழங்குவதன் மூலம் தங்கள் நிபுணத்துவத்தை கொண்டு வரலாம்.

CSA ஆனது, கிருஷ்ணா சுதா அகாடமி ஆப் அக்ரோஇக்கோலஜியைத் தொடங்கியுள்ளது. இது உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வேளாண் சூழலியல் குறித்த முறையான கல்வியை தொடங்க உள்ளது. காிம/இயற்கை விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரம்,NPM கள் ஆராய்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகள் பற்றிய படிப்புகளை கூட்டாக வழங்குவதற்காக செஞ்சுரியன் பல்கலைக்கழகத்துடன் CSA புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. CSA, அது வழங்கும் படிப்புகளுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. காிம வேளாண்மை/இயற்கை விவசாயம், NPM கள், கொள்கை சிக்கல்கள் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கும்.

முடிவுரை

வேளாண் சூழலியல் கல்வியின் முக்கிய அம்சம், உள்ளூர் சூழ்நிலையைப் பாிந்துகொள்வதும், விவசாய சமூகத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பொருத்தமான வேளாண் சூழலியல் முறைகளை பாிந்துரைப்பதும் ஆகும். Liebig  இன் பீப்பாயின் தண்டுகளைப் போலவே, தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் விவசாய சமூகங்களின் முக்கிய பிரச்சினையாக மாறக்கூடிய மற்றொரு பிரச்சினை இருக்கலாம். காலப்போக்கில் பிரச்சனைகளும் மாறுகின்றன. எனவே, அமைப்புகளும் விவசாய சமூகத்தின் இயக்கவியலின் அடிப்படையில் உருவாக வேண்டும். உள்ளடக்கத்தை சாியான நேரத்தில் புதுப்பித்தல் மற்றும் கற்றலின் அடிப்படையில் பொருத்தமான ஆதாரப் பொருட்கள் ஆகியவை வேளாண் சூழலியல் கல்வியில் முக்கியமான அம்சங்களாகும். மேலும், கல்விச் செயல்பாட்டில் தொழில்நுட்பம், விரிவாக்கம் மற்றும் புதுமையான பங்காளிகளாக விவசாயிகளை ஈடுபடுத்துவது, உள்ளூர் வேளாண் சுற்றுச்சூழல் அமைப்புக்கு குறிப்பிட்ட உள்ளூர் தீர்வுகளை உருவாக்குவது அவசியம்.

ஜி. சந்திரசேகர், ஜி. ராஜசேகர் மற்றும் ஜி.வி. ராமாஞ்சநேயுலு


G Chandra Sekhar, G. Rajashekar and G V Ramanjaneyulu
Centre for Sustainable Agriculture
H. No. 12-13-568, Nagarjuna Nagar, Street No 14, Lane
No.10, Tarnaka, Secunderabad – 500017
Email: sekhar@csa-india.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2022, வால்யூம் 24, இதழ் 2

அண்மைய இடுகைகள்