வேளாண்மையை மறுவடிவம் செய்தல் –  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக


வேளாண் முறைகளை மாற்றியமைப்பது மற்றும் மறு வடிவம் கொடுப்பதன் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மாறி வரும் பருவநிலை மாற்ற சூழலில் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்காக வேளாண்மையில் தாங்குதிறனை கட்டமைக்கிறார்கள். இது போன்ற அடிமட்ட கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவது நிறுவன மற்றும் கொள்கை அளவிலான பொருத்தமான ஆதரவுகளை பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதவை.


தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள தேனாம்படுகை என்ற கிராமத்தை சர்ந்த பாஸ்கரன் ஒரு முன்னோடி இயற்கை விவசாயி ஆவார். இயற்கை வேளாண்மைக்கு தமிழகத்தில் உந்துசக்தியாக இருந்த நம்மாழ்வார் அவர்களின் தாக்கத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இவர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் ஆதிரெங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நெல் திருவிழாவில் தொடர்ந்து பங்கேற்கும் விவசாயிகளில் இவரும் ஒருவர். இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பாிய நெல் ரகங்களை பயிரிடுவதோடு மட்டுமல்லாது, வேளாண்மையிலும், குறிப்பாக பருவநிலை, இவற்றில் நடைபெறும் மாற்றங்களை கூர்ந்து கவனித்து அவற்றை சமாளிக்கும் வகையில் தொடர் ஆராய்ச்சிகளை தனது பண்ணையில் மேற்கொண்டும் வருகிறார். இவர் தனது பண்ணையில் தொடர்ந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளுக்கு மட்டுமல்லாது இதர பகுதி விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் என்னமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு நடைமுறையில் சந்திக்கும் பிரச்சனைகளின் தாக்கங்களை குறைப்பதற்கான தீர்வுகளை தருகிறது.

கணிக்க இயலாத சீதோசண நிலைகள்

இருபது வருடங்களுக்கு முன்பு. மழைபொழிவு மிகவும் நன்றாகவே இருந்தது. வருடத்தில் 10 மாதங்களுக்கு குளங்களிலும், கண்மாய்களிலும் நீர் நிறைவாக இருந்தது. அது வருடத்தில் இரண்டு போகம் வேளாண்மை செய்வதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. மழை நாட்களும் வருடத்தில் 3 மாதங்கள் வரை பரவி இருந்தது. ஆனால் தற்போது ஆறுகளில் உள்ள தண்ணீர் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போய் வேளாண்மை என்பது மின்சார வசதியோடு ஆழ்குழாய் கிணறுகள் வைத்து தண்ணீர் இறைக்க முடிந்தவர்களுக்குதான் சாத்தியம் என்ற நிலையில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான நிலங்கள் தாிசாக போடப்பட்டுள்ளது.

மழைபொழிவை ஆராய்ந்ததில் 1991 -95 களில் பருவ மழை சீராக இருந்துள்ளதையும் அதன் விளைவாக விவசாயிகளுக்கு இரு போகம் வேளாண்மை செய்வதற்கு உதவி செய்ததையும் பாஸ்கரன் கண்டறிந்தார். 2000 மாவது ஆண்டில் படிப்படியாக மழை பொழிவானது குறையத் தொடங்கி விவசாயிகளை ஆண்டுக்கு ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்வதற்கான சூழல் உருவானது. 2000-2004 ஆம் ஆண்டுகளில் மழைப் பொழிவானது மேலும் குறையத் தொடங்கி கடும் வறட்சியான சூழல் காணப்பட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டு அபாிமிதமான மழைபொழிவிருந்து அது வெள்ளம் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியது. அதன்பிறகு மழைப்பொழிவு என்பது சீராக இல்லாமல் தாறுமாறாக சில ஆண்டுகளில் அதிக மழையும், சில ஆண்டுகளில் பற்றாக்குறையாவும் மழைபொழிவு இருந்தது. அது 2010 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதன் பிறகு 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கடுமையான வறட்சி இருந்தது.

அவரது ஆய்வின்படி, ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறை கடும் வறட்சியும், அதன்பின் 1 ஆண்டு கூடுதல் மழை பொழிவும் இருந்துள்ளது. அதன்பின் ஒர வருடம் கடுமையான வறட்சியும் இருந்து வருடத்தில் வெறும் 10 நாட்களே மழை கிடைத்துள்ளது. இந்த கணிக்க இயலாத மழைபொழிவு நிலைகள் மற்றும் பருவநிலை மாற்றங்களால், விவசாயிகள் எந்த ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையையும் வேளாண்மையில் பயன்படுத்த முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மழைபொழிவு எப்படி இருக்கும் என்பது விவசாயிகளுக்கு உறுதியாக தொியாததால், அவர்கள் பயிர் சாகுபடியை சாியாக திட்டமிட முடியவில்லை. வானிலை அறிவிப்புகள் கணிப்பதும் கூட தவறாக போய் விட்டன. எனவே, விவசாயிகள் தங்களின் சொந்த அனுபவத்தை கொண்டும், மழைப்பொழிவு நிலைகளை பொருத்தும் அதற்கு ஏற்றாற்போல் அணுகுமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது.

பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள்

பாஸ்கரன் தனது நெல் சாகுபடி அனுபவத்தின் அடிப்படையிலும், வானிலை மாற்றங்களை தொடர்ந்து கவனித்து அதன் மூலம் கிடைத்தவற்றின் அடிப்படையில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தனது சொந்த திட்டத்தை தீட்டினார். 2012 ஆம் ஆண்டு விவசாயிகள் கடும் வறட்சியான சூழலில் என்ன செய்வது என்பது தொியாது இருந்தனர். அந்த நேரத்தில் 140 நாட்கள் வயதுடைய வெள்ளைப் பொண்ணி நெல் ரகத்தை நேரடி விதைப்பு செய்வதென முடிவெடுத்தார். செப்டம்பாில் பெய்த மழையானது அவரது நிலத்தை உழுவதற்கும், விதைப்பதற்கும் போதுமானதாக இருந்தது. மண்ணில் இருந்த ஈரப்பதம் விதைகள் முளைப்பதற்கு உதவி புரிந்தன. இரண்டாவது மழையாக அக்டோபாில் தீபாவளிக்கு பிறகு கிடைத்தது. அதை கொண்டு நெற்பயிரானது குறிப்பிட்ட அளவு வளர்வதற்கு போதுமானதாக இருந்தது. பாஸ்கரனுக்கு ஆற்றில் இருந்த கிடைத்த நீர் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு 10 நாட்கள் கிடைத்தது.

ஜனவரியில் நெற்பயிர் அறுவடைக்கு தயாரானது. காய்ச்சலும் பெய்ச்சலும் என்கிற தத்துவம் மிக சாியாக வேலை செய்ததை பாஸ்கரன் கண்டறிந்தார். அவ்வகையில் 140 நாட்கள் பயிரானது 10 நாட்கள் ஈரப்பத்திலும், அதனை தொடர்ந்து 20 நாட்கள் காய்ச்சலிலும் நன்கு வளர்ந்தது. மாற்றி மாற்றி அவர் கடைபிடித்த காய்ச்சலும் பெய்ச்சலும் என்கிற உக்தி பயிர் நன்றாக வளர்வதற்கும், ஜனவரியில் நல்ல விளைச்சலையும் அளித்தது. நேரடி விதைப்பில் நெற்பயிர் பயிரிடப்பட்டிருந்தாலும், தூர்கள் நேராகவும், உறுதியாகவும், பதர்கள் குறைவாகவும், முதிர்ந்த நெல்மணிகளை கொடுத்தது. இதன் மூலம் நெற்பயிரை குறைவான நீரை கொண்டும் வளர்க்க முடியும் என்பதை நிரூப்பிக்க முடிந்தது.

2016 ஆம் ஆண்டு நெல் சாகுபடி செய்வதற்கான சாதகமான சூழல் இல்லை. எனினும் பாஸ்கரன் கருங்குறுவை மற்றும் சொர்ணமசூரி என்கிற இரண்டு பாரம்பாிய நெல் ரகங்களை பயிரிட்டார். இவை ஜுன் மாதம் நேரடி விதைப்பு முறையில், எதிர் வரும் மாதங்களில் மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விதைத்தார். ஆனால் எதிர்பார்த்தபடி மழை கிடைக்கவில்லை. சொர்ணமசூரி நன்றாக முளைத்தது ஆனால், அதன்பிறகு மழை இல்லாததால் காய்ந்து விட்டது. கருங்குறுவையை பொருத்தமட்டில் அது நன்றாக முளைத்து குறைந்த அளவு நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளுக்கு பொருத்தமான ரகம் என்பதை நிரூபித்தது.

இரண்டாவது பருவத்தில், அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபாில் ஆற்றில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் நேரடி விதைப்பிற்கும், நாற்றுவிட்டு நடும் முறைக்கும் சென்றனர். ஆனால் நடு டிசம்பர் வரை மழை பெய்யவில்லை. எனவே, நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லை. ஆழ்குழாய் கிணறு வசதியுடைய ஒரு சில விவசாயிகளே கொஞ்சம் சாகுபடி செய்ய முடிந்தது. மற்ற விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பும் அந்த ஆண்டு வருமானம் கிடைக்காமல் போனது.

இருப்பினும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனி ஈரத்தில் கிடைக்கும் ஈரப்பதத்தை கொண்டு நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பயிரிடுவது என முடிவு செய்தார். அதனால் அவர் உளுந்து (ஏ.டீ.டி 3), பச்சை பயறு (நாட்டு ரகம்) மற்றும் எள் (டி.எம்.வி-3) போன்றவற்றை தேர்வு செய்தார். 2016 ஆம் டிசம்பர் மாதம் 20 விதைத்தார். அதன் பின் 2 மழையானது டிசம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கிடைத்தது. அதன்பின் மேலும் 2 மழையானது ஜனவரி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கிடைத்தது. எனவே, ஒரு சில இடுபொருட்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கொண்டு எந்த ஒரு நீர் பாய்ச்சுதலின் தேவையின்றி பயிர்கள் நன்கு வளர்ந்து வந்தன. அனைத்து பயிர்களும் 2017 மார்ச் 25 ஆம் தேதி அறுவடை செய்யப்பட்டன. அவர் 2 ஏக்கர் நிலத்தில் 250 கிலோ எள்ளும், மற்றுமொரு 2.5 ஏக்கர் நிலத்தில் 1100 கிலோ உளுந்தும் அறுவடை செய்தார். மேலும் ஒரு ஏக்காில் 350 கிலோ பச்சைப் பயிறும் அறுவடை செய்தார். பாஸ்கரன் மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்ப பல பயிர்களை சாகுபடி செய்தார். ஆனால் மற்ற விவசாயிகள் மாறிவரும் பருவநிலை மாற்றங்களை புரிந்துகொள்ளாமல் ஒட்டுரக நெல் ரகங்களை பயிரிட்டு பெரும் பயிர் இழப்பை சந்தித்தனர்.

கற்ற படிப்பினைகள்

ஒவ்வொரு பருவநிலைக்கும் ஏற்ற குறிப்பிட்ட பாரம்பாிய ரகங்கள் உள்ளன. பாரம்பாிய ரகங்கள் அந்தந்த பகுதிக்கும், சூழலுக்கும் பொருத்தமானவை. எனவே பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொண்டு வளர்ந்து விவசாயிகளுக்கு உதவுபவை. விவசாயிகளுக்கு அதில் சாியான புரிதல் இருந்தால், அதற்கேற்ற வகையில் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். விவசாயிகள் தொடர்ந்து 2-3 பருவங்களுக்கு நெல் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். சம்பா பருவத்தில் நெற்பயிர் பயிரிடும்போது, அதன் பின் கிடைக்கும் எஞ்சிய ஈரப்பதத்தை கொண்டு பயறுவகை பயிர்களை பயிரிடலாம். எனவே, அவர்கள் நடு-ஜனவரிக்கு பிறகு பயறுவகை பயிர்களுக்கு போவது நல்லது. அதன் பின் கோடை மாதங்களில், அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மண்ணின் மேற்பரப்பு காய்ந்திருக்கும். அந்த நேரத்தில் கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற பயிர்களை பயிரிடலாம். இந்த வகையில் விவசாயிகள் தங்களின் பயிர் சாகுபடி முறைகளை திட்டமிட்டால் மாறிவரும் பருவநிலை மாற்றங்களின் தாக்கங்களை சமாளித்து அதிகபட்ச பயன்களை அடையலாம். இதற்கு பாஸ்கரன் ஒரு நல்ல உதாரணம்.

திரு. பாஸ்கரன் அவர்களை தேனாம்படுகை, பட்டீஸ்வரம் வழி, கும்பகோணம், தமிழ்நாடு, 612 703, தொ.பேசி 94428 -71049 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சுரேஷ் கண்ணா. கே.


Suresh Kanna.K
Associate Coordinator,
CREATE - Save Our Rice Campaign,
No. 113/118, Sundaraj Nagar, Subramaniyapuram,
Trichy - 620 020, Tamil Nadu, India
Phone No: 099420-99926
Email: kannasuresh71@gmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2017, வால்யூம் 19, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...