மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி


இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான தம்மையா, தனது ஒரு ஏக்கர் மாதிரியின் மூலம், சிறு விவசாயிகள் எவ்வாறு பல பயிர் முறையைப் பின்பற்றி கண்ணியமான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறார்.


மைசூர் மாவட்டம், ஹூன்சூர் தாலுக்காவில் உள்ள சௌடிகட்டே கிராமத்தைச் சேர்ந்த திரு. தம்மையா ஒரு புதுமையான விவசாயி, நான்கு தசாப்தங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ரசாயன விவசாயம் செய்து வந்த தந்தையிடமிருந்து அவர் தனது பண்ணையைப் பெற்றார். ஆனால் பட்டதாரியான தம்மையா, ரசாயன விவசாயத்தின் தீமைகளை அறிந்தவர் என்பதால், இயற்கை விவசாய அணுகுமுறையை நோக்கி நகர்ந்தார்.

தம்மையாவுக்கு சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் 16 ஏக்கர் பழத்தோட்டத்தின் கீழ் உள்ளது. முக்கியமாக 800 தென்னை மரங்களின் கலவை, சப்போட்டா, வாழை, மா, இஞ்சி, மஞ்சள் மற்றும் பருவகால வயல் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. பாரம்பாிய சுழற்சி முறையில் இயற்கை முறையில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டப் பயிர்கள், வனப் பயிர்கள், பழப் பயிர்கள் மற்றும் மரப் பயிர்கள் ஆகியவற்றின் நாற்றங்கால்களை வளர்ப்பதற்காக ஒரு ஏக்கர் பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ளது. நாற்றங்காலில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக உள்ளது.

பண்ணைக் குட்டைகளில் உள்ள நீர் நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவுகிறது
6 ஏக்கர் பரப்பளவில் 6 பண்ணைக் குட்டைகள் உள்ளன. மூங்கில், கொத்து அத்தி மரங்கள் மற்றும் தீவன பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. அவரது பண்ணையில் சராசாியாக 770 மிமீ வருடாந்திர மழைப்பொழிவு, சுமார் 53 மழை நாட்கள், பெரும்பாலும் தென்மேற்கு பருவமழையின் போது, குளங்களில் உள்ள நீர், தேவைப்படும்போது நிலத்திற்கு பாசனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், குளத்து நீர் நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவுகிறது. அவர் தண்ணீரை வெளியேற்றுவதை எதிர்த்தாலும், கோடையில் அவர் பாசனத்திற்காக தண்ணீரை உயர்த்த 4 ஹெச்பி மோட்டாரைப் பயன்படுத்துகிறார்.

6 குளங்களில் ஒன்றில் மீன்கள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், தம்மையா கால்நடைகளை வளர்த்து வருகிறார். இது ஒரு வருமான ஆதாரமாக இருப்பதைத் தாண்டி, இயற்கை விவசாயம் செய்வது முக்கியம் என்று அவர் கருதுகிறார். இவரது பண்ணையில் சுமார் 11 பசுக்கள் (8 மலநாடு கிடா மற்றும் 3 ஹல்லிகர்), 4 கன்றுகள், 3 செம்மறி ஆடுகள், 12 ஆடுகள், 2 வான்கோழி கோழிகள் மற்றும் 4 நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வான் கோழிகள் பாம்புகளை வேட்டையாடுகின்றன.

ஒரு ஏக்கர் மாதிரி நிலம்
பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் விவசாய நிலங்கள் குறைந்த வருவதால், சிறு விவசாயிகளுக்கு விவசாயம் செய்து கண்ணியமான வாழ்க்கை நடத்துவது கடினமாகி வருவதை தம்மையா உணர்ந்தார். பாரம்பாிய சாகுபடி முறைகளைப் பயன்படுத்தி ஒற்றைப்பயிர் சாகுபடியில் இது குறிப்பாக உண்மையாகிறது. 2019 ஆம் ஆண்டில், அவர் கோலாப்பூர் கானோியில் உள்ள ஸ்ரீ சித்தகிரி மடத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு ஏக்கர் மாதிரி நிலத்தைப் பற்றி அறிந்து கொண்டார். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒருவர் எவ்வாறு தன்னிறைவு பெற முடியும் என்பதை அவர் காட்டினால், குறைந்த வளங்களைக் கொண்ட விவசாயிகள் விவசாயத்தை வாழ்வாதாரமாக்க உதவ முடியும் என்று அவர் உணர்ந்தார். இதுவே அவரது பண்ணையில் ஒரு ஏக்கர் மாதிரி வளர்ச்சியின் ஆரம்பமானது.

2019 இல், தம்மையா பல அடுக்கு விவசாய நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். இம்முறையில், நிலம், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு உயரமுள்ள தாவரங்கள் ஒரே நேரத்தில் வளர்க்கப்படுகின்றன. இரண்டாவது பயிர் ஏற்கனவே வெட்ட தயாராக உள்ளது. தாவரங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக வளர்வதால், ஒரு பயிருக்குத் தேவையான நீரின் அளவு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை மூடுவதற்கு போதுமானது, இதனால் நீர் சேமிக்கப்படுகிறது.

தம்மையாவின் சோதனை தென்னை மரங்களில் தொடங்கியது. முதலில் வயலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் 30 அடி தூரத்தில் தென்னை மரங்களை (உயரமாக) நட்டார். இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவே சப்போட்டா மரத்தை நட்டார் (நடுத்தர உயரம் அதிக விதானம்). தென்னைக்கும் சப்போட்டாவிற்கு இடைப்பட்ட இடத்தில், வாழை மரத்தை (நடுத்தர உயரம்) (2வது அடுக்கு) நட்டார். தென்னை மரங்களுக்கு கீழே கருமிளகு, வெற்றிலை கொடியை பயிரிட்டுள்ளார். இந்த மரங்களுக்கு இடையில், அவர் வாசனை திரவியங்கள் இஞ்சி மற்றும் மஞ்சள் நட்டார். வயலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் மூன்றாவது அடுக்கில் மா, கொய்யா. பப்பாளி, ஜாமூன், பலா போன்ற மரங்களை நட்டார். இந்த மரங்களின் கீழ் நோனி செடி, பாசிப்பழம், ரம்பால், லட்சுமண் பழம், எலுமிச்சை மற்றும் சிறு பழ மரங்கள் அடுத்த அடுக்காக (படம் 1) நடப்பட்டது.

பச்சைக் காய்கறிகள், பருவகால காய்கறிகள், சிறுதானியங்கள் போன்றவற்றையும் பயிரிட்டுள்ளார். அவை மண்ணை மூடுவதன் மூலம் களைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. நிலத்திற்கு கீழே இஞ்சி, மஞ்சள், கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு நடப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு முக்கியமாக எலிகளை ஈர்க்கவும் மற்ற பயிர்களை காப்பாற்றவும் வளர்க்கப்படுகிறது. இந்த அமைப்பு கூட்டுவாழ்வை உள்ளடக்கியது. ஒவ்வொரு தாவரமும் மற்றொன்று வளர உதவுகிறது. மஞ்சள் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக பாக்டீரிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறிகள் களை வளர்ச்சியைத் தடுக்கின்றன மற்றும் வாசனைப் பொருட்களுக்கு குறைந்த சூரிய ஒளி தேவைப்படுகின்றது.

வேலி பயிர்களாக கிளைரிசிடியா, முருங்கை, சீமை கருவேலமரம், மில்லியா துபியா பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து தாவரங்களுக்கும் பல்வேறு குணங்கள் உள்ளன. கிளிரிசிடியா மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. முருங்கை மற்றும் சீமைக்காயின் இலைகள் மற்றும் விதைகள் சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இலைகள் மண்ணுக்கு காிம உரமாக பயன்படுகிறது. தம்மையா ஒரு ஏக்கர் நிலத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவர் இலைகளை அறுவடை செய்து தரையில் விட்டு, இது பச்சை இலை உரமாகவும், தழைக்கூளமாகவும் பயன்படுகிறது. மண்ணில் பரவியிருக்கும் சுமார் ஒரு கிலோ கிளிரிசிடியா இலைகள் சுமார் 120 லிட்டர் மழை நீரை தேக்கிவைத்து, நீர் சேமிப்புக்கு உதவுகிறது.

மற்ற தாவரங்களில் 80 மருத்துவ தாவரங்கள், காபி மற்றும் பிற சிறு பழங்கள் அடங்கும். நிலத்தில் ஏராளமான தாவரங்கள் இருப்பதால், மகரந்தச் சேர்க்கையை அதிகாிக்க, தம்மையா ஒரு ஏக்கர் மாதிரி பண்ணையில் தேனீக்கூடு பகுதியையும் அமைத்தார். ஜீவாம்ருதா, ஒரு காிம தயாரிப்பு (பார்க்க பெட்டி 1) டிரம்மில் சேமிக்கப்பட்டு மாதிரி பண்ணையில் வைக்கப்படுகிறது. உரம் தயாரிப்பதற்கான பயிர் குப்பைகளும் மாதிரி பண்ணையில் சேமிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் மாதிரிப் பண்ணையில் களையெடுத்தல், உழவு மற்றும் இடையில் பயிரிடுதல் ஆகியவை நடைமுறையில் இல்லை.
தம்மையா மாதிரி பண்ணையில் உயிரியல் பூச்சி மேலாண்மை குறித்தும் செய்து காட்டியுள்ளார். உதாரணமாக, காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த டெர்மினாலியா செபுலா விதை எண்ணெய் 2 லிட்டர் பாட்டிலில் நிரப்பப்பட்டு தென்னை மரத்தில் கட்டப்பட்டது. இதேபோல், குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த, தம்மையா, தென்னை மரத்தில் மீன் துண்டுகளுடன் மீன் சாம்பார் நிரப்பப்பட்ட 2 லிட்டர் பாட்டிலை வைக்கிறார். மீன் வாசனையால் குரங்குகள் விரட்டப்படுகின்றன.
தம்மையா ஒரு புதுமையான விவசாயி என்பதால், தென்னை மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது, வாழை சாகுபடியின் குழு முறை போன்ற பல புதுமையான யோசனைகளை தனது பண்ணையில் முயற்சித்துள்ளார்.
குழு முறை வாழை சாகுபடி, ஒரு புதுமையான முறை

நன்மைகள் மற்றும் வருமானம்
பல அடுக்கு விவசாயம் மூலம், ஒரு ஏக்காில் 80 மருத்துவ குணமுள்ள செடிகள், தென்னை, சப்போட்டா, வாழை, கொய்யா, பலா, திணை, இலைக் காய்கறிகள், மா, கிழங்கு மற்றும் வேர் பயிர்கள் முதல் தீவனப் பயிர்கள் உட்பட சுமார் 200 வகையான தாவரங்கள் பயிரிடப்படுகின்றன. மண், நீர், காற்றுவெளி, சூரிய கதிர்வீச்சு மற்றும் நிலையான வழியில் உள்ள அனைத்து உள்ளீடுகள் போன்ற உற்பத்திக் கூறுகளை சிறப்பாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பலதரப்பட்ட பயிர் முறைகள் மாறும் சிறந்த நடைமுறைகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு ஏக்கர் விவசாயத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுவதால், வறட்சி நிலவும் பகுதிகளில் மிகவும் திறம்பட செயல்படுத்த முடியும். ஆரம்பத்தில், புதர்கள், கொடிகள் மற்றும் காய்கறிகள் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்வதால் நீர் பயன்பாடு கணிசமாக குறைகிறது மற்றும் பொிய மரங்களின் நிழல் மேலும் ஆவியாவதைத் தடுக்கிறது. “ஒரு ஏக்காில். ஒரு வழக்கமான விவசாயி ஒரு சுழற்சிக்கு 20000 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தினால், எனக்கு 6000 லிட்டருக்கும் குறைவாகவே தேவைப்படும்” என்கிறார் தம்மையா.

இந்த மாதிரியின் மற்றொரு நன்மை என்னவென்றால், அவர் வெவ்வேறு அறுவடை காலங்களை கொண்ட பயிர்களை வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் மகசூல் பெறுகிறார். இந்த மாதிரியானது, உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானம் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக சிறுதானியங்கள் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துகிறார். இது குடும்பத்திற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குகிறது. சிறுதானிய அறுவடையில் சில பகுதிகளுக்கு மதிப்பு கூட்டல் செய்யப்படுகிறது. அவர் பாரம்பாிய கல் கிரைண்டரைப் பயன்படுத்தி சுமார் 20-25 கிலோ சிறுதானிய மாவை உற்பத்தி செய்கிறார். ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருப்பதை உறுதி செய்கிறார். இதை, ஆரோக்கிய ஸ்பூர்த்தி என்ற பெயாில் விற்பனை செய்து, ஆண்டுக்கு ரூ. 50000 வருமானம் பெறுகிறார். தென்னை, சப்போட்டா, வாழை மற்றும் கருமிளகு போன்ற தோட்டக்கலை மரங்கள் மூலம், அவர் ஒரு ஏக்கர் மாதிரி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 10 லட்சம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, அவர் மருத்துவ தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட “கபா சூர்ணா” மற்றும் விற்கப்படாத வாழைப்பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உலர்ந்த வாழைப்பழங்களை விற்பனை செய்வதன் மூலம் சம்பாதிக்கிறார்.
உலர்ந்த இலைகள் தழைக்கூளமாக பணிபுரிய தரையில் விடப்படுகின்றன.
அவர் தனது பண்ணையில் உள்ள காய்கறிகள், மாம்பழங்கள் மற்றும் பலாப்பழங்கள் போன்ற விளைபொருட்களை நண்பர்கள் மற்றும் தனது பண்ணைக்கு வருபவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நல்ல எண்ணங்களை பராமாிக்கிறார்.

அவரது பண்ணை விளைபொருட்கள் ரசாயனமற்ற மற்றும் ஆரோக்கியமானவை, இது இயற்கை முறையில் சாகுபடி செய்வதன் மேலான நன்மையாகும். இயற்கை வளங்களை முறையாக நிர்வகித்து, குறைந்த வெளியிடுபொருட்களைப் பயன்படுத்தி, முடிந்தவரை விளைச்சலுக்கு மதிப்புக் கூட்டி விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்திலும் விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என்பதை நிரூபித்தவர் தம்மையா.

சாகுபடிக்கு அப்பால்
தம்மையா ஒரு நிலையான மாதிரியை உருவாக்கியது மட்டுமல்லாமல், தனது பண்ணைக்கு வரும் விவசாயிகளையும் அதை நடைமுறைப்படுத்த ஊக்குவித்து வருகிறார். இவரது பண்ணைக்கு வாரந்தோறும் 20-30 பேர் வந்து செல்கின்றனர். சமீபத்தில், விவசாயம் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகம் மற்றும் மைசூரில் உள்ள வித்யாவர்தனா கல்லூரி மாணவர்கள் இவரது பண்ணைக்கு வருகை தந்தனர். தம்மையா, அவர் தான் என்ன பயிற்சி செய்கிறார் என்பதையும் கற்றுக்கொடுக்கிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறார். பொதுவாக 50-100 விவசாயிகள் இவரது பண்ணையில் பயிற்சி பெறுவார்கள். ஹூன்சூர் பகுதியைச் சுற்றி வசிக்கும் இளைஞர்களுக்கு பண்ணை மேலாண்மை குறித்து வழிகாட்டி பயிற்சியும் அளித்து வருகிறார். இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் அதே வேளையில், இந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நாளைக்கு ரூ. 500 கொடுக்கிறார்.

ஒரு ஏக்கர் மாதிரி அமைப்பதில் 70 விவசாயிகளுக்கும் வழிகாட்டியுள்ளார். இதில் கனகபுரா தாலுக்கா, நானாஜாகுட் தாலுக்கா, மைசூர் மற்றும் சன்னபட்னா தாலுக்காவை சேர்ந்த விவசாயிகள் அடங்குவர்.

பெட்டி செய்தி 1: ஜீவாமிர்தம் தயாரிப்பு
ஒரு பீப்பாயில் 200 லிட்டர் தண்ணீரை ஊற்றவும், பின்னர் 10 கிலோ புதிய உள்ளூர் மாட்டு சாணம் மற்றும் 10 லிட்டர் மாட்டு சிறுநீர் சேர்க்கவும். பண்ணையின் மூட்டையிலிருந்து 2 கிலோ வெல்லம், 2 கிலோ பருப்பு மாவு மற்றும் ஒரு கைப்பிடி மண் சேர்க்கவும். கரைசலை நன்கு கிளறி, நிழலில் 48 மணி நேரம் புளிக்க விடவும். இப்போது ஜீவாம்ருதா பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் போதுமானது.

பெட்டி செய்தி 2
தோட்டம் மற்றும் பழ பயிர்களில் புதுமைகள்
தென்னை மரக்கன்றுகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது:
40 வயது நிரம்பிய மற்றும் கோள கிரீடம் போன்று இருக்கும் மரங்களை (முழு நிலவின் வடிவம்) தாய் மரமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தாய் மரங்களில் இருந்து விழுந்த தென்னை விதைகளை சேகாித்து சிறிய குளத்தில் 3 மாதங்கள் வைத்திருக்க வேண்டும். பின் பாதி மிதந்த, பாதி நனைந்த காய்களை நாற்று வளர்ப்புக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். கொட்டைகளை ஜீவாம்ருதத்தில் ஊற வைக்க வேண்டும் (பெட்டி1) பின்னர் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்ட கொட்டைகளை நாற்றங்கால் பைகளில் வைக்க வேண்டும்.

வாழை சாகுடியின் குழு முறை: தம்மையா 10 வகையான வாழைகளை பராமாித்து வருகிறார். அதாவது, வலுவான, நேந்திரன், எலக்கி பலே, ரசபலே, சாம்பார் மூட்டை, கடபலே, மரபலே, கெம்பு/ராஜா பேல் மற்றும் ஜி9. குலைகளை அறுவடை செய்த பின், வாழையின் தண்டு வயலில் விடப்படும். போலித் தண்டில் இருக்கும் பொட்டாஷ் புதிதாக உருவாகும் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, செடிகளுக்கு பொட்டாஷ் அல்லது உரம் இட வேண்டிய அவசியமில்லை.

பி. எம். சஞ்சனா


B M Sanjana
Assistant editor, LEISA India
AME Foundation
No. 204, 100 Feet Ring Road,
3rd Phase, Banashankari 2nd Block, 3rd Stage,
Bangalore – 560 085, India
E-mail: sanjana@amefound.org

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2022, வால்யூம் 24, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...