பந்தல் முறை காய்கறி உற்பத்தி என்பது ஒரு நிலையான உற்பத்தி முறையாகும். இது சூரிய ஒளியை சிறப்பாகப் பயன்படுத்தவும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் அடுக்குமுறைப் பயிர் சாகுபடி முறையை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த முறையைப் பின்பற்றியதன் மூலம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 10000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானப் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளனர்.
இந்திய விவசாயிகளில் பெரும்பான்மையானோர் சிறிய மற்றும் துண்டு துண்டான நிலங்களையே வைத்துள்ளனர். இது விவசாயத்தின் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகாிப்பதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. குறு விவசாயிகளின் வருடாந்திர ஆய்வின்படி, இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகள், இந்தியாவில் உள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவீதமாக உள்ளனர். ஆனால் அவர்கள் மொத்த பயிர் பரப்பில் வெறும் 47 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளனர். (10 வது விவசாய கணக்கெடுப்பு). பாரம்பாிய உணவுப் பயிர்களை வளர்க்கும் சிறு நில உரிமையாளர்கள் உண்மையில் மிகக் குறைவான அல்லது நஷ்டமான வருமானத்தையே பெறுகின்றனர். ஒரு வாய்ப்பு கிடைத்தால், பல விவசாயிகள் வேறு தொழிலுக்குச் செல்லவே விரும்புகின்றனர். (விவசாயக் கடன் குறித்த ராதாகிருஷ்ணன் குழு அறிக்கை). குறைந்த சாகுபடி காலம், குறைந்து வரும் பயிர் பன்முகத்தன்மை, காலமற்ற மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு, நீர் பற்றாக்குறை, மேம்படுத்தப்பட்ட பயிர் முறைகள் மற்றும் அதிக மதிப்புள்ள பணப்பயிர்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சந்தை அணுகலில் உள்ள சவால்கள் போன்றவை சிறு விவசாயிகளுக்கு பெரும்பாலும் குறைந்த வருமானத்தையே தருகின்றன. விவசாயத்தில் கிடைக்கும் இத்தகைய குறைந்த வருமானம், பொதுவாக வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பருவகால இடப்பெயர்ச்சிக்கு தள்ளப்பட வழிவகுக்கிறது.
இந்தச் சூழலில், சிறு விவசாயிகளுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் அதிக மதிப்புள்ள பயிர் சாகுபடியை மேற்கொள்வதும், ஒரு அலகு பரப்பிற்கான பயிர் வருவாயை அதிகாிப்பதும் அவசியமாகும். இதற்கு கிடைமட்ட மற்றும் செங்குத்து இடத்தையும், அதே போல் குரிய ஒளியையும் திறமையாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது. மேலும், மண் மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களும் நிலையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
தெற்கு குஜராத்தில் பயாப் நிறுவனம் பணிசெய்த பகுதியானது மலைப்பாங்கான நிலப்பரப்பை கொண்டது. இங்கு ஆண்டுக்கு சுமார் 2700 மி.மீ. மழை பெய்கிறது. இப்பகுதியின் மண் பெரும்பாலும் சத்துக்கள் மற்றும் காிமப் பொருட்கள் குறையாடுள்ள சிவப்பு செம்புறை மண் வகையை சேர்ந்தது. இங்குள்ள விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சராசாி நில அளவு ஒரு ஹெக்டேருக்கும் குறைவாகவே உள்ளது. இங்கு விவசாயம் முக்கியமாக வாழ்வாதார மட்டத்தில் மட்டுமே இருந்தது. நெல், கேழ்வரகு மற்றும் உளுந்து ஆகியவை முக்கியமான பயிர்களாகச் சாகுபடி செய்யப்பட்டன. சாகுபடி வழக்கமாகப் பருவமழை காலத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் நெல் சாகுபடி பரப்பளவு அதிகாித்து வந்தது. காரிப் பயிர் அறுவடைக்குப் பிறகு பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் பிழைப்பிற்காகப் பருவகால இடப்பெயர்ச்சியை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக, பயாப் நிறுவனம் தெற்கு குஜராத்தில் “வாடி” (தோட்டக்கலை-வனவியல்) திட்டத்தை தொடங்கியது. இத்திட்டம் முக்கியமாகப் பழ மரங்கள் மற்றும் வன மரங்களை விவசாய முறையோடு ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியது. உண்மையில், இந்த மரங்கள் விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு நிலையான மற்றும் நீண்ட கால வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இருப்பினும், இந்த மரங்கள் முழுமையான பலனைத் தருவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. மிகச் சிறிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த “வாடி” திட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பது உணரப்பட்டது. எனவே, சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நகர்ப்புற மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மலர் சாகுபடி மற்றும் காய்கறி வளர்ப்பு போன்ற பல அதிக மதிப்புள்ள பயிர்முறைகள் முன்னோடி அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல வகையான காய்கறிப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அடுக்குமுறை பந்தல் காய்கறி சாகுபடி சமூகத்தினாிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அடுக்குமுறை பந்தல் காய்கறி சாகுபடியின் சிறப்பம்சங்கள்:
• வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், அவரை, பட்டாணி மற்றும் பூசணி போன்றவை பொதுவாகப் பயிரிடப்படும் சில பயிர்களாகும்.
• இது கொடி வகை பயிர்களின் முறையான வளர்ச்சிக்கும், அடுக்குமுறை பயிர் சாகுபடிக்கும் உறுதுணையாக இருக்கிறது.
• செங்குத்து இடத்தைப் பயன்படுத்த உதவுவதால், இது சிறிய தோட்டங்கள் அல்லது குறைந்த நிலப்பரப்பிற்கு ஏற்றது.
• இலைகள் மற்றும் பழங்களுக்கு சீரான சூரிய ஒளி கிடைப்பதால், ஒளிச்சேர்க்கை திறன் மேம்படுகிறது.
• இது மேம்பட்ட மகசூல் மற்றும் பழங்களின் தரத்திற்கு வழிவகுக்கிறது.
• செடிகளைச் சுற்றி நல்ல காற்றோட்டம் இருப்பதால், ஈரப்பதம் மற்றும் நோய் அபாயம் குறைகிறது.
• சில வகை பூச்சிகளின் தொல்லையைக் குறைக்கிறது.
• பயிர்கள் எளிதில் எட்டக்கூடிய உயரத்தில் இருப்பதால், அவற்றை அறுவடை செய்வது, கத்தரிப்பது அல்லது ஆய்வு செய்வது எளிதாகிறது.
• விளைபொருட்கள் சுத்தமாக இருப்பதால் சந்தையில் சிறந்த விலை கிடைக்கிறது.
பந்தல் முறை காய்கறி உற்பத்தி முறையின் நன்மை என்னவென்றால், இது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தவும், வருமானத்தை ஈட்டவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்கவும் ஒரு நிலையான வழியை வழங்குகிறது. பந்தல் முறை சூரிய ஒளியை சிறப்பாகப் பயன்படுத்துவதும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும், மற்றும் அடுக்குமுறைப் பயிர் சாகுபடியை எளிதாக்கவும் உதவுகிறது.
ஆரம்பத்தில், பந்தல் முறை காய்கறி சாகுபடி முறையானது 2005 ஆம் ஆண்டில் அம்போஷி கிராமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில விவசாயிகள் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறங்களில் குறைந்தபட்ச மேலாண்மை முறைகளுடன் காய்கறிகளைப் பயிரிட்டு வந்தனர். தொடக்கத்தில், வணிக ரீதியாகக் காய்கறி சாகுபடியை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டினர். அவர்களின் தன்னம்பிக்கையை அதிகாிக்கும் பொருட்டு, 2003 ஆம் ஆண்டில், வணிக ரீதியாகக் காய்கறி வளர்க்கும் விவசாயிகளின் பண்ணைகளுக்கும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் செயல்விளக்கப் பண்ணைகளுக்கும் பட்டறிவு பயணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்தக் களப்பயணங்களால் உந்துதல் பெற்று, குஜராத்தின் தரம்பூரில் உள்ள அவதா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அவர்களுக்கு பாகற்காய் சாகுபடியை முன்னோட்ட அடிப்படையில் மேற்கொள்ள ஆதரவு வழங்கப்பட்டது. தலா 0.2 ஹெக்டர் நிலத்தில் பந்தல் அமைக்கும் முறையை நிறுவுவதற்கு இந்த விவசாயிகளுக்கு வழி காட்டப்பட்டது. அவர்களுக்கு விதைகள் வழங்கப்பட்டு, சாகுபடி முறைகள் குறித்துப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த விவசாயிகள் முதல் பருவத்தில் பாகற்காய் பயிரிட்டனர். ஆரம்பக்கால பயிர்ச் சுழற்சியில், எதிர்பார்த்த அளவு முழுமையான உற்பத்தியை எட்ட முடியாவிட்டாலும், சுமார் ரூ. 35000 வரை ஓரளவிற்கு நல்ல வருமானத்தை ஈட்ட முடிந்தது. இது அவர்களின் நம்பிக்கையை அதிகாித்தது. அம்போஷி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்காக அவதா கிராமத்தில் உள்ள பந்தல் முறை காய்கறி சாகுபடி வயலுக்குக் களப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இரண்டு குழுக்களாக சுமார் 45 விவசாயிகள் இந்தக் களப்பயணங்களில் பங்கேற்றனர். சில விவசாயிகள், தங்களின் பாரம்பாிய பயிர்களைவிட இதில் வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டு மிகுந்த உற்சாகமடைந்தனர். அவர்கள் பந்தல் முறை காய்கறி சாகுபடியை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர். அடுத்த பருவத்தில், 2004 ஆம் ஆண்டில் 15 விவசாயிகளுடனும், அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் 42 விவசாயிகளுடனும் இந்தப் பந்தல் முறை சாகுபடி முன்னோட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்;த முறையை விரிவுபடுத்துவதில் ஆரம்பத்தில் சில சவால்கள் காணப்பட்டன. அவை பின்வருமாறு:
• விவசாயிகளிடையே பெறப்பட்ட உற்பத்தி அளவு பெருமளவு வேறுபட்டது. எனவே, சாகுபடி முறைகளைத் தரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
• உறுதியான சிமெண்ட் தூண்களைப் பயன்படுத்தி பந்தல் அமைப்பதற்கும் ஏனைய இடுபொருட்களுக்கும் ஆகும் ஆரம்பச் செலவு (சுமார் ரூ. 20000) மிக அதிகமாக இருந்ததுடன், அது சிறு விவசாயிகளால் எட்ட முடியாத நிலையில் இருந்தது. மற்ற விவசாயிகளுக்கும் இந்த மாதிரியைப் பின்பற்றுவதற்கு ஏதுவாக, இதன் செலவைக் குறைக்க வேண்டிய தேவை இருந்தது.
• பாரம்பாிய பயிர் முறைகளில் பாிந்துரைக்கப்படும்; விவசாய ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது.
• காய்கறி உற்பத்தி அதிகாித்தபோது, அதற்கேற்ற முறையான சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
மேற்கூறிய சவால்கள் பல்வேறு தரப்புப் பங்குதாரர்கள், நிபுணர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட யுக்திகள் பின்பற்றப்பட்டன.
• செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, சிமெண்ட் தூண்களுக்குப் பதிலாக மூங்கில் தூண்கள் பயன்படுத்துதல் செலவுகளைக் குறைக்க உதவியது.
• நிச்சயிக்கப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டன. இந்த நடைமுறைகளில் பந்தல் அமைப்பிற்கான பொருத்தமான அளவு, அமைப்பின் ஒவ்வொரு தூணுக்கும் இடையே இருக்க வேண்டிய இடைவெளி (5 மீட்டர்), உயரம் (தரைமட்டத்திலிருந்து 5-7அடி), பந்தல் அமைப்பைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் (மூங்கில/மரக்குச்சிகள்/சிமெண்ட் தூண்கள்/கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு குழாய்கள்) ஆகியவை அடங்கும். கொடிகள் படர்வதற்கான ஒரு ஆதரவு கட்டமைப்பை உருவாக்கவும், காற்றிற்கு எதிராக பந்தல் நிலையாக இருப்பதை உறுதி செய்யவும் பிளாஸ்டிக் பூசப்பட்ட எக்கு கம்பிகள், நைலான் கயிறுகள், ஜி.ஐ கம்பிகள் அல்லது பிளாஸ்டிக் வலைகள் பயன்படுத்தப்பட்டன. நடைமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள பயிர் சார்ந்த முறைகளில் 25-30 நாட்கள் வயதுடைய நாற்றுகளைப் பயன்படுத்துதல், பாகற்காய்க்குச் சாியான செடிக்குச் செடி இடைவெளியைபப் (120 செ. மீ. க்கு 45 செ.மீ) பராமாித்தல் ஆகியவை அடங்கும். பின்பற்றப்பட்ட இதர முறைகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை மற்றும் சாியான முதிர்ச்சி நிலையில் அறுவடை செய்தல் ஆகியவை அடங்கும்.
• வேளாண் வேதிப்பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு, வழக்கமான பயிர் சாகுபடி முறைகளுடன் பல்வேறு காிம மற்றும் இயற்கை விவசாய முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. பண்ணைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது, உரம் தயாரித்தல் மற்றும் அதன் பயன்பாடு, அத்துடன் உயிர் பூச்சிக்கொல்லிகள் உட்பட பாதுகாப்பான பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது வெளியிலிருந்து வாங்கப்படும் இடுபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தது, உரம் தயாரிப்பதற்கான உயிரிப் பொருட்களின் முக்கிய ஆதாரங்களாக பண்ணைக் கழிவுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சேகாிக்கப்பட்ட வனக் சருகுகள் பயன்படுத்தப்படுகிறது.
• பந்தல் அமைப்பை நிறுவுவதற்கான செலவுகளைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு மாற்றங்கள் ஆராயப்பட்டன. முந்தைய முன்னோடித் திட்டத்தின்போது, பந்தல் அமைப்பை நிறுவுவதற்கு சிமெண்ட் தூண்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அந்த அமைப்பிற்கான செலவில் கணிசமான பங்கை, அதாவது கிட்டத்தட்ட 50 சதவீத செலவை ஏற்படுத்தியது. சிமெண்ட் தூண்களுக்குப் பதிலாக மூங்கில் கழிவுகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், மூங்கில் கழிவுகள் ஈரப்பதத்தை உறிஞ்சுவதையும், மண்ணுக்கு நெருக்கமான பகுதியில் அழுகுவதையும் காண முடிந்தது. பின்னர் இந்தத் தூண்கள் நடும் முன் அவற்றின் அடிப்பகுதியில் பதப்படுத்தப்பட்டன. இது மூங்கில் கழிகளின் ஆயட்காலத்தை மேம்படுத்த உதவியது. பயன்படுத்த வேண்டிய கம்பிகளின் தரமும் இறுதி செய்யப்பட்டது. இந்த மாற்றுகள் பந்தல் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட செலவைக் குறைக்க உதவின.
பந்தல் முறையிலான காய்கறி சாகுபடியைப் பிரபலப்படுத்துதல்:
• பல விவசாயிகள் இந்தச் செயல்பாட்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக பயாப் நிறுவனம் ஒரு பகுதி நிதி உதவியைத் திரட்டியது. நலிவடைந்த மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு இந்த ஆதரவு வழங்கப்பட்டது. ஆரம்பக்கட்ட உதவிக்குப் பிறகு, அவர்களே அந்தச் செயல்பாடுகளைத் தாங்களாகவே தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
• பந்தல் முறையிலான காய்கறி சாகுபடியைப் பின்பற்ற ஆர்வமுள்ள பிற விவசாயிகள், பொதுவாக அருகிலுள்ள விவசாயிகளுடன் இணைந்து ஜோடிகளாக அல்லது சிறு குழுக்களாகத் திரட்டப்பட்டனர். இந்த விவசாயிகள்/விவசாயக் குழுக்கள், குழுவாகப் பந்தல் விவசாயத்தைத் தொடங்குவதற்குத் தேவையான முதலீட்டைத் தங்களின் பங்களிப்புகள் மூலம் திரட்டினர். சில பயிர்ச் சுழற்சிகளுக்குப் பிறகு அவர்கள் போதுமான சேமிப்பை உருவாக்கியதால், சுயாதீனமாக காய்கறிகளை சாகுபடி செய்யத் தொடங்கினர்.
சவால்களை முறியடித்தல்:
ஆரம்பத்தில், காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், விளைபொருட்களை உள்ளூர் பகுதியில் விற்பனை செய்வது கடினமாக இருக்கவில்லை. இருப்பினும், காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகாித்தவுடன், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதி செய்ய வெளிச்சந்தைகளை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சந்தை இணைப்புகள் அவசியமாயின. காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட பெரும்பாலான விவசாயிகளஇ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கூட்டுறவு சங்கங்கள் முதன்மையாக அவர்களின் “வாடி” பகுதிகளில் உற்பத்தியாகும் மாம்பழம் மற்றும் முந்திரி போன்ற பழங்களைத் திரட்டுவதிலும் மற்றும் பதப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தன. இந்தக் கூட்டுறவு சங்கங்கள் காய்கறி பயிர்கள் மற்றும் இதர பண்ணை விளைபொருட்களின் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதில் ஈடுபட்டன. மேலும், அவை உரங்கள், விதைகள் போன்றவற்றை வழங்குவதை அறிமுகப்படுத்தின. இதன் மூலம் நல்ல தரமான இடுபொருட்கள் நியாயமான விலையில் சாியான நேரத்தில் கிடைப்பதையும் அணுகுவதையும் உறுதி செய்தன.
விவசாயிகள் எதிர்கொண்ட மற்றொரு சவால், விளைபொருட்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வெளிச்சந்தைகளுக்குக் கொண்டு செல்வதாகும். இது சிறு குறு விவசாயிகளுக்கு நிதி ரீதியாக கடினமாக இருந்ததுடன், அதிக உழைப்பையும் கோருவதாக இருந்தது. இந்தச் சவால்களைக் களைவதற்காகக் கூட்டுறவு சங்கங்கள் வியாபாரிகளின் சந்திப்புகளையும் நடத்தின. விளைபொருட்களின் அளவு அதிகாித்தவுடன், வியாபாரிகளே பண்ணைகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தனர். இதன் மூலம் விவசாயிகள் பண்ணை சார்ந்த பணிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிந்தது.
விரிவாக்கம்:
சிறிய நிலப்பரப்பில் இருந்து கிடைத்த லாபகரமான வருவாய் காரணமாக, மிக விரைவில் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளால் பந்தல் முறையிலான காய்கறி சாகுபடி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உறுதியான பயிர்கள் மற்றும் ரகங்களுக்கு முக்கியத்துவம் அளித்த, சாகுபடி செய்யப்படும் காய்கறி வகைகளில் பன்முகத்தன்மை அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் தங்களின் சிறிய நிலப்பகுதிகளில் இருந்து பலதரப்பட்ட பயிர்களை அறுவடை செய்யும் வகையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வனத் தாவரங்கள் உள்ளடக்கிய அடுக்குமுறை பயிர்ச் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. விளக்கு பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சிகளைக் கண்காணிக்கும் முறை அறிமுகமானது. பூச்சிகளைத் தடுப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் பாதுகாப்பான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிலைத்ததன்மையை ஊக்குவிப்பதற்காகக் காிமப் பொருட்களை மறுசுழற்சி செய்தல், மண் மேம்பாடு மற்றும் ஈரப்பதப் பாதுகாப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டன.
இந்த அணுகுமுறை 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பயாப் நிறுவனத்தின் முன்முயற்சிகளின் மூலம் 2024-25 ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, தெலங்கானா, ஜார்க்கண்;ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 11700 விவசாயிகளால் பந்தல் முறை காய்கறி சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. மற்ற புவியியல் பகுதிகளில் உள்ள உள்ளூர் நிலைமைகள் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப பந்தல் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையைப் பின்பற்றும் விவசாயிகள் குறிப்பிடத்தக்க பண்ணை வருவாயையும் (பெட்டி 1, பக்கம் 14ஐப் பார்க்கவும்), பன்முகத்தன்மை கொண்ட மற்றும் செறிவான ஊட்டச்சத்து ஆதாரங்களையும் பெற்றுள்ளனர். எனவே, சிறு குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் களைவதற்குப் பந்தல் முறையிலான காய்கறி சாகுபடி ஒரு முக்கியமான உத்தியாகும்.
பெட்டிச்செய்தி:
தாக்கம்:
பந்தல் முறை காய்கறி சாகுபடியின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக, 2024-ஆம் ஆண்டில் 15 கிராமங்களைச் சேர்ந்த (குண்டா, தாம்னி, சந்த்வேகன், மோபடா, நிலோசி, போர்படா, கப்ரடா, வெரிபாவடா, மணி, அவ்தா, ஹெட்ரி, மாண்ட்வா,தம்மச்சாடி, வெரிபாவடா மற்றும் சஜ்னிபார்தா) 50 விவசாயிகளிடம் ஒரு மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள் பின்வருமாறு:
• விவசாயிகள் தங்கள் பண்ணை வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை உணர்ந்துள்ளனர். தன்னம்பிக்கை அதிகாித்ததன் விளைவாக, பந்தல் முறை மற்றும் இதர காய்கறிப் பயிர்களின் கீழ் உள்ள சாகுபடி பரப்பை அவர்கள் அதிகாித்துள்ளனா;. 2022-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.25000 ஆக இருந்த அடிப்படை பண்ணை வருமானம், தற்போது ஆண்டுக்கு ரூ. 80000 முதல் ரூ. 3.5 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
• பயிர்களின் பன்முகத்தன்மை அவர்களின் மீண்டு வரும் திறனை மேம்படுத்தியுள்ளது.
• வீட்டு உபயோகத்திற்காக காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பது அதிகாித்துள்ளது. இது சிறந்த ஊட்டச்சத்தைப் பெற வழிவகுத்துள்ளது.
• அதிகாித்த தன்னம்பிக்கை அவர்களின் விவசாயம் மற்றும் சாகுபடி முறைகளை மேம்படுத்தியதுடன், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் கூட்டுச் செயல்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.
யோகேஷ் ஜி. சாவந்த், சாகர் ஜாதவ், குஞ்சன்குமார் படேல் மற்றும் மகேஷ் படேல்
Yogesh Sawant Chief Thematic Programme Executive (Farm Based Livelihoods and Climate Action) BAIF Development Research Foundation, BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar Warje Pune – 411058 E-mail: ygsawant@baif.org.in
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 3



