இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுக்க “தெற்காசியாவிற்கான தானிய அமைப்புகளின் முயற்சி” திட்டங்கள் உறுதுணையாக இருக்கின்றன.
இந்தியாவில் வேளாண் துறையானது வாழ்வாதாரத்தை வழங்கும் மிகப்பொிய துறையாகும். இதில் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் உள்ள சிறு குறு வேளாண் சமூகமே பெரும்பான்மையாக உள்ளது. நமது தட்டில் இருக்கும் உணவை விளைவிப்பதற்கு இந்த சமூகமே பொறுப்பாகும். டிசம்பர் 23 அன்று கொண்டாடப்படும் இந்தியாவின் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, கிழக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தொழில்முனைவோராக மாறிய கதையைப் இங்கு பகிர்கிறோம். இங்கு சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து, சிறந்த விவசாய முறைகளைச் செயல்படுத்தவும், நிலையான தீவிர சாகுபடி மூலம் விளைச்சலை அதிகாிக்கவும் சிறு விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
“நான் ஒரு விவசாயி. வேளாண் துறையில் எனது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்கிறார் உத்திரப் பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமிலா கிராமத்தைச் சேர்ந்த 52 வயது விவசாயி சுரேந்தர் பிரசாத். பிரசாத் தனது பண்ணையில் புதிய கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தத் துடிக்கும் புதுமையான விவசாயிகளில் ஒருவர். இவரைப் போன்ற சிறு விவசாயிகளுக்கு இது பெரும்பாலும் ஒரு பொிய ஆபத்தான முயற்சியாகும்.
2014-ஆம் ஆண்டில், மாவட்டங்களுக்கு இடையேயான ஒரு பயணக் கருத்தரங்கின்போது லாசர் மகாதேவா கிராமத்திற்குச் சென்ற பிரசாத், சி.ஐ.எம்.எம்.ஒய்.டி-யின் சிசா திட்ட ஆராய்ச்சியாளர்களை சந்தித்தார். விவசாயிகளுக்கான செயல்விளக்கத் திடல்களை நோில் பார்த்த பிறகு, இப்பகுதியில் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சிறந்த வழியாகும், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வது மற்றும் கோதுமை உற்பத்தியில் உழவில்லா முறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் செயல்திறனை பிரசாத் உணர்ந்தார்.
இந்தத் திட்டத்துடனான தொடர் தொடர்பின் மூலம், பிரசாத் இப்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் லேசர் நிலம் சமன்படுத்துதல் ஆகியவற்றுடன் மேற்கூறிய இரண்டு முறைகளையும் பின்பற்றி வருகிறார். ஒரு 35 குதிரைத்திறன் கொண்ட டிராக்டர் மற்றும் கலப்பைகள் மூலம், 2014-15 பயிர் காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் கூடுதல் கோதுமை விளைச்சலைப் பெற பிரசாத்தால் முடிந்தது. இதன் விளைவாக லாப வரம்பும் அதிகாித்தது.
இந்த முடிவுகளால் ஊக்கமடைந்த பிரசாத், 2018-ல் மாநில அரசின் இயந்திர வங்கித் திட்டத்தின் கீழ் 55 குதிரைத்திறன் கொண்ட நியூ ஹாலந்து டிராக்டர், ஹாப்பி சீடர், டிராக்டாில் பொருத்தப்பட்ட தௌிப்பான் மற்றும் இதர இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்காக வாங்கினார். இதை வாங்கியபின் தொடர்ந்து தொழில்முனைவோர் மீதான அவரது ஆர்வம் அதிகாித்தது. அன்றிலிருந்து அவர் ஒரு விவசாயியாக மட்டுமல்லாமல், உள்ளூர் சேவை வழங்கும் நபராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சிசா திட்டக்குழு வழங்கிய பயிற்சிகள் மூலம் சிறந்த தொழில்நுட்ப அறிவு, திறன்கள் மற்றும் பாதுகாப்பு விவசாயம் சார்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கை கிடைத்ததாக பிரசாத் கூறுகிறார்.
வளர்ந்து வரும் தொழில்முனைவோர்
இன்று பிரசாத் இப்பகுதியில் ஒரு முக்கியமான தொழில்முனைவோராக விளங்குகிறார். அவர் ஹாப்பி சீடர் மற்றும் நேரடி நெல் விதைப்பு முறைகளுக்கு இயந்திர வாடகை சேவைகளை வழங்குவதோடு, தனது சமூகத்தில் விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கிறார். எதிர்காலத்தில், சாியான அளவிலான இயந்திரமயமாக்கல், குறைந்த செலவில் தீவிர சாகுபடி செய்ய இப்பகுதி விவசாயிகளுக்கு உதவும். இது விளைச்சனை அதிகாிக்கவும், செலவைக் குறைக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உதவும் என்று சிசா திட்டக் குழு பாிந்துரைக்கும் பாதுகாப்பு விவசாய முறைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்த சிறந்த மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தி, பிரசாத் தனது மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான 10 ஏக்கா; நிலத்தில் கூடுதல் 1.1 டன் கோதுமையை அறுவடை செய்ய முடிந்தது. இப்போது அவரது கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இவரது பயிர் மேலாண்மை ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர்.
புதிய கருத்துக்களை விரைவாக ஏற்றுக்கொள்பவரான அவர், இப்பகுதியில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக மாறியுள்ளார். இது விவசாய சமூகத்தினாிடையே அவருக்குப் பல நண்பர்களைப் பெற்றுத் தந்ததுடன் சிசா குழு புதிய கண்டுபிடிப்புகளுடன் அதிக விவசாயிகளைச் சென்றடையவும் உதவியுள்ளது.
இந்த ஆண்டு இயந்திரமயமாக்கல் சேவைகளை வாடகைக்கு விடுவதற்கான வாய்ப்பு பெருமளவில் இருந்தது. குறிப்பாக கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக நெல் நடவு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களே இதற்குக் காரணம். இதன் விளைவாக, பிரசாத் தனது சொந்த பண்ணை மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் 90 ஏக்காில் நேரடி நெல் விதைப்பையும், 2020 இலையுதிர் காலத்தில் 105 ஏக்காில் கோதுமை விதைப்பையும் செய்ய முடிந்தது. “இயந்திரமயமாக்கல் காரணமாக நாங்கள் கோவிட்-19 பாதிப்புகளால் பொிதும் பாதிக்கப்படவில்லை, தாமதமின்றி நெல் மற்றும் கோதுமையை நடவு செய்தோம்.” என்று அவர் விளக்குகிறார். மேலும் 90 ஏக்கர் நெல் பயிர்களுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தௌிக்க டிராக்டாில் பொருத்தப்பட்ட தௌிப்பான் சேவைகளையும் பிரசாத் வழங்கினார். இந்த வெற்றிக்களைக் கருத்தில் கொண்டு, அவர் இப்போது ஆண்டு முழுவதும் விரிவாக்க சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
“எனது சொந்த சமூகத்திற்கு சேவை வழங்குபவராகப் பணியாற்றுவதில் நான் நெகிழ்ச்சி அடைகிறேன்,” என்கிறார் பிரசாத். “மற்ற விவசாயிகள் எனது உதவியை கேட்டு வரும்போது என்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.” ஒரு புதுமையான விவசாயியாக அவரது பங்களிப்பை அங்கீகாிக்கும் விதமாக, உத்திரப்பிரதேச அரசின் வேளாண்மைத் துறை அவருக்கு 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் விருதுகளை வழங்கி கௌரவித்தது. தனது வெற்றிக்கு சிசாவின் தலையீடுகளும், ஆதரவுமே காரணம் என்று கூறும் அவர், சிசா ஒரு வழிகாட்டியாகச் செயல்பட்டு, தனது கருத்துக்களைத் தனது சொந்த நலனுக்கும், தன்னைச் சுற்றியுள்ள பொிய விவசாய சமூகத்தின் நலனுக்கும் பயன்படுத்துமாறு தன்னை ஊக்குவித்ததாக நம்புகிறார்.
நிமா சோடன் மற்றும் அஜய் கே. புந்திர்
Note: This article was originally published at https://www.cimmyt.org/news/an-aspiration-for entrepreneurship
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 4



