திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை ஊக்குவிப்பது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குடும்ப ஊட்டச்சத்திற்கும், சுழற்சி பொருளாதார வலுப்படுத்துவதற்கும், மேலும் நிலையான மற்றும் சமமான உணவு முறைக்கு பங்களிப்பதற்கும் வெகுவாக உதவும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 500 நீர்நிலைகளில் பழங்குடியின சமூகங்களுடன் இணைந்து தனது முன்முயற்சியைத் செயல்படுத்தியதன் மூலம் “வாசன்” நிறுவனம் இந்த சாத்தியத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
சிறு அளவிலான மீன் வளர்ப்பு, குறிப்பாக மானாவாரி மற்றும் பழங்குடியினப் பகுதிகளில், நிலையான வளர்ச்சிக்கு மிகப்பொிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. அதிக மழைப்பொழிவு கொண்ட பழங்குடியின பகுதிகளில் பரவிக்கிடக்;கும் ஏராளமான சிறிய நீர்நிலைகள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான சிறு அளவிலான மீன் வளர்ப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அவற்றின் முழுப்பயனும் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது.
தற்போதைய அரசாங்கத் திட்டங்களும், மீன் வளர்ப்பு ஆதரவு அமைப்;புகளும் பெரும்பாலும் பொிய நீர்நிலைகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. இவை தீவிர மீன் வளர்ப்பு முறைகளை ஊக்குவிக்கின்றனவே தவிர, 0.10 முதல் 2.00 ஏக்கர் வரையிலான சிறிய குளங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பெரும்பாலும் புறக்கணிக்கின்றன. சிறு அளவிலான மீன் வளர்ப்பு முறைகளுக்குப் புத்துயிர் அளிப்பதும், அதற்கான பொருத்தமான ஆதரவு அமைப்புகளை (மீன் குஞ்சுகள், மீன்பிடி உபகரணங்கள், மீன் தீவனம்; மற்றும் தொழில்நுட்ப அறிவு போன்றவை) உருவாக்குவதும் சவாலானது என்றாலும், இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.
வாசன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஒரு நிலப்பரப்பில் கிடைக்கக்கூடிய அனைத்து நீர்நிலைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் “நிலவடிவமைப்புகளின் வேளாண் உயிர்ச்சூழல் தீவிரப்படுத்துதல்” எனும் சமூகம் சார்ந்த ஒரு முன்முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது. உள்ளூர் மீன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், ஊட்டச்சத்து செறிவை அதிகாிப்பதையும், சுழற்சி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், மேலும் நிலையான மற்றும் சமமான உணவு முறைக்கு பங்களிப்பதையும் இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆந்;திரப்பிரதேசத்தின் ஏ.எஸ்.ஆர் மற்றும் மன்யம் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த அணுகுமுறை, அவர்களை மீன் வளர்ப்பை மேற்கொள்ளவும், வருமானத்தை அதிகாிக்கவும் மற்றும் சத்தான உணவுகளைப் பெறவும் ஊக்குவித்துள்ளது. இந்தத் திட்டம் ஆந்திரப்பிரதேசத்தின் ஏ.எஸ். ஆர் மற்றும் மன்யம் மாவட்டங்களில் உள்ள 224 கிராமங்களில் பரவியுள்ள 500 நீர் நிலைகளில் செயல்படுத்தப்பட்டது.
நீர்நிலைகளைச் சூழலியல் ரீதியாகத் தீவிரப்படுத்துவதற்கான அணுகுமுறை
பாரம்பாியமாக, பழங்குடியின விவசாயிகள் மீன்வளத்துறையின் குறைந்த அளவிலான ஆதரவுடன் சிறிய நீர்நிலைககளைப் பயன்படுத்தி வந்தனர். மீன் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள், தரமான மீன்குஞ்சுகள் சாியான நேரத்தில் கிடைக்காதது, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டல் இல்லாமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவு இல்லாதது போன்ற ஏராளமான சவால்களை எதிர்கொண்டனர். இவை அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. இதுதவிர, அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் மானிய விலை மீன் குஞ்சுகளை மட்டுமே விவசாயிகள் சார்ந்திருப்பது மற்றொரு சவாலாக உள்ளது.
இந்த முன்முயற்சி முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது அரக்கு மற்றும் சீதம்பேட்டை மண்டலங்களில் உள்ள 46 குளங்கள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் வெற்றியைக் கருத்தில் கொண்டு, மீன்வளத்துறை 2018 ஆம் ஆண்டில் 199 குளங்களுக்கு மீன் குஞ்சுகள் வழங்குவதற்கான ஆதரவை விரிவுபடுத்தியது. நீண்ட காலத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, வாசன் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப முகமையாகச் செயல்பட்டு, நேரடியாகவும், நபார்டு மற்றும் மாநிலத் துறைகளுடனான கூட்டு முயற்சிகள் மூலமாகவும், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள 434 பண்ணைக் குளங்களுக்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் உதவிகளை வழங்கியது.
இந்த முன்முயற்சி பின்வரும் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தியது:
1. வரைபடமாக்கல், வகைப்படுத்துதல் மற்றும் திட்டமிடல் செயல்முறைகள்: முதல் கட்டமாக அந்த நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்த ஒரு பட்டியலைத் தயாரிப்பதே முதன்மையான பணியாகும். இதற்காக வாசன் நிறுவனம் இ-பி.ஆர்.ஏ என்னும் உக்தியை உருவாக்கியது. நிலப்பரப்பின் வளங்கள் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டு, கூகுள் எர்த் வரைபடத்தின் பொிய அளவிலான அச்சுப்பிரதி சமூகங்களின் பயன்பாட்டிற்காகத் தயார் செய்யப்பட்;டது. இதில் தற்போதுள்ள நீர்நிலைகள், அவற்றின் தன்மைகள் மற்றும் தனியார் மற்றும் பொது நிலங்களில் புதிய குளங்கள் தோண்டுவதற்கு ஏதுவான இடங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
2. நடைமுறைத் தொகுப்புகளை உருவாக்குதல்: இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சிறியவை. மேலும் பெரும்பாலும் 6 முதல் 8 மாதங்கள் வரை மட்டுமே நீர் இருப்பு கொண்ட பருவகால நீர்நிலைகளாகும். எனவே, உள்ளூர் உள்ளீடுகளைக் கொண்டு, ரசாயனமற்ற/இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பதற்கும், மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ற நடைமுறைத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
பழங்குடியின மானாவாரி மீன் வளர்ப்பில் நோய் பாதிப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குளத்தில் மிதவை உயிரினங்களின் உற்பத்தியை அதிகாிக்கவும், இயற்கையான உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தவிடு, கால்நடை மற்றும் கோழி எரு மற்றும் ஜீவாமிர்தம் ஆகியவை உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை மண்ணின் ஆரோக்கியத்தையும் நீரின் தரத்தையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உற்பத்திச் செலவைக் குறைக்கும் அதே வேளையில் இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கின்றன. இந்த நிலப்பரப்பு பூச்சிக்கொல்லிகள் மற்றும் இராசயனங்களின் பயன்பாடு இல்லாத ஒன்றாக இருப்பதால், சுற்றியுள்ள நீர்நிலைகளிலிருந்து நோய் பாதிப்பு இல்லாத மீன்களை அறுவடை செய்ய முடிகிறது. இது கிராமப்புற மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கு உதவுவதோடு, சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதுகாக்கிறது.
3. தீவிர திறன் மேம்பாட்டு ஆதரவிற்காக மீன்வள வளஆதார நபர்களை உருவாக்குதல்:
ஒவ்வொரு நிலப்பரப்பும் 30 முதல் 50 நீர்நிலைகளைக் கொண்ட தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது மீன்வள ஆதார நபர்களின் சேவைப் பகுதியாக அமைகிறது. தங்கள் தொகுப்பில் உள்ள மீன் விவசாயிகளுக்குப் பருவம் முழுவதும் ஆதரவை வழங்கக்கூடிய தகுதியான நபர்கள் பங்கேற்பாளர்களிலிருந்து அடையாளம் காணப்படுகிறார்கள். பயிற்சிகளையும் நுட்பங்களையும் விளக்கும்; வகையில் விளக்கப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கையேடுகள் போன்ற தகவல் தொடா;பு பொருட்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பணிகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கும் வகையில் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த வள ஆதார நபா;களுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில், மீன் குஞ்சுகள் விநியோகம் மற்றும் அறுவடை செயல்முறைகளில் கவனம் செலுத்தி, மேம்பட்ட மீன் வளர்ப்பு முறைகள் குறித்து 30 வளஆதார நபர்களுக்கு “வாசன்” பயிற்சி அளித்தது. தலா மூன்று நாட்கள் கொண்ட இரண்டு தொகுதிகள் அடங்கிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தொகுதியில், மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு முந்தைய தயாரிப்புகள், குஞ்சுகளை இருப்பு வைத்தல் மற்றும் குள மேலாண்மை போன்ற தலைப்புகள் இடம்பெற்றன. இரண்டாவது தொகுதியில், தீவன மேலாண்மை, சோதனை வலைவீச்சு, மீன் உற்பத்தி, குளக்கரைகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்வள மேலாண்மையின் பிற முக்கிய அம்சங்கள் குறித்த தலைப்புகள் இடம்பெற்றன.
2024 ஆம் ஆண்டில், மீன்வள வள ஆதார நபர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் பயனுள்ள ஆதரவை மீன் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான திறன்கள் அளிக்கப்பட்டன. இந்த வள ஆதார நபா;கள் தங்களுக்கு ஏற்கனவே மீன்பிடி சமூகங்களுடன் உள்ள தொடர்புகளை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள் தங்கள் தொகுப்பு அளவில் மீன் விவசாயிகளுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்தினர். இதில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 6 மணி நேர விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் சிறந்த மீன் வளர்ப்பு முறைகள், மீன் தீவனம் தயாரித்தல் மற்றும் தீவன ஆலை செயல்பாடுகள், மாதிரி எடுத்தல் மற்றும் அறுவடை முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றன. இத்தகைய பயிற்சித் திட்டங்கள் மீன் விவசாயிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு, நிலையான மற்றும் அதிக மகசூல் தரும் மீன் வளர்ப்பு முறைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்;ளன.
மீன் விவசாயிகளின் திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், பின்வரும் செயல்பாடுகளுக்கும் மீன்வள ஆதார நபர்கள் பொறுப்பாவார்கள்:
1. குளங்களை அடையாளம் காணுதல் மற்றும் வரைபடமாக்கல் (சாத்தியமுள்ள நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றைப் புவிசார் குறியீடு செய்தல).
2. மீன் விவசாயிகளைக் கண்டறிதல்: மீன் விவசாயிகள் மற்றும் அவர்களின் நீர் நிலைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான மீன் குஞ்சுகளின் தேவையைப் பதிவு செய்தல்.
3. விநியோகம் மற்றும் இருப்பு வைத்தலுக்கான ஆதரவு: தரமான மீன் குஞ்சுகளை (சிறிய குஞ்சுகள்/ஓராண்டு குஞ்சுகள்) விநியோகித்தல், பராமாித்தல் மற்றும் அவற்றை நீர் நிலைகளில் இருப்பு வைப்பதற்கானஉதவிகள் செய்தல்.
4. குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை வலைவீச்சு நடத்துதல் மற்றும் ஒவ்வொரு மீன் விவசாயிக்கும் வழங்கப்பட்ட மீன் அட்டையை முறையாகப் பராமாிக்க வழிகாட்டுதல்.
5. மானாவாரி குளங்களில் இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேற்கொள்வதை விளக்கும் வகையில் கள செயல்விளக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
4. தரவுத்தளங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் மீன் குஞ்சு தேவை மதிப்பீடு: மதிப்பீடு பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஓ.டீ.கே மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுப்பிலும், தலா 5-6 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுமார்; 30-50 நீர்நிலைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. நீர்நிலைகள் பருவகால மற்றும் வற்றாத நீர்நிலைகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மீன் குஞ்சுகளின் தேவை மதிப்பிடப்படுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் இணையச் சேவையகத்தில் தொகுக்கப்படுகின்றன. இவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மையக் குழுவானது மீன் இனங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மொத்த மீன் குஞ்சுத் தேவையைத் தீர்மானிக்கிறது. அடிப்படை ஆய்வின் போது நீர்நிலைகளை வரைபடமாக்கவும், காட்சிப்படுத்தவும் க்யு.ஜி.ஐ.எஸ் பயன்படுத்தப்படுகிறது. மாதாந்திரத் தரவுகள் மூன்று கட்டங்களாகச் சேகாிக்கப்படுகின்றன. 1. தீவனம் மற்றும் எரு இடுதல், 2. வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் 3. அறுவடைத் தரவுகள். பிப்ரவரி 2025 வரை, 2051 தரவுப் பதிவுகள் இணையச் சேவையகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன.
5. மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் விநியோகம்: மானிய விலையிலான குஞ்சுகளுக்காகக் காத்திருக்காமல், தரமான குஞ்சுகளைச் சாியான நேரத்தில் வாங்குவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தனிப்பட்ட விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், காலப்போக்கில் செயல்பாடுகளை நீடித்த நிலையானதாக மாற்றவும், விரிவுபடுத்தவும் ஆதரவு சேவைகளின் தேவைஇருந்தது. இந்தச் சேவைகளை ஒரு கூட்டமைப்பு மூலம் முறைப்படுத்த இரண்டு மீன் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் சுமார் 300-400 பங்குதாரர்கள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. விவசாயிகள் தங்கள் தேவைகளை மீன் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம், வள ஆதார நபா;களின் உதவியுடன் பூர்த்தி செய்கின்றனர். நீர்நிலையின் தன்மைக்கு ஏற்ப மீன் இனங்களின் பட்டியல் தரவுத்தளத்தை மையமாகத் தயாரிக்கப்படுகிறது. உள்ளூர் விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விற்பனையாளர் குறிப்பிட்ட இடங்களிலும், போக்குவரத்துப் பாதைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மையங்களிலும் மீன் குஞ்சுகளை வழங்க வேண்டும். விவசாயிகள் அங்கிருந்து குஞ்சுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். தரமான குஞ்சுகளை உறுதி செய்வதிலும், அவை புதிய சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் செயல்பாட்டிலும் வள ஆதார நபா;கள் உதவுகின்றனர். இதற்கான தொகையை விவசாயிகளிடமிருந்து பெற்று மீன் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் வங்கிக் கணக்கில் அவர்கள் செலுத்துகின்றனர்.
6. வழக்கமான கண்காணிப்பு மற்றும் உபகரணங்களை எளிதில் பெறுதல்: ஆறு வாடகை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சேவை வழங்குநரால் நிர்வகிக்கப்பட்டாலும், சமூக அமைப்பிற்கே சொந்தமானவை. இது சமூகத்தின் தலைமையிலான மேலாண்மையை உறுதி செய்கிறது. பல்வேறு அளவு கொண்ட மீன்பிடி வலைகள் (வீச்சு வலை, இழு வலை,ஹாப்பா வலை), எடையிடும் கருவிகள், மிதவை உயிரின வலைகள், பி.ஹெச் மீட்டர்கள் போன்றவை இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வள ஆதார நபர்களும் விவசாயிகளும் சமூகம் நிர்ணயித்த குறைந்த வாடகையில் இந்த உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களின் ஆண்டு பாிவர்த்தனை ரூ. 60000 முதல் ரூ. 80000 வரை உள்ளது.
வள ஆதார நபர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை வலைவீச்சு நடத்தி வளர்ச்சி விவரங்கள், தீவனம், இறப்பு விகிதம் போன்ற தரவுகளைச் சேகாிக்கின்றனர். குளத்தின் நீரின் தரம் மொபைல் செயலியில் பதிவு செய்யப்படுகிறது. விவசாயிகள் தரவு அட்டைகளைப் பயன்படுத்தித் தகவல்களைத் தாங்களே பதிவு செய்கின்றனர். இந்த அட்டைகள் வளர்ச்சி கண்காணிப்பிற்கும், கள ஆய்வுகளின்போது ஒட்டுமொத்தப் பார்வையை முன்வைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
7. மீன் தீவனத் தொழில்கள் மூலம் சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குதல்:
மீன் வளர்ப்பில், மொத்தச் செலவில் 60-70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. உள்மாவட்டப் பகுதியில் உள்ள மீன் விவசாயிகள், வெளிச்சந்தையில் இருந்து மீன் தீவனங்களைக் கொண்டு வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் சந்தைத் தீவனங்களின் விலையும் மிக அதிகம். புரதம் அதிகமுள்ள வழக்கமான தீவனங்கள் தாவர மற்றும் விலங்கு மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் விலை ஒரு கிலோ ரூ. 60-80 வரை ஆகிறது. அதிக விலை என்பது ஒருபுறமிருக்க, இத்தகைய வழக்கமான தீவனங்களால் உருவாகும் மீன் கழிவுகளில் கார்பன் மற்றும் ஆற்றல் குறைவாக இருப்பதால், அவை எளிதில் மட்குவதில்லை. இது நீரின் தரத்தைக் குறைப்பதோடு மீன்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
மீன் தீவனம் பெறுவதில் உள்ள இச்சவால்களை உணர்ந்து, உள்ளூரிலேயே கிடைக்கக்கூடிய விலை குறைந்த பொருட்களைக் கொண்டு மீன் தீவனக் கலவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறைந்த உற்பத்திச் செலவில் ஊட்டச்சத்து சமநிலை கொண்ட தீவனத்தை உறுதி செய்கிறது. காய்கறிகள், சிறுதானியங்கள், தவிடு, நறுக்கப்பட்ட முருங்கை அல்லது வாழை இலைகள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் புண்ணாக்கு ஆகியவற்றைக் கொண்டு இந்த உள்ளூர் தீவனம் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ. 35-45 மட்டுமே. மீன்களுக்கான ஊட்டச்சத்து தேவைகள், தீவனம் அளிக்கும் முறைகள் மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து நிபுணர்கள் மூலம் மீன் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுமார் ஏழு சிறு அளவிலான மீன் தீவன ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில தொகுப்புகளில் இந்தத் தீவன ஆலைகள் தனிநபர்களாலோ அல்லது சுயஉதவிக் குழுக்களாலோ நடத்தப்படுகின்றன. அரைக்கும் இயந்திரம் மற்றும் உருண்டையாக்கும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்ட இந்தச் சிறு அளவிலான தீவன ஆலை, பெண்களுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மூலப்பொருட்களைச் சேகாித்தல், உற்பத்தி செய்தல் மற்றும் மீன் தீவனத்தை விற்பனை செய்தல் ஆகியவற்றில் பெண் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதோடு, அவர்களை இல்லத்தரசிகளிலிருந்து தொழில்முனைவோராக மாற்றுகிறது. ஒரு சில மீன்வள வளஆதார நபர்கள், மீன் தீவன ஆலை தொழில்முனைவோராகப் பயிற்சி பெற்றுள்ளனர். மீன் விவசாயிகள் இந்தத் தொழில்முனைவோருடன் இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் வழங்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, இந்தத் தொழில்முனைவோர் மீன் தீவனத்தை உருண்டைகளாக மாற்றிக் கொடுக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் உருண்டை தீவனங்கள் வெயிலில் உலர்த்தப்பட்டு, முறையான சேமிப்பு வசதியுடன் கூடிய உலர்ந்த இடங்களில் வைக்கப்படுகின்றன.
அதிகப்படியான நீர்நிலைகளின் எண்ணிக்கை, மீன் தீவனத்திற்கான தேவையை உள்ளூரிலேயே உருவாக்குகின்றன. இந்தத் தொழில் நிறுவனங்கள் தேவையான மூலப்பொருட்களை உள்ளூரிலேயே உருவாக்குகின்றன. இந்தத் தொழில் நிறுவனங்கள் தேவையான மூலப்பொருட்களை உள்ளூரிலேயே கொள்முதல் செய்வதன் மூலம் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம் ஊட்டச்சத்து மற்றும் வருமான ஓட்டத்தில் ஒரு சுழற்சித்தன்மையை உருவாக்குகின்றன.
8. மீன் அறுவடை கள நாட்கள்
திட்டத்தின் முடிவுகளை வெளிப்படுத்தவும், மற்றவர்களை மீன் வளர்ப்பில் ஈடுபட ஊக்குவிக்கவும் மீன் அறுவடைத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அழைக்கப்படுகின்றனர். அங்கு மீன் அறுவடை செய்து காட்டப்படுவதோடு, விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இது சிறிய குட்டை மீன் வளர்ப்பில் அதிகப்படியான பொது முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி ஆதரவளிக்கும் என்று நம்பப்படுகிறது.
மீன் அறுவடைத் திருவிழா, அறுவடை காலத்தில் (பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்) ஒரு பண்ணைக் குளத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை வீதம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அறுவடை காலத்திலும் இது போன்ற மூன்று முதல் நான்கு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நிகழ்விலும் 50 முதல் 100 வரையிலான விவசாயிகளும் பல்வேறு பங்குகுதாரர்களும் கலந்து கொள்கின்றனர்.
முடிவுரை:
இந்த ஒட்டுமொத்த முன்முயற்சியிலும், மீன்வள வளஆதார நபர்களுக்கு ஆதரவளிக்கவும், பயிற்சி நிகழ்வுகளுக்காகவும் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பொதுவான வளமாக ஒழுங்கமைப்பதற்காகவும் மட்டுமே முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை பெற்ற வெற்றியால், தற்போது ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7017 பழங்குடியின விவசாயிகள் பயன்பெறுவதோடு, 3367 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பை முழுமையாகத் தாமாகவே இயங்கும் ஒன்றாக மாற்றுவதற்காக, மீன் அறுவடையின் போது வள ஆதார நபர்களின் சேவைகளுக்குப் பணமாகவோ அல்லது பொருளாகவோ ஊதியம் வழங்கவும் மற்றும் சந்தா கட்டணம் செலுத்தவும் விவசாயிகளை ஊக்குவித்துச் சம்மதிக்க வைப்பதே அடுத்தகட்ட முயற்சியாக இருக்கும். இருப்பினும், இந்தச் செயல்முறைகளை எளிதாக்குவதற்கும், தொழில்நுட்ப ரீதியான தொடர் ஆதரவிற்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கு உதவி தேவைப்படுகிறது.
பெட்டிச் செய்தி:
உயிர்ச்சூழலுக்கு உகந்த பண்ணைக்குட்டைகள்: கில்லோ காசியின் கதை
ஆந்திரப்பிரதேசத்தின் ஏ.எஸ்.ஆர் மாவட்டம், தும்பிரிகுடா மண்டலம், சோவ்வா கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொட்டகுடா கிராமத்தில் வசிப்பவர் கில்லோ காசி (54). இவர் கோட்டியா பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர். 2021-ஆம் ஆண்டு கிராம ஊராட்சித் திட்டமிடல் பயிற்சியின்போது, தனது பழத்தோட்ட நிலத்தின் ஒரு பகுதியை மழைநீரைச் சேமிப்பதற்கான சிறிய பண்ணைக்குட்டையாக மாற்ற அவர் விருப்பம் தொிவித்தார். அருகில் உள்ள மேட்டு நிலங்களிலிருந்து வரும் ஊற்று நீரைத் தனது பண்ணைக்குட்டைக்குத் திருப்பிவிட்டதன் மூலம், ஒரு நிலையான நீர் ஆதாரத்தை அவர் உறுதி செய்தார். 2021-ல், வாசன் அமைப்பு, திரு கில்லோவின் பண்ணைக்குட்டை உட்பட மீன் வளர்ப்பு நடவடிக்கைகளுக்குச் சாத்தியமான குட்டைகளை புவிசார் குறியீடு செய்தது. மீன் குஞ்சுகளின் தேவையை மதிப்பிடுவதற்காக விவசாயிகளுடன் நடத்தப்பட்ட திட்டமிடல் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். மீன் குஞ்சு விற்பனையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான இணைப்பை “வாசன்” அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. இத்திட்டத்தில் அவரது மனைவி சம்பா முக்கிய பங்காற்றினார். அவர் களைகளை அகற்றுவதிலும், மீன்களுக்கு தொடர்ந்து தீவனம் வழங்குவதிலும் உதவினார்.
வெறும் 10 சென்ட் பரப்பளவிலான பண்ணைக்குட்டையிலிருந்து மீன் விற்பனை மற்றும் குட்டை வரப்புகளில் வளர்க்கப்பட்ட காய்கறிகள் மூலம் மொத்தம் ரூ. 16500 வருமானம் கிடைத்தது. பண்ணைக்குட்டை நீரைப் பாய்ச்சி, கூடுதல் 20 சென்ட் நிலத்தில் பயிரிட்ட காய்கறிகள் மூலம் அவர்களுக்கு கூடுதலாக ரூ. 10000 கிடைத்தது. இதன் மூலம் இந்த நீர்சார் உயிர்ச்சூழல் அமைப்பிலிருந்து கிடைத்த மொத்த வருமானம் ரூ. 26500 ஆக உயர்ந்தது. கில்லோவின் இந்த வெற்றி பக்கத்து விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு குறித்த ஆர்வத்தைத் தூண்டியது. அவர் தனது அனுபவங்களை தாராளமாகப் பகிர்ந்து கொண்டதுடன், அந்த சமூகத்தில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்;டியாகவும் திகழ்கிறார்.
பிரியங்கா பத்ரா மற்றும் எம்.எல். சன்யாசி ராவ்
Reference: FAO. The State of World Fisheries and Aquaculture 2024. FAO Rome, 2024. Priyanka Patra Programme Officer (Fisheries), WA S S A N (Watershed Support Services and Activities Network), Hyderabad. E-mail: priyanka@wassan.org Dr. M.L Sanyasi Rao Associate Director WASSAN (Watershed Support Services and Activities Network), Hyderabad E-mail: sunny@wassan.org
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2025, வால்யூம் 27, இதழ் 1



