ஒடிசாவில் சிறுதானியங்களை புதுபிக்கும் மகளிர் குழுக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை வெல்ல அவர்களுக்கு உதவியது. ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மற்றும் மிஷன் சக்தி துறை, ஒடிசா முழுவதும் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைமையிலான சிறுதானியங்கள் சார்ந்த பண்ணை நிறுவனங்களை வெற்றிகரமாக ஊக்குவித்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, வீட்டு வருமானத்தை மேம்படுத்தி வருகிறது.
ஒடிசாவில் 62 பட்டியல் பழங்குடியினரும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய 13 பழங்குடி குழுக்களும் உள்ளனர். ஒடிசாவின் பட்டியல் பழங்குடியினர் ஒடிசாவின் மக்கள் தொகையில் 22.85 விழுக்காடு உள்ளனர். பல ஆண்டுகளாக, பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் மலைப்பகுதி மற்றும் மலைச் சாிவுகளில் வாழ்வாதார மானாவாரி விவசாயம் மூலம் பாரம்பாிய பயிர்களான சிறுதானியம், பயரு வகைகள், தானியங்கள், கிழங்குகள் மற்றும் வேர்கள் போன்றவற்றை கலப்பு முறை சாகுபடியின் கீழ் பயிரிட்டு வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். பழங்குடியின பெண்கள் தங்கள் குடும்பத்தின் வருமானத்தில் உதவிபுரியும் விதமாக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அங்கு அவர்கள் தங்கள் குடும்ப ஆண்களுக்கு விதைப்பு, களையெடுத்தல், அறுவடை செய்தல் மற்றும் விளைப்பொருட்களை பதப்படுத்துதல் போன்ற விவசாய வேலைகளில் உதவுகின்றனர்.
பாரம்பாியமாக, அதிக சத்தான சிறுதானியங்கள் ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் உணவுமுறை மற்றும் பயிர்முறையின் கணிசமான பகுதியை உருவாக்கின. சிறுதானியங்கள், காலநிலையை எதிர்க்கும் பயிர்கள். ஏனெனில் அவை தீவிர காலநிலை மாற்றங்களை தாங்கும் மற்றும் அவற்றிற்கு குறைந்த விவசாய உள்ளீடுகள் மற்றும் வளங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இது குறைவான பூச்சிகளை மட்டுமே ஈர்க்கிறது. இருப்பினும், சிறுதானியங்களை பாரம்பாியமாக பதப்படுத்துவது பழங்குடி பெண்களுக்கு உழைப்பு மிகுந்ததாகும். ஏனெனில் அவர்கள் பல மணிநேரம் வெயிலில் உலர்த்துதல், குச்சிகளால் அடித்தல், தூற்றுதல், பிரித்தல் மற்றும் சுத்தம்செய்யப்பட்ட தானியங்களை சேகாித்தல் ஆகியவற்றைச் செலவிடுகிறார்கள். கூடுதலாக, சிறுதானியங்கள் அளவு, வடிவம், மற்றும் உமி உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. எனவே சீரான செயலாக்கத்தை உறுதி செய்வது கடினமாகிறது.
அரசு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு
இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சிறுதானியங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக ஒடிசா அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் வளர்ச்சித் துறையால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமான ஒடிசா சிறுதானிய மிஷன், பெண்கள் தலைமையிலான சிறுதானிய நிறுவனங்களை ஆதாித்து வருகிறது. மிஷன் சக்தி துறையுடன் இணைந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பதப்படுத்தும் அலகுகள், சிறுதானிய சக்தி உணவகங்கள், சிறுதானிய விற்பனை நிலையம், சிறுதானிய தின்பண்ட மையம், இயற்கை இடுபொருள் மையங்கள், தனிப்பயன் பணியமா;த்தல் மையங்கள் மற்றும் சமூக அளவில் நிர்வகிக்கப்பட்ட விதை வங்கிகள் போன்ற 2000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிறுவுதல், வழிநடத்துதல், இயக்குதல் மற்றும் நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“முழுமையான மதிப்புச் சங்கிலி தலையீடுகள் மற்றும் அளவிடக்கூடிய மற்றும் புதுமையான அணுகுமுறைகளை அடையாளம் காண்பதன் காரணமாக ஒடிசா மில்லட்ஸ் மிஷன் ஒரு தனித்துவமான திட்டமாகும்” என்று ஒடிசா அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் அரபிந்த குமார் பதீ கூறுகிறார். “பெண்கள் தலைமையிலான சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்துவதன் மூலமும், முழு சிறுதானிய மதிப்புச் சங்கிலியிலும் அவர்களின் செயலில் பங்கேற்பை எளிதாக்குவதன் மூலமும் ஒடிசா மில்லட்ஸ் மிஷன் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தலைமைப் பாத்திரங்களை எடுக்க பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது” என்று முதன்மைச் செயலாளர் எடுத்துரைக்கிறார். இந்த பணி 2017 ஆம் ஆண்டில் 7 மாவட்டங்களில் 30 வட்டங்களில் தொடங்கப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டு முதல் 30 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 177 வட்டங்களுக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடன் மற்றும் சந்தை இணைப்பை வழங்குவதன் மூலம் லாபகரமான நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே மிஷன் சக்தி துறையின் நோக்கமாகும். மிஷன் சக்தியின் கீழ் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை உயர்த்துதல், அதிகமான பெண்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று கருதுகிறது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதுவரை கிட்டத்தட்ட 70 லட்சம் பெண்கள் 6 லட்சம் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள்
ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மற்றும் மிஷன் சக்தி துறைக்கு இடையிலான கூட்டாண்மை மாநிலம் முழுவதும் பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்களை நிறுவ உதவியுள்ளது. இந்த நிறுவனங்களில் 3 அடுக்கு கேழ்வரகு சுத்தம் செய்யும்-தரம் பிரிக்கும் – கல் நீக்கும் அலகுகள் (மணிக்கு 2-3 குவிண்டால் திறன் கொண்டவை) 7 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும் , 3 அடுக்கு கேழ்வரகு சுத்தம் – தரம் பிரிக்கும் – கல்நீக்கும் அலகுகள் (10-12 குவிண்டால் திறன் கொண்டவை) 14 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும், 2 அடுக்கு கேழ்வரகு சுத்தம் செய்யும் – தரம் பிரிக்கும்- கல்நீக்கும் அலகுகள், 35 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும், மாவாக்கும் அலகுகள் 975 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும், கதிரடிக்கும் அலகுகள் 738 பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையிலான அலகுகள் 59 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும், மற்றும் ஒருங்கிணைந்த சிறுதானிய சுத்தம் செய்யும் – தரம்பிரிக்கும் – கல்நீக்கும் அலகுகள் 2 பெண்கள் சுய உதவிக் குழுக்களும் கொடுக்கப்பட்டவைகளில் அடங்கும்.
சில வெற்றிக்கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
வெற்றிக்கதை 1
கோராபுட் மாவட்டம், போயிபாிகுடா தொகுதியில் உள்ள டோரகுடா கிராமத்தில் அமைந்துள்ள சபாி பெண்கள் சுயஉதவிக்குழு, பழங்குடியின பெண் விவசாயிகளின் சோர்வைக் குறைப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு கதிரடிக்கும் இயந்திரத்தைப் பெற்ற போயிபாிகுடா தொகுதியில் உள்ள 10 பெண்கள் சுயஉதவிக்குழுக்களில் ஒன்றாகும். முன்னதாக, இந்த பழங்;குடியின பெண் விவசாயிகள் முதன்மையாக கேழ்வரகு கதிரடிப்பதற்கு பாரம்பாிய முறைகளை நம்பியிருந்தனா;. இது செயலாக்க செலவுகளை அதிகாித்த ஒரு கடினமான செயல்முறையாகும். இந்தப் பெண்கள் தினமும் சுமார் 5-6 மணிநேரம் கைமுறையாக ராகி விதைகளை உலர்த்தி பிரித்தெடுப்பார்கள். இந்த செயல்முறை மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை எடுக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க செலவுகளைச் செய்யும்.
கேழ்வரகு கதிரடிக்கும் இயந்திரங்களைப் பெற்றதிலிருந்து, பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் உயர்தர கேழ்வரகை திறம்பட பதப்படுத்தினர். சபாி பெண்கள் சுயஉதவிக்குழு விதிவிலக்காக சிறப்பாகச் செயல்பட்டு பதப்படுத்தும் அலகிலிருந்து நல்ல வருமானத்தைப் பெற்றது. மற்ற பெண் விவசாயிகள் சபாி பெண்கள் சுய உதவிக்குழு நிர்வகிக்கும் ராகி கதிரடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்ட ராகியைச் செயலாக்கத்திற்கு கொண்டு வருகிறார்கள். அவர்களின் சேவைகளுக்காக குழுவிற்கு ஒரு கிலோ கேழ்வரகிற்கு ரூ. 1 செலுத்துகிறார்கள். அறுவடைக் காலத்தில் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் ரூ. 10000 வருமானம் ஈட்டுகிறது.
சபாி பெண்கள் சுயஉதவிக்குழுவின் தலைவர் சஞ்சலா மாஜ்ஹி கூறுகையில் “நாங்கள் கேழ்வரகு கதிர்அடிக்கும் இயந்திரத்தை விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் வழங்குகிறோம். கேழ்வரகு பதப்படுத்தும் போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 100 வசூலிக்கிறோம்”. பொதுவாக, கதிர்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 குவிண்டால் கேழ்வரகை கையாளுகின்றன. கதிர்களைப் பயன்படுத்தி, கதிர்கள் அள்ளுவதற்குத் தேவையான நேரம் முந்தைய 5-6 நாட்கள் தீவிர உடல் உழைப்புடன் ஒப்பிடும்போது ஒரு நாளாகக் குறைக்கப்படுகிறது. ’கேழ்வரகு கதிர்களை அள்ளுவதற்கு பாரம்பாிய நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளை அவர்களின் நேரம், செலவு மற்றும் உழைப்பைக் குறைக்க நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்.” என்று சபாி பெண்கள் சுயஉதவிக்குழுவின் செயலாளர் பாரதி தாராபுடியா கூறுகிறார். ’ராகி கதிர்கள் அள்ளும் பிரிவு விவசாயிகள் மற்றும் பெண்கள் சுயஉதவிக்குழுவின் பெண் உறுப்பினர்கள் வருமானத்தை அதிகாித்துள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது.” என்று மஜ்ஹி மேலும் கூறுகிறார்.
வெற்றிக் கதை 2
கோராபுட் மாவட்டத்தில் உள்ள மங்கடபேடா கிராமத்தைச் சேர்ந்த மா சந்தோஷி பெண்கள் சுயஉதவிக்குழு, சிறுதானியத்தை மாவுப்பொடியாக அரைக்கும் இயந்திரத்தை (3 எச்.பி, ஒற்றை கட்டம்) நிர்வகித்து வருகிறது. அந்த பெண்கள் சுய உதவிக் குழுவின் தலைவர் கௌரி குண்டா கூறுகையில், ’பொடியாக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கேழ்வரகு தானியத்தை மெல்லிய மாவாக மாற்றுவது எளிதானது. எங்களுக்கு பயிற்சி அளித்து இயந்திரத்தை வழங்கிய ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மற்றும் மிஷன் சக்திக்கு நன்றி. ’உள்ளூர் விவசாயிகள் தங்கள் கேழ்வரகை பதப்படுத்த அடிக்கடி பொடியாக்கும் அலகுக்கு வருகிறார்கள். பெண்கள் சுய உதவிக் குழு கேழ்வரகை அரைக்க ரூ. 4 வசூலிக்கிறது. பொடியாக்கும் கருவி 15-20 கிலோ கேழ்வரகை அரைக்கும். கடந்த ஆண்டு பெண்கள் சுய உதவிக் குழுவானது பொடியாக்கும் அலகு மூலம் சுமார் ரூ. 50000 சம்பாதித்தது. “நாங்கள் எங்கள் பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் வருமானத்தை சமமாக பகிர்ந்து கொள்கிறோம்.” என்று குண்டா கூறுகிறார். அதே நேரத்தில், உள்ளூரில் உள்ள அதிகமான பெண்கள் சுயஉதவிக்குழுக்களும் அவர்களுக்கும் ஒரு பொடியாக்கும் அலகு அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.” என்று கூறுகிறார்.
வெற்றிக்கதை 3
சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள குத்ரா வட்டத்தைச் சேர்ந்த மின்டே குஜூருக்கு வாழ்க்கை சவாலானதாக இருந்தது. விவசாயத்தை முதன்மை வருமான ஆதாரமாகக் கொண்டு, அவரது குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது கடினமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், மின்டே குஜூர் மற்றும் ஜோதி பெண்கள் சுய உதவிக் குழுக்களின் பிற உறுப்பினர்களுக்கும் ஒடிசா மில்லட் மிஷனில் ஒரு மாவாக்கும் இயந்திரத்தைப் பெற்றனர். பயிற்சியாளர்களிடமிருந்து பயிற்சி பெற்ற பிறகு, பத்து உறுப்பினர்களில் மூன்று பேர் இந்த இயந்திரத்தை இயக்கி, ஒரு கிலோவிற்கு ரூ. 5 வசூலித்து, மாதந்தோறும் ரூ. 7000 வருமானம் ஈட்டினர். மாவாக்கும் இயந்திரம் கேழ்வரகை மட்டுமல்லாது, பருப்பு, மஞ்சள் மற்றும் கோதுமையையும் அரைக்கக்கூடியது. இந்த முயற்சி தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறித்தது. மேலும் திறன் மேம்பாடு மற்றும் வள வழங்கல் மூலம் பெண்கள் அதிகாரமளிப்பதில் வெளிப்புற ஆதரவின் உறுதியான தாக்கத்தை நிரூபித்தது. ஒடிசா மில்லட்ஸ் மிஷன் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் கூடுதல் மாியாதையைப் பெற்றனர். கூடுதலாக, சிறந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க நிதி ஸ்திரத்தன்மையை அடைந்தனர். இது எதிர்கால சந்ததியினருக்கு மேம்பட்ட வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது.
வெற்றிக்கதை 4:
நுவபாடா பகுதியின் மேட்டு நிலங்களில் ஏராளமாக பயிரிடப்படும் பாரம்பாிய மானாவாரி பயிர்களில் சாமையும் ஒன்றாகும். பயன்படுத்தப்படும் குறுகிய கால வகை பாரம்பாிய உணவு கூடையின் ஒரு பகுதியாக இருப்பதோடு, பணப்பயிராக பரவலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கையால் சாமையின் உமியை நீக்கும் பாரம்பாிய முறையைப் பயன்படுத்தி, 1 கிலோ தானியத்தை உமி நீக்க சுமார் 2 மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது.
தொலைதூரப் பகுதிகளில் சாமை உமி நீக்குவதில் பெண்களின் சோர்வைக் குறைக்க, பங்கேற்பு இயந்திர மேம்பாட்டு அணுகுமுறை மூலம் வீட்டு அளவிலான சாமை உமி நீக்கும் இயந்திரம் உருவாக்கப்பட்டது. நுவபாடா மாவட்டத்தில் நடத்தப்பட்ட முன்னோடி முயற்சி, பெண்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை உருவாக்கியது. மாநிலம் முழுவதும் சாமை உற்பத்தி மற்றும் நுகர்வை மீட்டெடுக்க குறைந்த விலை தொழில்நுட்பத்தின் திறனை நிரூபித்தது.
ஒரு மணி நேரத்தில் சுமார் 4 கிலோ சாமையை பதப்படுத்தக்கூடிய ஒரு சாமை உமி நீக்கும் இயந்திரத்தை ஒடிசா மில்லட்ஸ் மிஷன் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. இதில் கல்லை அகற்றுதல், சலித்தல், மற்றும் இயந்திரத்தை பயன்பாடுகளுக்கு இடையில் குளிர்விக்க அனுமதித்தல் ஆகியவை அடங்கும். இந்த இயந்திரத்தை உருவாக்க தற்போது பொிய அளவில் கிடைக்கும் வழக்கமான இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இது தொழில்நுட்பத்தை ரூ. 5000க்கும் குறைவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பயன்பாட்டின் எளிமைக்காக ஏற்கனவே நன்கு வளர்ந்த அம்சங்களையும் கொண்டிருந்தது. உமி நீக்கும் இயந்திரத்தை ஒற்றை-கட்ட மின்சாரம் மூலம் இயக்க முடியும். மேலும் கூடுதல் உள்கட்டமைப்பு எதுவும் தேவையில்லை.
வெற்றிக்காரணிகள்:
ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மற்றும் மிஷன் சக்தி இடையேயான ஒத்துழைப்பின் கீழ், பல பங்களிப்பு காரணிகளால், பெண்கள் தலைமையிலான வெற்றிகரமான பண்ணை நிறுவனங்கள் செழித்து வளர்ந்துள்ளன. முதலாவதாக, பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் விரிவான திறன் மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள், கருத்துப்பட்டறைகள் மற்றும் பெறப்பட்டுள்ள வெளிப்பாடுகள் மூலம் பெண் விவசாயிகளின் திறன்களை வளர்ப்பதில் இந்த மிஷன் கவனம் செலுத்தியுள்ளது. இது சிறுதானிய சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தியுள்ளது.
இந்த மிஷனின் கீழ், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தங்கள் நிறுவனங்களை நடத்துவதற்கு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது, விவசாயத் துறையில் பெண்களின் பங்கேற்பு மற்றும் அதிகாரமளிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் மாநில அரசின் ஆதரவுக் கொள்கைகள் என இவை அனைத்தும் பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள் வளர உதவும் சூழலை உருவாக்கியுள்ளன. இந்த நிலைமைகள், பெண் விவசாயிகளின் உறுதிப்பாடு மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மையுடன் சேர்ந்து, இந்த நிறுவனங்களின் வெற்றிக்கு பங்களித்துள்ளன.
முடிவுரை
இந்த பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் தங்கள் சமூகங்களை சிறுதானியங்களை உள்ளடக்கி ஊக்குவிக்கவும், அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யவும், அதே நேரத்தில் சிறுதானிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒரு உத்வேகத்தை அளிக்கின்றன. ஒடிசா மில்லட்ஸ் மிஷன் திட்டத்தின் விரிவாக்கத்துடன், இதுபோன்ற நிறுவனங்களுக்கான தேவையும் அதிகாிக்கும். இந்த மிஷன் திட்டத்தை விரிவாக்குவதற்கு அதிகமான பெண் விவசாயிகள் மற்றும் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் சேர்க்கப்படும். இது ஒடிசாவின் பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கும். இது திட்டத்தின் அணுகல் மற்றும் தாக்கத்தை விரிவுபடுத்தும். வறுமைக்குறைப்பு மற்றும் பொிய அளவில் அதிகாரமளிப்பதில் பங்களிக்கும்.
பெண்கள் பண்ணை முதல் விநியோகம் வரை சிறுதானிய மதிப்புச் சங்கிலியை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒடிசாவில் சிறுதானியங்களின் மறுமலர்ச்சி பெண்கள் குழுக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை வெல்ல அவர்களுக்கு உதவுகிறது. ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மாதிரி பெண்கள் சுய உதவிக் குழுக்களை சிறுதானியங்கள் சார்ந்த நிறுவனங்களை அமைக்க ஆதாித்துள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாடு, வேலையின்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் ஒரு விரிவான தீர்வாக மாறும் மற்றும் விவசாயிகள் தங்கள் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகாிக்க ஊக்குவிக்கும்.
அபிஜித் மொஹந்தி, பிஸாஜா சௌத்ரி மற்றும் திரிநாத் தாராபூட்டியா
Abhijit Mohanty Programme Manager-Knowledge Building, WASSAN, Odisha. E-mail: abhijitmohanty10@yahoo.com Bhesaja Choudhury Media and Communication Coordinator, WASSAN, Odisha. E-mail : bhesaja@gmail.com Trinath Taraputia Regional Coordinator, WASSAN, Odisha. E-mail : trinath.b2793@gmail.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1



