என்.கேசவ மூர்த்தியாகிய நான், ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வருகிறேன். முப்பது வருடங்களாக நான் ஒரு தொழில்சாலையை நடத்தி வந்தேன். அதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டினேன். கூலியாட்கள் பிரச்சனை, வேலை அழுத்தம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக நான் வேளாண்மையில் அதிகம் ஈடுபட துவங்கிவிட்டேன். பார் – தொிந்துகொள் மற்றும் கற்றுக்கொள் என்ற வாசகம், மகடியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து நான் கவர்ந்தேன். ஆரோக்கியம் குறைவதற்கு முக்கிய காரணம் இரசாயன உரம் பயன்படுத்தி உணவுப்பயிர்களை வளர்க்கும் முறை தான் என்று நான் உணர்ந்தேன். அதனால் இயற்கை வேளாண்மையில் நான் ஆர்வம் கொண்டேன்.
என்னுடைய விவசாய வாழ்க்கையை என் தந்தை எனக்களித்த மூன்று ஏக்கரோடு நான் வாங்கிய நான்கு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து துவங்கினேன். பண்ணையில் கம்பி வேலியோடு சில்வர் ஓக், தேக்கு, மஹோகனி போன்ற சில மரங்கள் வைக்கப்பட்டு, இரண்டு ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால பயிர்கள் கலந்து சாகுபடி செய்தால் உற்பத்தி இரட்டிப்பாவதற்கு உதவும் என்று உணர்ந்து, நான் காடு அடிப்படையிலான ஒருங்கிணைந்த இயற்கை சாகுபடி முறையை பின்பற்றினேன்.
துவக்கத்தில் வயலில் தானியத்தை கலந்து தௌிக்கப்பட்டது. மண்ணின் ஆரோக்கியத்தை உயர்த்த பல்வேறு தொழில்நுட்பங்களான மூடாக்கு மற்றும் இலைதழைகளை மண்ணில் இட்டு உழவு செய்தல் போன்றவற்றை பின்பற்றினேன். பீன்ஸ், கத்திரி, பட்டாணி, துவரை, வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், கொடி காய்கறிகள் மற்றும் நீர் காய்கள் போன்ற குறுகிய காலப் பயிர்களிலிருந்து துவக்கத்தில் வருமானம் ஈட்டினேன். எலுமிச்சை (100), கொய்யா (50), சப்போட்டா (40), நெல்லி (40), பலா, சீத்தாபழம், பச்சைஆப்பிள், ஜாமுன் ஆகியவை தலா 30 செடிகள், மற்றும் கறிவேப்பிலை, கருமிளகு, ஏலக்காய், முருங்கைக்காய் ஆகியவை தலா 50 செடிகள் போன்ற மத்திய காலப் பயிர்களும் என்னுடைய பண்ணையில் வளர்த்தேன். மலைசவுக்கு (280) ,தேக்கு (120),சீமைத் தேக்கு (160), மா (100),தென்னை (180), ஆலமரம், வேம்பு, புளியமரம், அழிஞ்சில் மரம், அத்திமரம், மூங்கில் மரம் மற்றும் சந்தனமரம் போன்ற நீண்ட கால பயிர்கள் / மரங்கள் பண்ணையில் வளர்த்தேன்.
எனது பண்ணையின் முக்கிய அங்கமாக இருப்பது கால்நடைகள். ஹளிக்கர் இரக பசுக்கள் – 5, மலநாடுகிட்டா மாடுகள் – 5, செம்மாி ஆடு மற்றும் வெள்ளாடுகள் – 9, கோழிகள் – 60 ( வான்கோழி- 10, குஞ்சுகள் – 6, சண்டைக் கோழி – 4, கதக்நாத் குஞ்சுகள் – 10), வாத்துகள் – 9, தோட்ட பாதுகாப்பு நாய்கள் – 4 , மற்றும் பூனைகள் – 4 போன்ற கால்நடைகள் உள்ளன.
நான் சுற்றுசூழலுக்கு நட்பான சாகுபடி செயல்பாடுகளையே எனது பண்ணையில் பின்பற்றுகின்றேன். சொட்டு நீர்ப்பாசனம் பயன்படுத்தி தண்ணீரை அளவோடு உபயோகித்து சேமிக்கப்படுகிறது. மக்குஉரம் மற்றும் மண்புழுஉரத்தை கால்நடை மற்றும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் கழிவுகளை உபயோகித்து உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை மீண்டும் பண்ணையிலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மாட்டு சாணம் உயிர்சாண எரிவாயு உற்பத்தி செய்வதற்கு பயன்படுகிறது. தேனீ வளர்ப்பும் எனது பண்ணையில் நான் சேர்த்துள்ளேன்.
ஓருங்கிணைப்பை நோக்கி செல்லும்வழி
பல விவசாய நண்பர்கள் என்னோடு சேர்ந்து ஆரோக்கிய மற்றும் நிலைத்த சாகுபடி முறைகளை செயல்படுத்தி வருகிறார்கள். முப்பது உறுப்பினர்கள் சேர்ந்து ‘சாத்வா ஆப்கானிக்” என்ற குழுவை உருவாக்கினோம். நாங்கள் மிக பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்து, விவசாயிகளின் சந்தை போன்ற பல்வேறு சந்தைகளை உருவாக்கியும் பள்ளிகளிலும் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் ஒரு படி முன்னேறி, நாங்கள் விவசாய உற்பத்தி நிறுவனம் – சாவன் துர்கா ரைத்தா உத்பதக்கா நிறுவனம் என்ற பெயாில் தோட்டக்கலை துறை உதவியுடன் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்ந்த மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் உருவாக்கினோம். சிறு விவசாய தொழில் கூட்டமைப்பு, ராம்நகரா மாவட்டம், மகடி தாலுக்காவில் உள்ள பரம்பராகட்டா விவசாயிகள் பயிற்சி மையம், பெங்களூருவின் ஸ்ரீஸ்ரீகிராம வளர்ச்சி திட்ட டிரஸ்ட் ஆகியவையும் இந்த முயற்சிக்கு உதவி செய்தது.
தென்னை, மா மற்றும் காய்கறி பயிர்களின் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தகவல்களை விவசாயிகளுக்கு அளித்து, சாியான நேரத்தில் விதைகளை வழங்கி சாியான நேரத்தில் விதைத்து, உரங்கள், இயற்கை உயிர் மருந்துகளை பயன்படுத்தி, விற்பனை மையத்தை நேரத்திற்கு அடையும் நிலை, மதிப்பு கூட்டுவதில் ஊக்குவித்தல் ஆகிய வசதிகள் கிடைத்து அதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதே, ரைத்தா உத்பதக்கா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளுடன், விவசாயிகள் தற்போது பாதுகாப்பான உணவை வளர்க்கின்றனர், மண் வளம் அதிகாித்துள்ளது, அவற்றின் பயிர் உற்பத்தி செலவுகளும் குறைந்துள்ளது, உயிர் பல்வகைமை விரிவடைந்துள்ளது.
ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, மாதம் ரூ.10,000 பெறும் வண்ணம், பத்து பயிர்கள் வளர்க்குமாறு ஊக்கப்படுத்துகிறோம். தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை, முருங்கை, கருவேப்பிலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை வரிசையில் நடலாம், செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு, கன்று குட்டிகள், தேன், மீன் வளர்ப்பு, மண்புழுஉரம், மா மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் ஆகியவற்றிலிருந்து குறைந்தது ரூ.60000 வருமானம் ஈட்ட முடியும்.
விவசாய உற்பத்தி நிறுவனம் நேரடி விற்பனை முறை மூலம் விவசாயிகளுக்கு உதவி புரிகிறது. பல விற்பனை வழிகள் வெளிக்கொணரப்பட்டது. உதாரணத்திற்கு, விவசாயிகளின் விளைபொருட்கள் கிரிநகர் பூர்ணா பிரமதி பள்ளி வளாகத்தில் மற்றும் பெங்களூருவில் உள்ள பூர்ண பிரக்கியாலே அவுட்டில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விற்பனை செய்யப்படுகிறது. பழங்கள் மற்றம் காய்கறிகள் நேரடியாக இயற்கை அங்காடிகளில் விற்கப்படுகிறது.
விவசாய உற்பத்தி நிறுவனம், மதிப்பு கூட்டும் பொருட்களை உற்பத்தியும், விற்பனை செய்வதற்கும் உதவி புரிகிறது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை சமக்ராசிரி என்ற பிராண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மாவு, ஊறுகாய், தேன், ஏ2 பால், வெண்ணெய், நெய் மற்றும் இயற்கை குஞ்சு முட்டைகள் ஆகியவை விற்கப்படுகிறது.
வன விழிப்புணவு திட்டத்தோடு சேர்ந்து நாற்றுக்களை நடும் திட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம்.
அதற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு வருடமும், 365 புதிய செடிகள் , ஒரு நாளைக்கு ஒரு செடி என்ற ரீதியில் எங்கள் தோட்டங்களில் செடிகளை கூட்டப்படுகிறது.
ஒட்டு மொத்தத்தில், இந்த முயற்சி நியாயமான விலையில், பச்சை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்காத காய்கறிகளை நுகர்வோருக்கு வினியோகிக்க உதவுகிறது. காய்கறிகள் , மதிப்பு கூட்டும் பொருட்கள் வழங்குவதன் மூலம் ‘விஷமில்லாத உணவை” சமூகத்திற்கு நாங்கள் வழங்குகிறோம்.
என்.கேசவ மூர்த்தி
N. Keshavamurthy S/o N. Nanjundayya Ankanpalya, Motagondanahalli panchayat Soluru Hobli, Magadi Taluk Ramanagara District - 562127 E-mail: nkeshava42@gmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 4



