நிலைத்த உற்பத்தியை அளிக்கக்கூடிய, உயிர்ச்சூழலுக்கு உகந்த பாரம்பாிய செயல்முறைகளுக்கு விவசாயிகள் திரும்பி வரும் ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய போக்கு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பொிய அளவில் இந்த வேளாண் உயிர்ச்சூழல் முறைகளுக்கு மாறுவதற்கு விரும்பினால், அவர்களுக்கு இந்த அறிவை பரப்புவதற்கும் மற்றும் தேவைப்படும் ஆதரவையும் அளிப்பதற்கு மிகப்பொிய தேவையும், அவரசமும் இருக்கிறது.
பாரம்பாிய செயல்முறைகள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவையே ஒரு முதுகெலும்பாக இருக்கிறது. நவீன செயல்முறைகளுக்கு மாறியதன் விளைவாக, பல விவசாயிகள் பாரம்பாிய செயல்முறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டனர். இருந்தபோதிலும், சில விவசாயிகள் இன்னும் அந்த செயல்முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். மேலும், இயற்கை வேளாண்மைக்கு அதிக கவனம் செலுத்தும்போது, இந்த பாரம்பாிய செயல்முறைகளினால் வளஆதாரங்களின் மேலாண்மை அதன் முக்கியத்துவத்தை மறுபடியும் பெறுகிறது.
பண்ணை தொழுஉரம் பயன்படுத்துவது மதிப்புக் கூட்டலோடு மேற்கொள்ளப்படும் ஒரு வகையான பாரம்பாிய செயல்முறை பண்ணை தொழுஉரம், ஊட்டமேற்றிய மட்குஉரமாக மாற்றப்பட்டு, அதனுடன் மக்கு உரம், ராக் பாஸ்பேட் அல்லது நாதிப் முறையோடு செய்யப்படுகிறது. முன்பெல்லாம், கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில், கால்நடைகளின் கோமியம் சேகாிக்கப்பட்டு அவை உரக்குழிகளில் ஊற்றப்பட்டு, அந்த உரம் ஊட்டமேற்றப்படும். இன்று அந்த செயல்முறைகள் வேகமாக மறைந்து வருகிறது.
பாரம்பாிய வேளாண் செயல்முறைகளை மீண்டும் புதுப்பிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் முன்னணி நிறுவனங்கள் சில முயற்சிகளை எடுத்து வருகின்றன. உதாரணத்திற்கு, கர்நாடக அரசாங்கம் தனது இயற்கை வேளாண் திட்டத்தின் வாயிலாக ஊட்டமேற்றிய மட்கு உரம் தயாரித்து அந்த மட்குஉர கல்ச்சரை கொடுத்து வருகிறது. விவசாயிகள் இயற்கை யூரியாவை கால்நடைகளின் கோமியத்தோடு மணலை கலந்து தயாரிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர். சிக்கநாயாகனஹள்ளி தாலுக்காவில் உள்ள கோரக்ரே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்ராஜா என்னும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர்போன விவசாயி கால்நடைகளின் கோமியத்தை சாம்பலுடன் கலந்து உரமாக பயன்படுத்துகிறார். அதன் காரணமாக அவர் நல்ல முடிவுகளை கண்டுள்ளார்.
மேலும், நிறைய மற்ற பயன்தரத்தக்க செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு வண்டல் பயன்படுத்துவதால், மண்ணில் அதன் நீர்ப்பிடிப்புத்தன்மையை அதிகாிக்கிறது. குளிர்க்காலங்களில் உழவு செய்யும்போது அது பயிர்க்கழிவுகளையும், களைச்செடிகளையும் மண்ணில் கலந்து மட்குவதற்கு உதவுகிறது மற்றும் ஆடு பட்டியடைத்து கிடை போடுவது என பல செயல்முறைகள் உள்ளன. இருந்தபோதிலும், ஆடுகளை கொண்டு கிடைபோடும் பழக்கம் பாரம்பாியமாக ஆடு வளர்க்கும் பிரதேசங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. மிகவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைபோடுவது (ரெய்ச்சூர் மாவட்டம்) மற்றும் கழுதையை கொண்டு கிடைபோடுவது (தும்கூர் மற்றும் அரசிகிரே) நாம் பார்க்க முடிகிறது. நிறைய அளவிலான சாணம் மற்றும் கோமியத்தை மறுசுழற்சி செய்து மண்ணுக்கு திருப்பி அளிக்க முடியும். இல்லாவிட்டால் அவை வீணாக பயனற்று போய்விடும்.
வளஆதாரங்களின் மறுசுழற்சி:
பருவநிலை மாற்றம் மற்றும் அதிகாித்துவரும் இடுபொருட்கள் போன்றவற்றின் பின்னணியில், வளஆதாரங்களை மறுசுழற்சிக்கு கொண்டுவருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயிகள் மத்தியில் பயிர்க்கழிவுகளை, இயற்கை உரங்களை, கால்நடைகளின் கோமியத்தை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, வேளாண் நிலங்களில் பயிர்க்கழிவுகளை விவசாயிகள் எரித்ததை நாம் பார்த்திருக்கிறோம். இது பிலகவி, பாகல்கோட்டே மற்றும் மைசூர் பகுதிகளில் கரும்பு பயிரிடும் பகுதிகளில் மிகவும் சாதாரண நடைமுறையாக இருந்தது. தற்போது விவசாயிகள் பயிர்க்கழிவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மதிப்பையும், அவற்றை இயற்கை உரங்களாக மாற்றி, அதன் வழியாக மண்ணுக்குத் தேவையாக சத்துக்களை திருப்பி அளிப்பதை புரிந்து கொண்டுள்ளனர்.
ஒரு முறை பயிர்க்கழிவுகள் பண்ணையை விட்டு வெளியே போனாலோ அல்லது எரிக்கப்பட்டாலோ, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் போனது போனதுதான். முன்பெல்லாம், தென்னை பயிரிடக்கூடிய பகுதிகளான தும்கூர், ஹாசன், மாண்டியா, சிக்மகளூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தென்னை மட்டைகளை குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். அதன்மூலம் அவர்கள் ஊட்டச்சத்துக்களை இழந்தனர். இப்போது வளர்ந்துவரும் விழிப்புணர்வின் காரணமாக, விவசாயிகள் அந்த மட்டைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மண்ணிற்கே திருப்பி அளிக்கின்றனர். பேராசிரியர் நஞ்சுண்டப்பா ஒரு கல்வியாளராக இருந்து இயற்கை விவசாயியாக மாறியவர் ( திப்துர், தும்கூர் மாவட்டம்) தென்னை மட்டைகளை அவற்றை நறுக்கும் உபகரணங்களை கொண்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி அவற்றை தனது பழத்தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். மேலும் அவர் ஜீரோ பட்ஜெட் சாகுபடி மற்றும் வள ஆதாரங்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தன்னை கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபடுத்தி வருகிறார்.
அதேபோல் தார்வாடு மாவட்டம், கம்பிலிகோப்பா கிராமத்தில் வசித்துவரும் ஸ்ரீ மல்லேக்ஷப்பா என்ற சிறு விவசாயியும் தன்னுடைய பண்ணையில் இருந்து எதனையும் வெளியே போகவிடமாட்டார். அவர் மரங்களை அடிப்படையாக கொண்டு வேளாண்மை பின்பற்றி, வரப்புகளில் தீவனங்களை பயிரிட்டு வருகிறார். அனைத்து பயிர்க்கழிவுகளும், மட்கு உரமாக மாற்றப்பட்டு பண்ணைக்கே திருப்பி அளிக்கப்படுகிறது. பழமரங்களிருந்து விழும் இலைக் குப்பைகள் அதன் அடியிலேயே மூடாக்காக போடப்படுகின்றன. அவர் மேலும் நான்கு கறவை மாடுகளை வைத்துள்ளார். இது அவருக்கு சாணஎரிவாயு கலனை உள்ளூர் கிராம பஞ்சாயத்தின் உதவியோடு அமைப்பதற்கு உதவியாக இருந்தது. தீவனங்கள் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சாணம் உற்பத்தி செய்யப்பட்டு, அது சாணஎரிவாயு கலனிற்கு கொடுக்கப்பட்டு, அதில் கிடைக்கும் கழிவு, தொழுஉரம் உள்ள குழியில் போடப்பட்டு, அதன் பின்னர் வயலுக்கு அளிக்கப்படுகிறது. தானியங்கள், பால் மற்றும் தீவன வேர்கட்டைகள் மட்டுமே எனது பண்ணையை விட்டு வெளியே செல்கிறது, என கூறுகிறார் மல்லேக்ஷப்பா.
வெளியில் இருந்து வளஆதாரங்களை நம்பியிருப்பது எனக்கு மிகவும் குறைவு. என்னிடம் தீவனபுல் வெட்டும் கருவி உள்ளதால் அதன்மூலம் தீவனத்தை திறமையாக பயன்படுத்த முடிகிறது. மேலும் கழிவுகளை மட்கச்செய்பவற்றை தொழுஉரக்குழிகளில் பயன்படுத்துகிறேன் என உறுதியுடன் சொல்கிறார், ஆந்திராவின், விசாகப்பட்டினம் மாவட்டத்தின், மடுகலா மண்டல் பகுதியில் உள்ள சாகரம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார். அவர், இரண்டு பசு மாடும், இரண்டு எருமைகளும் வைத்துள்ளார். ஒரு ஏக்கர் நிலத்தில் தீவனத்தை வளர்த்து வருகிறார். அவரது பண்ணையில் எட்டு டன் தொழுஉரம் உற்பத்தி செய்யப்பட்டு, அவர் வளர்க்கும் பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர் கழிவுகளை மட்கச்செய்யும் கருவி, மற்றும் அசோலா சாகுபடி செய்து கழிவுகளை திறமையாக மறுசுழற்சி செய்கிறார். ரவிக்குமார் தனது ஏழு ஏக்கர் பண்ணையில் பலபயிர் சாகுபடி முறையை பின்பற்றி அதில் தென்னை, வாழை, நெல் மற்றும் தீவன சாகுபடி செய்கிறார்.
முன்னோக்கி செல்லும் வழி:
வேளாண் உயிர்ச்சூழல் உழவுமுறை இன்னும் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. திறமையாக மறுசுழற்சி செய்வதற்கு, குறைந்த பட்சம் ஒரு கறவை மாடும், சில சிறிய கால்நடைகள் (வெள்ளாடு செம்மறியாடு), தீவன பயிர், வரப்புகளில் மேல் தீவன மரங்கள் மற்றும் பயிர்க்கழிவுகளை மட்குஉரமாக மாற்றுவது போன்றவை தேவை. நிறைய வெளி நிறுவனங்கள் மாற்று வழிமுறைகளை மேம்படுத்துவதிலும், ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவைகளுக்கான கால அளவுகள் மற்றும் திட்ட தேவைகள் குறைவாகவே உள்ளன. உதாரணத்திற்கு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நீர்ப்பிரிமுகடுத்திட்டங்களில், வளஆதாரங்களை பசுந்தாள் உரப்பயிர்கள் மூலம் திறன்பட மறுசுழற்சி செய்வது, வண்டல் பயன்படுத்துவது, ஆழமாக உழுவது மற்றும் மண்புழு உரங்களை பயன்படுத்துவது போன்றவற்றிற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வேளாண்துறையும், வேளாண் அறிவியல் மையங்களும், தொழுஉரத்திற்கு மதிப்புக்கூட்டும் வகையில், மட்குஉர கல்ச்சரை அளித்து ஊட்டமேற்றிய மட்குஉரத்தை தயாரிக்க உதவுகிறது. எனவே, பொிய அளவில் இந்த அறிவை பரவலாக்குவதற்கான மிகப்பொிய தேவையும், அவரசமும் உள்ளது. மேலும், விவசாயிகள் வேளாண் உயிர்ச்சூழல் முறைக்கு மாறுவதற்கு விரும்பினால், போதிய அளவு ஆதரவு தேவைப்படுகிறது.
எம். என். குல்கர்னி
M N Kulkarni Addl Chief Programme Executive BAIF Institute for Sustainable Livelihoods and Development C/O: TRICOR, Koneru Lakshmaiah Street Mogalarajpuram, Vijayawada, Andhra Pradesh E-mail: mnkulkarni65@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 3



