முறையான மறுசுழற்சி மற்றும் இயற்கை வேளாண் கழிவுகளை மதிப்புக் கூட்டல் செய்வதும், பண்ணையை உற்பத்தி திறன் மிக்கதாகவும், தற்சார்பு உள்ளதாகவும் உருவாக்க முடியும். பல வகைகளில் பங்களிப்பதோடு, வளஆதாரங்களின் மறுசுழற்சியானது விவசாயிகளை உயிர்ச்சூழலுக்கான சேவை அளிப்பவர்களாகவும் உருவாக்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதில், வள ஆதாரங்களின் மறுசுழற்சியானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பாரம்பாியமாகவே விவசாயிகள் வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறுஉபயோகம் செய்தும் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிறு வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதில் பண்ணையில் கிடைக்கும் வளஆதாரங்களை மறுசுழற்சி செய்வதில் புதுவிதமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் மிகவும் சிறந்து விளங்குவர். அவர்கள் பண்ணை கழிவுகளை விறகாகவும், சாணத்தை எரிபொருளாகவோ அல்லது தோட்டத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் உரமாகவோ, சமையலறையில் உண்ணத்தக்க அளவில் வீணாகும் பொருட்களை நாய்கள் மற்றும் கால்நடைகளுக்கு அளித்தோ, மற்ற சமையலறையில் கிடைக்கும் கழிவுகளை மட்கு உரக்குழிக்கோ அல்லது தென்னை மரங்களை சுற்றியோ போட்டு பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டிற்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளுக்கு பெரும்பாலும் தனது சொந்த பண்ணையை பெரும்பாலும் நம்பியிருக்கிறதோ, அதுவே கழிவுகளே அற்ற முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட அணுகுமுறையாகும். அப்படிப்பட்ட பண்ணைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒரு வாழ்க்கை வழிமுறையாக எளிதாக ஒப்படைக்கப்பட்டதாகும்.
சிறிய குடும்ப பண்ணைகள் வடிவமைக்கும்போது, அவை வளஆதாரங்களை கூடியவரையில் பெருமளவிலும், பொருத்தமாகவும், பண்ணையில் உள்ள பல்வேறு உட்கூறுகளை இணைப்பதன் வழியாக, குடும்பத்தின் தேவையையும், வருமானத்தையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இப்படி மறுசுழற்சி செய்யப்படும் பண்ணைகள், உயிர்ச்சூழலுக்கு உகந்த பண்ணைகளாக மாறி, பயனளிக்கும் விளைவுகளை பெருக்குகிறது. பண்ணைகளில் உள்ள வளஆதாரங்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்துவதனால் இடுபொருட்களின் மீதான செலவினங்கள் குறைகிறது, இடுபொருட்களுக்கான வெளிச்சார்புதன்மையை குறைக்க உதவுகிறது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரம் மேம்படுகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக மாறிவரும் பருவநிலை மாற்றங்களுக்கு மத்தியில் பண்ணையில் நிலைத்ததன்மையை உறுதிப்படுத்துகிறது.
மேற்கொள்ளப்பட்ட முயற்சி:
சிறு மற்றும் குறு நிலப்பரப்பை கொண்டுள்ள நில உமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருக்கும் பட்சத்தில் கட்டாயமாக கால்நடை மற்றும் கோழிகள் வளர்ப்பை முக்கிய உட்கூறாக கொண்டிருப்பர். ஐ. சி. ஏ. ஆர் – சி. பி. சி. ஆர்.ஐ நடைமுறைப்படுத்தும் விவசாயி முதன்மை (பண்ணை, கண்டுபிடிப்புகள், வளஆதாரங்கள், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம்) என்னும் ஐ. சி. ஏ. ஆர் திட்டம் 2016 ல் இருந்து 1000 வேளாண் குடும்பங்களை உள்ளடக்கி கேரள மாநிலம், ஆளப்புழா மாவட்டம், பதியார் பஞ்சாயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு சராசாி நில அளவு 0.32 ஹெக்டர் மற்றும் கால்நடை பகுதி ஒன்றிலிருந்து 30 வரை அவர்களின் முதலீட்டு மற்றும் மேலாண்மை திறனை பொருத்து நிர்ணயிக்கப்பட்டது.
சமூக சொத்துக்கள், நேர பயன்பாடு, பிரச்சனைகளும் அதற்கான காரணங்களும், வேளாண் முறைகளின் கால அட்டவணை மற்றும் செல்வங்கள் தரவரிசை போன்றவற்றை பங்கேற்பு முறையில் ஆய்வு செய்வதற்கு, கிராமப்புற பங்கேற்பு ஆய்வானது (பி. ஆர். ஏ) நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளின் முக்கிய பிரச்சனை மற்றும் கவலைதரும் அம்சமாக, கால்நடைகளின் கழிவுகளை அவர்கள் வைத்துள்ள சிறிய பண்ணைகளில் இருந்து அகற்றுவது கண்டறியப்பட்டது. கொட்டிநாட்டு புங்கலாவுவை சேர்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ணா சொல்லும் போது “ 30 பசுக்களின் பாதிஅளவு சாணம், கோமியம் மற்றும் அந்த கொட்டகையை சுத்தம் செய்து, கால்நடைகளை மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் பொிய சவாலாக குறிப்பிட்டார். மேலும், தினசாி 200 லிட்டர் பால் எனது வீட்டிலிருந்து நேரடியாக சந்தைப்படுத்தப்படும் போது, அங்கிருந்து வெளியேறும் கால்நடைக் கழிவுகளின் வாடையானது, பால் உற்பத்தியின் தரத்தையும், நுகர்வோர் அதனை ஏற்றுக்கொள்வதையும் பாதிக்கிறது. மேலும், பக்கத்து வீட்டுக்காரர்கள் குறைசொல்வதும், இது போன்றவற்றிற்கு, சான்றிதழ் பெற வேண்டி உள்ளுர் அரசாங்கங்கள் மாசுக்கட்டுப்பாடு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், ஐ. சி. ஏ. ஆர் – சி. பி. சி. ஆர்.ஐ திட்டத்தின் கீழ் விவசாயி முதன்மைபடுத்தும் திட்டம், ஐ. சி. ஏ. ஆர் ( எப். எப். பி. ) மூலம் ஒரு செயல்முறை மாதிரியாக உருவாக்கப்பட்டது. கால்நடைகளின் கழிவுகளை மறுசுழற்சி, பல்வேறு வடிவங்களில் தீர்வாக முன்வைக்கப்பட்டது.
1. ஒரு நாளில் நிர்வகிக்கக்கூடிய சாணத்தின் தன்மை மற்றும் அளவு அதனோடு பசுமாட்டு கோமியம் மற்றும் கொட்டகை சுத்தம் செய்தல் குறித்த ஆய்வு.
2. பங்கேற்பு முறையில் விவசாயிகளைக் கொண்டு பசுஞ்சாண கழிவு மற்றும் கோமியத்தை மண்புழு உரத் தொட்டிகளில், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகளை கொண்டு பாிசோதனைகள் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்துவது.
3. சாணத்தை நிழலில் காய வைத்து இயற்கை பொருளாக சந்தைப்படுத்துவது.
4. கொட்டில் கழிவுகள் மற்றும் கோமியத்தை மறுசுழற்சியாக தீவனப்புல் மற்றும் காய்கறி உற்பத்தியில் பயன்படுத்துவது.
5. சாண எரிவாயு கலன் அமைத்து சமையல் வாயு உற்பத்தி செய்வது.
மறுசுழற்சியின் வழிமுறைகள்:
திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை தனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் வீட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் 20 பசுக்கள் மற்றும் கன்றுகள், 200 வளர்ப்பு பைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் தீவனப் புற்கள் பகுதிகள் உள்ளன. இந்த பண்ணை, இயற்கை உரங்கள் மற்றும் கோமியம் கொண்டு, ஆண்டுக்கு 5-6 டன் வரை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு மண்புழுஉரத் தொட்டி மற்றும் மீன் வளர்ப்பதற்கான ஒரு மீன் குட்டையும், சாண எரிவாயு பகுதியும், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்புப் பகுதியும், தென்னை மரங்களோடு ஊடுபயிராக கிழங்குகள் மற்றும் நறுமணப் பொருட்கள் வளர்க்கப்படுகின்றன.
தென்னையை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையானது 80-100 கிலோவிற்கான இயற்கை கழிவுகளை, ஒரு முழுவதும் வளர்ந்த தென்னையில் இருந்தும், அதன் ஊடுபயிர்களிலிருந்தும், பண்ணையில் உள்ள உட்கூறுகள் மற்றும் வளர்க்கப்படும் பல பயிர்களின் அடிப்படையில் கிடைக்கிறது.
ஐ. சி. ஏ. ஆர் – சி. பி. சி. ஆர்.ஐ திட்டத்தின் மூலம் தென்னையில் இருந்த கிடைக்கும் இயற்கை கழிவுகளை கொண்டு மண்புழுஉரம் தயாரிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தென்னையில் இருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளான தென்னை மட்டைகள், மற்றும் இதர தென்னை கழிவுகள், ஊடுபயிர்களான தீவனங்கள், கிழங்குகள், நறுமணப் பொருட்கள், வாழை மற்றும் காய்கறிகளில் இருந்து கிடைத்த கழிவுகளும் இதில் சேர்க்கப்பட்டன.
அவரது மனைவி திருமதி. உஷா மண்புழு உரத் தொட்டிகளுக்கு சாணக் கழிவுகளை போடுவதும், பண்ணையில் உள்ள கழிவுகளான மாட்டுக் கொட்டைகளில் சிதறிய தீவன கழிவுகள், மா, பலா போன்ற மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைச் சருகுகள் சேகாிப்பதும், காய்கறி சாகுபடிக்கு தேவையான பசுஞ்சாண மற்றும் கோமிய கலவைகளை தயாரிப்பதில் உதவுவது போன்றவற்றை நிர்வகிக்கிறார். மண்புழுஉரத் தொட்டிகளில் இருந்து 60-70 விழுக்காடு கிடைப்பதால், இயற்கை உரத் தேவை குறைக்கப்படுவதற்கு உதவுவதாக அவர் தொிவிக்கிறார். வீட்டுப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, வேளாண் குடும்பம் மற்றும் வேளாண்மைக்கான உட்கூறுகள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவோடு செல்வதற்கு மறுசுழற்சி என்பது மிகவும் அவசியமாகிறது.
சமையலறையில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் மீன் கழிவுகள் தென்னை மரங்களின் அடியில் நேரடியாக உரமாக போடப்படுகிறது. சராசாியாக வாரத்திற்கு 10-12 கிலோ சாம்பல் கிடைக்கிறது. தென்னம்பிள்ளைகளுக்கு அதன் ஆரம்ப நிலைகளில் தாக்கும் நோய் மற்றும் பூச்சிக்கட்டுப்பாட்டிற்கான முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் சாம்பல் தௌிக்கப்படுகிறது.
மேலும், அரிசி வடி கஞ்சியானது, வாழைக்கு பழ வளர்ச்சிக்கும், காய்கறியில் பூச்சி மேலாண்மைக்கு மறுபயன்பாடாக தௌிக்கப்படுகிறது. பெண்கள் களைகளை மறுசுழற்சி செய்வதில் முக்கியமானவர்களாக உள்ளனர். புதிய அல்லது பழுத்த வாழை இலைகள் மற்றும் பலா இலைகள் ஆடுகள், பசுக்கள் மற்றும் கோழிகளுக்கு தினசாி உணவாக அளிக்கப்படுகிறது. கொல்லைப்புற தோட்டமானது, உணவுக்கழிவுகள், மீன் கழிவுகள் மற்றும் நெற்பயிர்களின் கழிவுகள் போன்றவற்றின் மறுசுழற்சி பகுதியாக விளங்குகிறது. இதையோட்டி, மறுசுழற்சி செய்யப்பட்ட பண்ணை கழிவுகள் புதிய காய்கறிகள் மற்றும் முட்டைகளை பண்ணையிலிருந்து பெறுவதற்கு உதவுகிறது.
திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், மொத்தமாக புதிய பசுஞ்சானங்களை பயன்படுத்துவதற்கும், அது தொடர்பாக போக்குவரத்திற்கும் தேவை குறைவாக உள்ளது, ஆனால் அது அதிகமாக சேகரம் ஆகும் போது, அதற்கு அதிக வேலையாள் கூலி, குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பருவமழை நாட்களில் அவற்றை அகற்றுவது பிரச்சனையாக உள்ளது. மண்புழு உரத்தயாரிப்பினால், சாணத்திற்கு அதன் மதிப்பை என்னால் கூட்ட முடிகிறது. மறுசுழற்சியின் மூலம், நான் எனது பண்ணைக்கு தேவையான மண்புழு உரத்தை உற்பத்தி செய்யவும், அதிகப்படியாக உள்ளவற்றை விற்பனை செய்யவும் முடிகிறது. நிழலில் காய வைக்கப்பட்ட சாணத்திற்கு, நகர்புற மற்றும் மாநகர் புற பகுதி நேர விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு, அதிக தேவை இருப்பதால், ஒரு விவசாயிக்கு கிலோவிற்கு ரூ. 12 வரை கிடைக்கிறது. திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை, ஒரு வருடத்திற்கு 5-6 டன் மண்புழுஉரத்தை விற்று வருமானம் ஈட்டுகிறார்.
தனது பண்ணையில் இருந்து ஒவ்வொரு நாளும், கோபாலகிருஷ்ண பிள்ளை 200-300 லிட்டர் பாலை நேரடியாக விற்பனை செய்கிறார். மேலும், அவரது குடும்பத்திற்கு ருசியான, ஊட்டச்சத்து மிக்க, புதிய காய்கறிகள் அவரது பண்ணையிலிருந்து மேற்கொள்ளப்படும் பசுஞ்சாணம், கோமியம் மற்றும் சாணஎரிவாயு கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் கிடைக்கிறது.
வங்கி அதிகாரியாக இருந்து முன்மாதிரி விவசாயியாக மாறிய ஸ்ரீ கோபாலகிருஷ்ண பிள்ளை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரது பண்ணைக்கு வருகை தருகின்றனர். ஒருங்கிணைந்த பண்ணை முறை மாதிரிகள் மற்றும் பண்ணைக்கழிவுகளை மதிப்பு மிக்க மட்கு உரமாக, பசுந்தீவனங்களாக, காய்கறிகளாக, பழங்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு இருப்பது, இங்கு வருபவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. இங்கு புதிதாய் கிடைக்கும் காய்கறிகள் பறிப்பதில் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, இந்த முறை சாகுபடியில் கிடைக்கும் கொடிக்காய்களின் சேகாிப்பு காலமும் மேம்படுகிறது. எந்த ஒரு குடும்பமும் தங்களின் குடும்பத்தில் வீணாகும் இயற்கைக் கழிவுகளை தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை கொண்டு ருசியான காய்கறிகள் அல்லது கீரைகளாக, திரவ உரங்களாக, திட உரங்களாக மற்றும் மண்புழு உரமாக மாற்ற முடியும்.
இயற்கை வேளாண் முறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திரு. கோபாலகிருஷ்ணா அந்த பஞ்சாயத்தின் சிறந்த விவசாயியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றார். வளஆதாரங்களை திறன்பட மறுசுழற்சி செய்வதிலும், தற்சார்பு பண்ணைக்கும் அவரது பண்ணை ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
சமூக மாதிரியாக மேம்படுத்துவது:
பஞ்சாயத்தில் 15 பண்ணைகள் வளஆதாரங்களை மறுசுழற்சி செய்யும் மாதிரி பண்ணையாக திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையை பின்பற்றும் வகையில் பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி மற்றும் மதிப்புக்கூட்டும் பகுதிகள் உருவாக்கி கொடுக்கப்பட உள்ளது. பதியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் திரு. வி. பிரபாகரன் அவர்கள், ஏழு பெண்கள் உள்பட 15 இளம் விவசாயிகளை இந்த வளஆதார மறுசுழற்சி முறையில் ஈடுபடுத்தி இந்த முயற்சியின் வாயிலாக ஒரு வருமானத்தை பெறவைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். செயல்திறன் மிக்க மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் பண்ணைக்கழிவுகளை பஞ்சாயத்துக்களில் பரவலாக்க முறையில் செய்வதன் மூலம், பாதுகாப்பான மற்றும் ருசியான சத்துள்ள உணவுகளை கிராமப்புற பகுதிகளில் உற்பத்தி செய்வதற்கான தூண்டுதலை மேம்படுத்த முடியும் என அவர் கூறுகிறார். உள்ளுர் வள ஆதாரங்களை மறுசுழற்சி செய்வதில் பெண் விவசாயிகள் மிகப் பொிய பங்கை அளிக்க முடியும். தற்போது நாங்கள் அவர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாக திட்டம் கிடைக்கும் பண்ணைக் கழிவுகளை மற்றும் களைகளை எரித்து வீணாக்குவதற்கு பதிலாக மீண்டும் மண்ணுக்கே நேரடியாக கொடுக்கும் வகையில் மறுசுழற்சி செய்வதற்கு அறிவுறுத்தி வருகிறோம்.
முறையான மறுசுழற்சி மற்றும் இயற்கை வேளாண் கழிவுகளை மதிப்புக் கூட்டல் செய்வதும், பண்ணையை உற்பத்தி திறன் மிக்கதாகவும், மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அளித்து பண்ணையை தற்சார்பு உள்ளதாகவும் உருவாக்க முடியும். மண்புழு வளர்ப்பானது நுண்ணுயிர் நோய்கிருமிகளை உயிரியல் முறையில் கட்டுக்குள் வைத்து, அதோடு பயன்தரக்கூடிய நுண்ணுயிர்களை பெருக்கி மண்ணை வளப்படுத்துகிறது. மட்கு உரம் தயாரித்து பயன்படுத்துவதும் பயிர்களுக்கு ஊட்டச்சத்தை இலவசமாக அளித்து, கெட்ட வாடை இல்லாத இயற்கை பொருளாய் உருமாற்றி அளிக்கிறது. பிராணவாயு இல்லாத நிலையில் சாணஎரிவாயு உற்பத்தி செய்யப்படுவது, பண்ணையிலிருந்து நேரடியாக பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றுவதை குறைப்பதற்கு உதவுகிறது. வளஆதாரங்களை மறுசுழற்சி செய்வது பல வழிகளில் விவசாயிகள் உயிர்ச்சூழலுக்கு சேவை செய்து, பசுமை பணத்தை சம்பாதிப்பதில் உதவுகிறது. ஒட்டுமொத்தமாக, வளஆதாரங்கள் மறுசுழற்சியானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதில், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அனிதாகுமாரி பி. மற்றும் இந்துஜா எஸ்
Anithakumari P Principal Scientist (Agrl. Extension*) E-mail: anithacpcri@gmail.com Induja S Scientist (Microbiology) ICAR Central Plantation Crops Research Institute Krishnapuram P.O., Kayamkulam, Kerala
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2



