பின்னணி
நாட்டில் உள்ள மற்ற இடங்களைப் போலவே, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில் வீரக்குடி என்ற சிறு கிராமமும் கடந்த 5 வருடங்களாக வறட்சியின் கொடுமையை அனுபவித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தட்பவெப்பம் இந்தப் பகுதியில் மிகவும் அதிகாித்து வருகிறது.
போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத மற்றும் தென் கிழக்கு பருவமழை எல்லா இடங்களிலும் சமமாக பெய்யாத காரணத்தால் வேளாண்மைக்கும் மற்றும் குடிநீருக்கும் கூட கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. தொடர் வறட்சியின் காரணமாக ஒவ்வொரு வருடமும் நிலத்தடி நீரும் வேகமாக கீழே இறங்கி வருகிறது. பல இடங்களில் வேளாண்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நிறைய வேளாண் குடும்பங்கள் அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்கு பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து செல்வது கட்டாயமான நிலைமையாக இருக்கிறது. மேலும் வறட்சியான ஆண்டுகளில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடர் வறட்சி மற்றும் வேளாண் நெருக்கடி நிலையிலும், சில விவசாயிகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயிர் சாகுபடி முறைகளை மாற்றியமைத்து வேளாண்மையில் வெற்றி பெருவதோடு, மற்ற விவசாயிகளுக்கு முன் மாதிரியாகவும் திகழ்கின்றனர். அந்த வகையில் திரு. கலைச்செல்வன் என்ற விவசாயி பருவநிலை மாற்றங்களின் தாக்கத்தை புரிந்து கொண்டு வேளாண்மையில் பயிர்சாகுபடி முறையில் சில மாற்றங்களை செய்து வெற்றி கண்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், கோவில் வீரக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆர்வமிக்க ஒர் இளம் விவசாயி. இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல், நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறுதானியங்கள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அந்த கிராமத்தில் வேளாண்மையின் மேல் ஆர்வமுடைய இளம் விவசாயிகளில் இவரும் ஒருவர். குடும்பம் என்கிற தொண்டு நிறுவனம் நடத்துகின்ற நிலைத்த வேளாண்மை தொடர்பான பயிற்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தான் கற்ற விசயங்களை தனது பண்ணையிலும் மற்றும் சக விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்வார்.
அடிப்படையில் இவர் புதிய விசயங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் மிக்கவர். மேலும் கிராமப்புற பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை தான் ஆதாரம் மிக்க தொழில் என்பதில் நம்பிக்கை கொண்டவர். எனவே, இவரது அணுகுமுறை எப்போதும் மற்ற விவசாயிகளிடமிருந்து சற்று மாறுபட்டு, தனது பண்ணை ஒரு ஆராய்ச்சிக் களமாக மாற்றி தொடர் பாிசோதனைகளை மேற்கொள்வார். இவரின் இந்த சிறப்பு பண்புகள் உள்ளூரில் பங்கேற்பு உத்திரவாத முறை என்கிற இயற்கை விவசாயிகள் குழுவிற்கு தலைவராகவும் தேர்வு ஆக உதவியது.
புதிய முறை வேளாண்மைக்கு வித்திட்ட நேரம்:
கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இவர் இயற்கை வேளாண் முறைகளில் உள்ள பல தொழிற் நுட்பங்களை தனது பயிர் சாகுபடியில் கடைபிடித்து வந்தாலும், தன்னை ஒரு வெற்றிகரமான விவசாயியாக நிரூபிக்க முடியவில்லை. பயிர் சாகுடியில் அவரது செலவினங்கள், குறிப்பாக கூலியாட்கள் சம்பளம், பூச்சி நோய் மேலாண்மை போன்றவற்றில் அவர் நினைத்தது போல் பொிதாக குறையவில்லை. தன்னிடம் உள்ள ஒரே நீர் ஆதாரமான கிணற்று நீரை பயன்படுத்தி ஒரினப்பயிரான நெல்லை தொடர்ந்து சாகுபடி செய்ததால், ஒவ்வொரு ஆண்டும் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இதற்கான காரணங்களை சற்று அக்கரையோடு யோசிக்க ஆரம்பித்த போதுதான், தனது வேளாண் முறையில் ஏதோ சில முக்கியமான அம்சங்கள் விடுபட்டுள்ளது என்பதை சிந்திக்க ஆரம்பித்தார். அப்போதுதான், அவர் மேற்கொண்டு வரும் ஒரினப் பயிரான நெல் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தொடர் வறட்சியும், பருவமழை பொய்ப்பது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாக இருக்கும் வேளையில் இது மிகப்பொிய ஆபத்தில் போய் முடியும் என உணர்ந்தார்.
இதை உணர்ந்தவுடன் தனது பயிர் சாகுபடி முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்து, குறிப்பாக தன்னிடம் உள்ள நீர் ஆதாரங்கள் அளவைக் கொண்டு பல பயிர் சாகுபடியை பாிசோதனை முறையில் செய்து பார்க்க முடிவு செய்தார். அதற்காக தன்னுடைய நிலத்தில் உள்ள 75 சென்ட் நிலப்பகுதியை பல பயிர் சாகுபடிக்கு எடுத்துக் கொண்டு அதில் கீழ்கண்ட பயிர்களை இணைத்து பயிரிட்டார். அதன்படி தன்னுடைய பல பயிர் சாகுபடிக்கு நிலக்கடலையை முக்கிய பயிராக தேர்வு செய்து கொண்டார். அதனுடன் துவரை, தட்டைபயிர், பாசிப்பயிறு போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்தார். நீரினைதிறமையாக பயன்படுத்திக் கொள்ள நீர் பாய்ச்சும் கரைகளில் வெங்காயத்தை ஊன்றி, அதே போல் வரப்பில் எள்ளுப்பயிரை விதைத்தார். நிலக்கடலைக்கு இரண்டாம் களை எடுக்கும்போது மண்ணில் இருந்த ஈரப்பதத்தை கண்டு, அதில் பருத்தி விதைகளை இடையே ஊன்றி வைத்தார். அதே போல் நிலக்கடலை அறுவடை செய்தவுடன் குறுகிய கால பயறுவகைகளையும் விதைத்தார்.
நீர் மற்றும் களை மேலாண்மை செய்வதில் அவருக்கு கிடைத்த பலன்கள்:
இந்த பல பயிர் சாகுபடி முறையை பின்பற்றியதால், இவருக்கு நீர் மற்றும் களைகளை மேலாண்மை செய்வது இலகுவானதோடு மட்டுமல்லாமல், அதற்காக அவர் செலவிடும் நேரம் மற்றும் வேலை மிச்சமானது. பல பயிர் சாகுபடி முறையினால் நிலப்பரப்பு முழுவதும் பயிர்கள் இருந்ததனால் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் நிலத்திற்கு இல்லாததால், மண்ணில் ஈரப்பதத்தை அதிக நாட்களுக்கு தக்க வைக்க முடிந்தது. மேலும், பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதால் அவைகள் களைகள் முளைத்து வராமல் அவற்றை அமுக்கிவிட்டன. இதன் காரணமாக களைகளை எடுக்க அவருக்கு ஏற்படும் செலவினங்கள் பெருமளவில் குறைந்தது. இது திரு. கலைச்செல்வனுக்கு மிகப் பொிய பலனுக்கு முதல் அறிகுறியாக தென்பட்டது.
நிலக்கடலைக்கு இரண்டாம் களை எடுத்து மண் அணைக்கும்போது, பல பயிர்களை இணைத்து செய்ததனால் மண்ணில் ஈரப்பதம் மீதமிருப்பதை உணர்ந்தார். எனவே, அந்த மண்ணின் உள்ள ஈரப்பதத்தை வீணாக்காமல் நிலக்கடலைகளுக்கு இடையில் பருத்தி விதைகளை ஊன்றி நிலக்கடலை அறுவடைக்கு பிறகு பருத்தியை பிரதான பயிராக வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். நிலக்கடலை அறுவடைக்கு சில தினங்கள் முன் குறைந்த வயதுடைய பயறுவகைப் பயிர்களை விதைத்தார். இந்த வகையில் 6-8 மாதங்களுக்கு வெவ்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு பயிர்களில் தொடர்ச்சியாக அவருடைய நிலத்தில் பயிர் அறுவடை நடந்து கொண்டிருந்தது. இதன் மூலம் அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வேளாண்மையில் ஈடுபடும் நாட்களும் அதிகாித்தது.
பல்வகை பலன்கள்:
அ. அதிக வகையிலான உணவு பொருட்கள் விளைந்ததனால் குடும்பத்தின் உணவு மற்றும் ஊட்டசத்து உத்திரவாதம் பெருகி, மதிப்புக்கூட்டவும், சொந்த உபயோகத்திற்கும் வாய்ப்புகள் அதிகாிப்பதை உறுதிப்படுத்தியது
இதை செயல்படுத்திக் கொண்டிருந்த வேளையில் ஓரினச் சாகுபடி முறைக்கும், பல பயிர் சாகுபடி முறைக்கும் தான் கண்ட அனுபவங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டே வந்தார். அவரது ஆய்வின் படி இரண்டு முறைகளையும் ஒப்பிடும்போது, ஓரினப் பயிர் சாகுபடி முறையைக் காட்டிலும் பல்வேறு வகையில் பலபயிர் சாகுபடி முறை அவருக்கு பலனளித்துள்ளது. ஓரினப்பயிரான நெல் சாகுபடி செய்யும்போது அவருக்கு நெல் மட்டுமே கிடைத்தது. இதர அனைத்துப் பொருட்களையும் அவர் வெளியில் இருந்து வாங்க வேண்டியிருந்து. அதனையும் கூட அவருக்கு விளைந்த நெல்லில் ஒரு பகுதியை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான் வாங்க வேண்டியிருந்தது. ஆனால், பல பயிர் சாகுபடியானது அவரது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவைக்கான பல உணவுப் பொருட்களை அளித்தது.
மொத்தம் கிடைத்த 8 மூட்டை நிலக்கடலையில், 4 மூட்டையை அவரது சொந்த உபயோகத்திற்கு, அதுவும் அதன் மதிப்பை கூட்டி எண்ணையாக மாற்றி வைத்துக்கொள்ள முடிந்தது. அது அவரது குடும்பத்தின் ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணெய் தேவையை பூர்த்தி செய்தது. அதேபோல் அவருக்கு கிடைத்த 25 கிலோ எள்ளை முழுவதுமாக எண்ணையாக மாற்றி, அதுவும் அவரது குடும்பத்தின் ஒரு வருட தேவையை பூர்த்தி செய்தது. உளுந்து 40 கிலோ, பாசிப்பயறு 10 கிலோ, தட்டைப்பயிறு 10 கிலோ மற்றும் வெங்காயம் 50 கிலோ என கிடைத்த மற்ற பயிர்களின் விளைச்சல் அவரது குடும்பத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்து. கீரை மற்றும் துவரையில் கிடைத்த மொத்த மகசூலில் 50 விழுக்காடு அவரது குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்தது. இப்படியாக ஒவ்வொரு பயிர் அறுவடையிலும், அவரது குடும்பத்திற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம் அதிகாித்ததோடு, உபாியான பொருட்களை விற்றதன் வாயிலாக வருமானத்திற்கும் உத்திரவாதம் பெருகியது.
ஆ. அதிக பொருளாதார பலன்:
பொருளாதாரப் பலனாக பார்க்கும்போது 75 சென்ட் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல பயிர் சாகுபடி முறையில் நிகர வருமானம் ரூ. 59700 கிடைத்தது. அதே வேளையில் 40 சென்ட் நிலத்தில் ஓரினச் சாகுபடியாக செய்யப்பட்ட நெல் பயிரில் நிகர வருமானமாக ரூ. 7315 மட்டுமே கிடைத்தது. (அட்டவணையைப் பார்க்கவும்) . பல பயிர் சாகுபடி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி அவரது வருமானத்தில் அதிக பங்கை கொடுத்துள்ளது. பொருளாதாரப் பலன்களுக்கு அப்பால், கூடுதல் பலன்களாக பல பயிர் சாகுபடி செய்வதனால் பூச்சித் தொல்லைகள் வெகுவாக குறைந்திருந்தன. மேலும் களைகளில் வளர்ச்சியும் தடுக்கப்பட்டு களை எடுக்கும் செலவினங்களும் பலபயிர் சாகுபடியில் அவருக்கு குறைந்திருந்தன.
இ. இருக்கும் நீரை திறன்பட பயன்படுத்தியது:
பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்சும் நாட்களின் எண்ணிக்கை குறைந்தது தான் அவருக்கு பல பயிர் சாகுபடி முறையில் கிடைத்த மிகப் பொிய பலன். ஓரினப் பயிரான நெல் சாகுபடி செய்யும்போது மழை நன்றாக இருக்கும் சமயங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறையும், மழை இல்லா சமயங்களில் 4 நாட்களுக்கு ஒரு முறையும் என, ஒவ்வொரு முறை பாய்ச்சும் போதும் இரண்டரை மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். அதே சமயம், பல பயிர் சாகுபடி முறையில் மழை இருக்கும் சமயங்கள் மாதம் ஒரு முறையும், மழை இல்லா சமயங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் என, ஒவ்வொரு முறையும் 5 மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். இங்ஙனம், பல பயிர் சாகுபடி முறையில் தனது கிணற்றில் உள்ள நீரை குறைந்த அளவு பயன்படுத்த அவரால் முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல பயிர் சாகுபடியானது பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் வறட்சியான காலங்களில் பயிர் இழப்பை சந்திக்காமல் விவசாயிகளை காக்கும் சிறந்த வாய்ப்பாகவும் உள்ளது. அப்படி ஒருவேளை, ஒரு பயிரில் இழப்பை சந்தித்தாலும், மற்ற பயிர்களில் கிடைக்கும் மகசூல் அதனை ஈடுகட்டிவிடும். ஓரினப்பயிரில் இந்த வாய்ப்புகள் இல்லை.
முடிவுரை:
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களை விடவும், விவசாயியால் அடுத்த பருவத்திற்கு தேவைப்படும் விதைகளை சேமிக்கவும், அதேவேளையில் கிராமத்தில் உள்ள சக விவசாயிகளுக்கு கொடுத்து உதவவும் முடிகிறது. பலபயிர் சாகுபடி முறையில் கிடைத்த வெற்றியின் வாயிலாக, இவர் தன்னுடைய நிலத்தில் இதனை மேலும் விரிவாக தன்னிடம் உள்ள மற்ற நிலங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பக்கத்து கிராமத்து விவசாயிகளும் இவரது வயலை வந்து பார்த்துவிட்டு, இந்த வறட்சியிலும் ஒருங்கிணைந்த பல பயி சாகுபடி உற்பத்தி எப்படி இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பதை பார்த்து ஆச்சாியப்பட்ட வண்ணம் உள்ளனர்.
அட்டவணை 1: ஓரினப் பயிர் நெல் சாகுபடியில் செலவும் வரவும் (40 சென்ட் நிலப்பரப்பு)
| வ.எண் | செயல்பாடு | செலவு (ரூ) | வரவு (ரூ | தொகை (ரூ) |
| 01. | உழவு | 2000 | 13 மூட்டை நெல்லில் இருந்து கிடைத்த வருமானம் | 13000 |
| 02. | விதை | 125 | வைக்கோலில் இருந்து கிடைத்த வருமானம் | 2000 |
| 03. | நாற்றுப்பறிக்க | 200 | நெல் சாகுபடியில் கிடைத்த மொத்த வருமானம் | 15000 |
| 04. | நடவு செய்ய கூலி | 820 | மொத்த செலவினங்கள்ர் | 7685 |
| 05. | கோனோ வீடர் பயன்படுத்தி களையெடுக்க | 800 | நிகர வருமானம் | 7315 |
| 06. | கையால் களைபறிக்க | 140 | ||
| 07. | உரச் செலவு | 3000 | ||
| 08. | அறுவடைக்கான கூலி | 600 | ||
| மொத்த செலவினங்கள் | 7685 |
அட்டவணை 2: பல பயிர் சாகுபடி முறையில் – செலவும் வரவும் (நிலப்பரப்பு 75 சென்ட்)
| செலவினங்கள் | வருமானம் | |||||
| வ.எண். | செலவினங்கள் | அளவு | தொகை (ரூ) | பயிர் | அளவு | தொகை (ரூ) |
| 1. | நிலக்கடலை விதை | 25 கிலோ | 2500 | நிலக்கடலை | 8 மூட்டை | 20000 |
| 2. | துவரை விதை | 2 கிலோ | 160 | துவரை | 100 கிலோ | 5000 |
| 3. | உளுந்து விதை | 1.5 கிலோ | 225 | உளுந்து | 40 கிலோ | 2800 |
| 4. | பாசிப்பயிறு விதை | 1/2 கிலோ | 25 | பாசிப்பயிறு | 10 கிலோ | 400 |
| 5. | தட்டைப்பயிறு விதை | 1/2 கிலோ | 22 | தட்டைப்பயிறு | 10 கிலோ | 500 |
| 6. | எள்ளு விதை | 1.5 கிலோ | 180 | எள்ளு | 50 கிலோ | 3250 |
| 7. | கீரை விதை | 45 | கீரை வகை 1 | 50 கட்டு | 500 | |
| 8. | வெங்காய விதை | 17.5 கிலோ | 350 | கீரை வகை 2 | 50 கட்டு | 500 |
| 9. | பருத்தி விதை | 3.5 கிலோ | 385 | வெங்காயம் | 50 கிலோ | 1750 |
| 10. | உழவுக்கான செலவு | 1500 | பருத்தி | 1000 கிலோ | 40000 | |
| 11. | நீர் பாய்ச்சுவதற்கான வரப்பு அமைக்க | 400 | நிலக்கடலை கொடி | 4000 | ||
| 12. | விதை ஊன்ற | 560 | மொத்த வருமானம் | 79700.00 | ||
| 13. | வெங்காயம் அறுவடைக்கு கூலி | 140 | செலவினங்கள் | 20000.00 | ||
| 14. | உளுந்து மற்றும் எள்ளு அறுவடைக்கு கூலி | 750 | நிகர வருமானம் | 59700.00 | ||
| 15. | நிலக்கடலை அறுவடைக்கு கூலி | 1400 | ||||
| 16. | துவரை அறுவடைக்கு கூலி | 350 | ||||
| 17, | இபாசிப்பயிறு மற்றும் தட்டைப்பயிறு அறுவடைக்கு கூலி | 140 | ||||
| 18. | பருத்தி சாகுபடிக்கான செலவு | 5000 | ||||
| 19. | மற்ற செலவினங்கள் | 3365 | ||||
| மொத்த செலவினங்கள் | 20000 | |||||
கே. சுரேஷ் கண்ணா மற்றும் தி. விஜி
Suresh Kanna , Asst. Director and D. Viji , Document Coordinator Kudumbam, No: 118/113, Sundaraj Nagar, Subramaniapuram, Trichy - 620 020 Contact Numbers: 00420-99925 and 84890 19435



