வேளாண் உயிர்ச்சூழல் அணுகுமுறை என்பது வேளாண்மையை நிலைத்த தன்மை உடையதாக்குவதற்கான வழி. அதுவே பசுமைப்புரட்சி மற்றும் மரபணு புரட்சி மூலம் கார்ப்பரேட் வேளாண் மாதிரிகளை எதிர்ப்பதற்கான வழியாகும். தொழிற்நுட்பங்களுக்கு அப்பால், இந்த உலகிற்கு உண்மையிலேயே உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கு நியாமான உணவு முறையை உருவாக்கி கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஒடிசாவின் தென்மேற்கு பகுதியானது பெருவாரியாக வேளாண்மை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 75 -80 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பியுள்ள பகுதியாகும். அதிகப்படியான இயற்கை வள ஆதாரங்களை பெற்று ஆசிர்வதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் அங்குள்ள பழங்குடி மக்களின் உணவு, வாழ்வாதாரம் மற்றும் உயிர்ச்சூழல் உத்திரவாதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வேகமாக அழிக்கப்பட்டுவரும் சுற்றுச்சூழல், காடுகள் அழிப்பு, சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றங்கள் போன்றவற்றால் இந்தப்பகுதியின் உணவு உற்பத்தி மற்றும் வருமானம் ஆண்டு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட காரணமாக அமைகிறது.
இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, ஆக்ரகாமி என்கிற முன்னோடி அரசு சாரா நிறுவனம் ஒடிசா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் (ராயக்கட்டா, கோராப்புட், காலகண்டி) 3 வட்டங்களில் (காசீப்பூர், தஸ்மண்ட்பூர் மற்றும் த.ராம்பூர்) 150 கிராமங்களில் உயிர்ச்சூழல் கிராம மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தியது. ஓரினப்பயிர்சாகுபடி முறைகளுக்கு மாற்றாக உயிரினப் பன்மயத்தோடு கொண்டு வரப்பட்ட வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகள், பொருளாதார ரீதியாக, அதாவது மகசூல், உற்பத்தி திறன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் செயலாக்கத்திறன் போன்றவற்றில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை பெற்றுத்தந்ததோடு உணவு உத்திரவாதத்திற்கும், இறையாண்மைக்கும் முக்கியமான பங்களிப்பையும் கொடுத்துள்ளது. வேளாண் செயல்பாடுகளில் பெண் விவசாயிகள் ஆண் விவசாயிகளுக்கு சமமான அந்தஸ்தையும் பெற்றுள்ளனர்.
உயிர்ச்சூழல் மாதிரி:
வேளாண் உயிர்ச்சூழல் என்பது தொண்மை வாய்ந்த வேளாண் சுற்றுச்சூழலை பெருக்குவதற்கான அணுகுமுறையாக பயன்படுத்தப்பட்டது. சமஉயர வரப்புகள் மற்றும் தாவரங்களோடு கூடிய வரப்புகள் குன்றுகளின் சாிவுகளில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டன. கல் மற்றும் பள்ளங்களில் நீர் தடுக்கப்பட்டு அதற்கு பொருத்தமான வடிகால் வசதிகள் உருவாக்கப்பட்டன.
மா, முந்திரி, கொய்யா, லிட்சி போன்ற பழங்கள் கொடுக்கும் மரங்கள் காடுகளில் வளரும் மர வகைகளோடு இணைத்து பயிரிடப்பட்டன. இந்த மரங்கள் 30 டிகிரி சாிவில் நடப்பட்டன. மிகவும் அதிநவீன கருவிகளின் துணையுடன் நில சர்வே மற்றும் தீர்வை முறைகள் இந்த 3 தொகுதிகளில் உள்ள 150 கிராமங்களில் நடத்தப்பட்டன. 2010 ஆம் ஆண்டில் மொத்தம் 1800 விவசாயிகளால் 117000 பழ மரங்கள் நடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், 6000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடும்ப வேளாண்மையை பின்பற்ற தொடங்கி விட்டன. அதன் விளைவாக 2013-14 மற்றும் 2015-16 ஆண்டு பருவங்களில் 120 விழுக்காடு அளவுக்கு நிலப்பயன்பாடு அதிகாிக்கப்பட்டு அதில் குடும்ப வேளாண் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்தப்பகுதியில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அந்தந்த குடும்பங்களாலே நுகரப்பட்டு, உபாியாக இருந்த பொருட்களை விற்றதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு உதவியதோடு குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செலவினங்களை பார்த்துக்கொள்ளவும் உதவியது.
வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளின் பயன்கள்
| வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் | பயன்கள் |
| உழாத வேளாண்மை | இது மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது. அதில் இயற்கை மட்குப் பொருட்களை கொண்டு மண் புதுப்பிக்கப்படுவதும், நீர் ஊடுருவதும், நீரை பிடித்து வைத்துக்கொள்ளும் திறனும் அடங்கும். |
| ஒருங்கிணைந்த சத்துக்கள் மேலாண்மை | மண்புழு உரம், மட்கு உரம், திரவ உரம், பசுந்தாள் உரம், தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் தாவரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதுவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு குறையும். |
| புதுமையான மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகள் | மண்ணாிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் அதிகாிக்கிறது. மேலும், சமஉயர வரப்புகள், பள்ளங்கள் மற்றும் வரப்புகள், பிறை வடிவ வரப்புகள் போன்றவைகள் அமைக்கப்பட்டு ஈரப்பதம் நிலைநிறுத்தப்படுகிறது. |
| ஊடுபயிர்கள் மற்றும் கலப்பு பயிர்கள் | நிலத்தின் உற்பத்தித்திறன் மற்றும் பயிரின் உற்பத்தியும் அதிகாிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் பயிர் சாகுபடி இல்லாத பருவங்களிலும் ஆரோக்கியமான வருமானத்தை தருகிறது. |
| பயிர்களோடு கால்நடைகளை இணைப்பது | அதிக இலைதழைகள் கிடைக்க உதவுவதோடு அதிக படச சத்துக்கள் மறு சுழற்சி அளித்து , பொருளாதாரத்தை கால்நடைகள் வளர்ப்பின் வழியாக பலப்படுத்துகிறது. |
| விதை மற்றும் தானிய வங்கிகள் | விதை மற்றும் தானிய வங்கிகள் அதிக வட்டிக்கு கடன் தரும் கந்துவட்டிக்காரர்களை நம்பியிருக்கும் போக்கை குறைத்து , சந்தையும் சுய நிலைத்ததன்மைக்கு இட்டுச் செல்கிறது. அதன் மூலம் பருவநிலை மாற்றம் மற்றும் உணவு உத்திரவாதம் தொடர்பாக தொடர்ந்து வரும் சிக்கல்களை சமாளிக்க உதவுகிறது |
முக்கிய தாக்கம்:
சிறு விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியை அதிகாித்து லாபம் பெறுவதற்கு வேளாண் உயிர்ச்சூழலே சிறந்த இயற்கை வழி தீர்வாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வகையில் வேளாண் உயிர்ச்சூழல் விவசாயிகளுக்கு வருமானத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் அளித்து அதிலும் குறிப்பாக கோடிட்டு சொல்வதென்றால் சுற்றுச்சூழல் நல்லிணக்கதோடு எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்.
உற்பத்தி அதிகாிப்பு மற்றும் பயிர் பன்முகத்தன்மை:
இந்த பகுதியில் உள்ள பழங்குடி சிறு விவசாயிகள் பல பயிர் சாகுபடி மற்றும் பாரம்பாிய தொழிற்நுட்பங்களை கடைபிடித்ததன் விளைவாக விளைநிலங்கள் சீரழிவிலிருந்து தடுக்கப்பட்டு, மண்ணின் வளத்தை பெருக்கியுள்ளது. 3-7 ஆண்டுகளில் வேளாண் உயிர்ச்சூழல் முறைகளினால் உற்பத்தித்திறன் அதிகாிக்கப்பட்டு, விவசாயிகளினால் தங்களின் பயிர் மகசூலை இரட்டிப்பாக்க முடிந்துள்ளது.
வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம்:
வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் சிறுவிவசாயிகளின் வருமானத்தை பெருமளவில் உயர்த்தியுள்ளது. விவசாயிகள் இனிமேல் வெளியிடு பொருட்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை புதுமையான நீர்பாசன முறைகள் கடைபிடிக்கப்படுவதாலும் மற்றும் உயிர் இடுபொருட்கள் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாலும் அவர்களின் உற்பத்தி செலவு குறைக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள், அவர்களின் வருமானத்திற்காக கால்நடைகள் வளர்க்கின்றனர். 150 கிராமங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 1500 விவசாயிகள் பணத்தை சேமித்து அதனை கால்நடைகள் வாங்கவும், நிலத்தை மேம்படுத்தவும், நீர்பாசன முறைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தை உறுதி செய்து கொள்ள நிலையான வருமானம் கிடைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். பயிர் இழப்பு ஏற்படும் சூழலிலும், விவசாயிகள் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவதில்லை. மேலும், வேளாண் உயிர்ச்சூழல் விவசாயிகள் தற்கொலை அளவை நிச்சயமாக குறைத்துள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட விழப்புணர்வு மற்றும் திறன்களினால் இந்த விவசாயிகளினால் உணவு முறைகள், தொழிற்முறை வேளாண்மை மற்றும் வர்த்தக கொள்கைகள் போன்றவற்றில் ஒன்றுக்கொன்று உள்ள இணைப்புத்தன்மையை பார்க்க முடிகிறது.
உணவு இறையாண்மை:
உணவு முறையானது, சிறு விவசாயிகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை, நீதியை, மாியாதையை உறுதிப்படுத்தியுள்ளது. இது விவசாயிகளுக்கு, விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு அம்சங்களிலும், குறிப்பாக அவர்களின் நிலம், நீர், காடு, விதைகள் மற்றும் வருமானம் என அனைத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியுள்ளது. மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் திறன்களினால் இந்த விவசாயிகளினால் உணவு முறைகள், தொழிற்முறை வேளாண்மை மற்றும் வர்த்தக கொள்கைகள் போன்றவற்றில் ஒன்றுக்கொன்று உள்ள இணைப்புத்தன்மையை பார்க்க முடிகிறது.
முடிவுரை:
வேளாண் உயிர்ச்சூழல் முறையானது சிறு விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் முறையாக உருவாகி வருகிறது. இந்த அணுகுமுறையானது, சிறு விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதோடு மட்டுமல்லாது, பசுமைப்புரட்சி மற்றும் மரபணு புரட்சி மூலம் கார்ப்பரேட் வேளாண் மாதிரிகளை எதிர்ப்பதற்கான வழியாகவும் அமைந்துள்ளது. உலகின் பட்டினியை முடிவுக்கு கொண்டு வர நாம் அதிக உணவை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. உலகிற்கு உண்மையிலேயே உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கு நியாமான உணவு முறையை உருவாக்கி கொடுப்பது தான் நாம் செய்ய வேண்டியது. சிறு விவசாயிகளுக்கு உண்மையிலே தேவையானது என்னவென்றால் அவர்கள் பயன்படுத்துவதற்கு நிலம், நீர், காடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு சேவைகளே தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களோ, பொிய அளவிலான வேளாண்மை அல்லது உலக சந்தையோ அல்ல. அதற்கான பயணம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
பெட்டிச் செய்தி:
சுமனி ஜேஜாடியா: மாற்றம் உருவாக்கியவர்
சுமனி ஜேஜாடியா என்பவர் ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மாவட்டத்தில் காசீப்பூர் வட்டத்தில் உள்ள சிரிகுடா கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்மணி. முன்பெல்லாம், சுமனி ஜேஜாடியா மலைச் சாிவுகளில் இடம் மாற்றி செய்யும் சாகுபடியை செய்து வந்தார். அப்போது அவர் குடும்பத்தின் தேவைக்காக கேழ்வரகும், நெல்லும் சாகுபடி செய்வார். ஆனால், பல வருடங்களுக்கு முன் செய்ய ஆரம்பித்த வேளாண் உயிர்ச்சூழல் சாகுபடியால் அவரது குடும்ப நிலையில் பொிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சுமனி ஜேஜாடியா உணவு உத்திரவாதத்திற்கு பல பயிர் சாகுபடியை செய்து வருகிறார். கலப்பு பயிரானது ஒரு ஆண்டுக்குள் நன்கு வளர்வதற்கு உதவுகிறது. அவர் சந்தித்த மிகப்பொிய பிரச்சனை நீர் கொடுப்பதுதான், அதுதான் அந்த கிராமம் முழுக்க மிகப்பொிய பிரச்சனையாக இருந்தது. அக்கிராமத்தின் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஒன்றிணைந்து அருகில் இருந்த நீரோடையை தங்கள் நிலங்களுக்கு திருப்பி தண்ணீரை கொண்டு வந்தனர். இந்த உறுதிப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் அவர்களின் பண்ணையில் வருடம் முழுக்க பயிர்சாகுபடி செய்ய உதவியது. நீர் கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட வாய்க்காலில் மழை நீர் தேங்கி நிலத்தடி நீரும் அதிகாித்தது.
தற்போது, சுமனி ஜேஜாடியா காய்கறிகள் மற்றும் பழமரக்கன்றுகள் சாகுபடி செய்து வருகிறார். மேலும் 6 வகையான மா வகைகளில் நாற்றங்கால் அமைத்துள்ளார். அவரது பொருட்களை உள்ளூர் சந்தையான காசீப்பூரில் விற்கிறார். 2015 ஆம் ஆண்டில் 6 வகையான மா வகைகளில் 5000 கன்றுகள் வளர்த்து அதில் ஏற்கனவே 6000 ஒட்டுக்கட்டப்பட்ட செடிகளை 2016 வரைக்கும் ஒரு கன்றுக்கு ரூ. 25 வீதம் விற்று ரூ.150000/- வருமானம் ஈட்டியுள்ளார். அவரது குடும்பத்திற்கு வருடம் முழுக்க உணவு தேவை பூர்த்தியாகிறது. அந்த கிராமத்தில் உள்ள விதை மற்றும் தானிய வங்கியில் சேமிக்கப்பட்டு அக்கிராமத்தில் உள்ள 56 குடும்பங்களுக்கு 3 வருடங்களுக்கு தேவையான விதை மற்றும் தானியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் தற்போது எனது பண்ணையில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்த்து வருகிறேன். நாங்கள் எங்களுக்கு தேவையான மட்குஉரத்தை தயாரித்து கொள்கிறோம், அதற்கு தேவையான நீரும் எங்களிடம் உள்ளது. எனது பேரக்குழந்தைகள் எங்களைப்போல் பசி பட்டினியை சந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்ணுவதற்கு தேவையான ஆரோக்கியமான உணவு எங்களிடம் உள்ளது. தற்போது நான் எனக்கும் , அடுத்த தலைமுறைக்கும் வேண்டிய வாழ்வாதாரத்திற்கு நிலையான ஆதாரத்தை பெற்றுள்ளேன் என சுமனி ஜேஜாடியா புன்னகையோடும், மனநிறைவோடும் தொிவிக்கிறார்.
குலசுவாமி ஜெகன்நாத் ஜெனா
Kulaswami Jagannath Jena Project Coordinator in ECO VILLAGE DEVELOPMENT, Agragamee, Kashipur, Rayagada, Odisha, India. www.agragamee.org E-mail id: kulaswami13@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 3



