ஒடிசாவில் உள்ள குடியா கோண்ட் பழங்குடி சமூகம், சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப்பயிர் வேளாண் சாகுபடி முறையில் நல்ல அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். சமூக அளவிலான விதை வங்கிகளையும், கலாச்சார விதை திருவிழாக்களை புதுப்பிப்பதன் வாயிலாக இந்த பழங்குடியின சமூகங்கள் தாங்கள் இழந்த உணவு பல்வகைத்தன்மையையும், இறையாண்மையையும் மீட்டெடுத்துள்ளனர்.
கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள குடியா கோண்ட் பழங்குடியின சமூகம் தங்களின் ஒரே பகுதி நிலத்தில் குறைந்தபட்சம் 40 -50 வகையான பல்வேறு பயிர்களை பயிரிட்டு வந்தனர். இருப்பினும், பசுமைப் புரட்சிக்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பங்களையும், அதிக விளைச்சல் தரும் ஓரினச் சாகுபடி முறைகளுக்கு மானிய உதவிகளை பெருமளவில் அளித்ததன் காரணமாக, அவை பாரம்பாியமாக பயிரிடப்பட்டுவந்த கலப்பு பயிர் சாகுபடி முறைகளான – சிறுதானியங்கள்- சோளம்- பயறுவகைகள்- கிழங்கு வகைகள் மாற்றியமைக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டில் குடியா கோண்ட் பழங்குடியின சமூகம் பயிரிட்டுவந்த கலப்புப் பயிர் சாகுபடி வகைகள் 12-13 ஆன குறைந்து விட்டது. மேலும் குடியா கோண்ட் பழங்குடியின சமூகம் உயர் விளைச்சல் தரும் ஓரினச் சாகுபடி முறைகள் மற்றும் அது தொடர்பான வேளாண் முறைகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பயிர் வகைகளின் பல்வகைத்தன்மை குறைந்ததன் காரணமாக ஒவ்வொரு மக்களும் எடுத்துக்கொள்ளும் முக்கியமாக ஊட்டச்சத்துக்களும் பெருமளவில் குறையத் தொடங்கியது.
நிர்மான் என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின சமூகத்தினரோடு சர்ந்து அந்த பகுதியில் அவர்கள் இழந்த பயிர் பல்வகைமையை மீட்டெடுக்கவும், பெண்கள் வேளாண்மையில் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும் வகையில் தனது பணிகளை தொடங்கியது.
சமூகத்தை புரிந்து கொள்ளல்:
2011 ஆம் ஆண்டு குடியா கோண்ட் பகுதியில் பாரம்பாிய சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்பு பயிர் சாகுபடி முறைகள் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்த நிலைமையை மதிப்பீடு செய்வதற்கான ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 3 கந்தமால் மாவட்டத்தில் உள்ள 3 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 10 கிராமங்களில், குடியா கோண்ட் சமூகத்தின் 350 குடும்பங்களை உள்ளடக்கிய ஆய்வை நடத்தியது.
கோண்ட சமூகமானது மலைச்சாிவுகளிடையே நடைபெறும் மாற்றி மாற்றி இடம் பெயர்ந்து நடைபெறும் வேளாண்மை (பொடு சாசா என உள்ளூரில் அழைக்கப்படுகிறது – பெரும்பாலும் மானாவாரி) மற்றும் மரவேலைகளுக்கில்லாத காட்டு பொருட்களை விற்பது, மற்றும் கூலி வேலை போன்றவற்றையே தங்களின் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளது. டோங்கார் சாகுபடியானது (டோங்கார் என்பது சிறு மலைப்பிரதேசத்தின் அருகே சமூகங்கள் தங்கி வசிக்குமிடம்) மலைக்குன்றுகளின் சாிவு மற்றும் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபெறும். இது பழங்குடியின மக்களின் பொருளாதாரத்திற்கு மையமான செயல்பாடாக அமைந்துள்ளது. பயிர் பல்வகைமை, மிகுந்த அளவு இயற்கை வளம் மற்றும் மிகுந்த பாரம்பாிய அறிவு போன்றவற்றை கொண்டிருந்த போதிலும், பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஏழ்மையானது மிகவும் அதிகமாக இருந்தது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடிய கொண்ட் பகுதியில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் குறு விவசாயிகள் மற்றும் எஞ்சிய விவசாயிகள் சிறுவிவசாயிகள் ஆவார். பெரும்பாலான இடங்களில் மண் சிகப்பு மண்ணாகவும், நீரை பிடித்து வைத்துக்கொள்ளும் திறன் குறைவாகவும் இருப்பதால், அவை காரிப் பருவத்தில் பெருமளவு நீர் வழியும்போது அடித்துச் செல்லப்பட்டு மண் அரிமானம் ஏற்பட்டு பாதிப்படையும்.
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பகுதிகளில் சிறுதானியங்கள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. உண்மையில் இந்த காரணங்களுக்காகவே சில ஏழ்மையான மற்றும் விளிம்புநிலை சமூகங்கள் பல நெடுங்காலங்களாக சிறுதானியங்களை வளர்த்து வந்துள்ளனர். கூடுதலாக சிறுதானியங்கள் சாகுபடியானது பழங்குடியின சமூகங்கள் மத்தியில் இயற்கையோடு ஒன்றாகி இருக்கும் வகையில் ஆழமாக வேறூன்றியுள்ளது. குடியா கோண்ட் சமூகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுதானிய சாகுபடியை இயற்கையோடு இணக்கமாக வாழும் ஒரு வழி முறையாகவே கருதினர். குடியா கோண்ட் சமூகம் இன்னும் பாரம்பாிய சிறுதானிய சாகுபடியை கலப்பு வேளாண் முறைகளின் அடிப்படையில் பயிரிட்டு வருவதும், அவர்களின் பண்ணைகளில் பாரம்பாிய பயிர்களின் பன்மயத்தை பராமாித்து வருவது கண்டறியப்பட்டது. தற்போது, வெறும் 12 வகையான பாரம்பாிய பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சமூகங்கள் மத்தியில் சிறுதானியங்களை நுகர்வதும் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு எடுக்கும்போதும், சிறுதானியங்களை உண்பது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. உண்ணக்கூடிய கிழங்கு வகைகளும், அவைகள் கிடைக்காத பட்சத்தில் அல்லது அப்படியே சந்தையில் விற்று அரிசியை வாங்க முடியாததாலும், அதன் நுகர்வும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இதே போக்கு பருப்பு வகைகளை நுகர்வதிலும் தொடர்கிறது. குறிப்பிடத்தக்க அளவு பருப்பு வகைகள் பணத்திற்காக விற்கப்பட்டு, அதன் மூலம் அரிசி, பொருட்கள் மற்றும் மது பானங்கள் வாங்கப்படுகின்றன. மேலும் குடியா கோண்ட் சமூகம் அவர்களின் குடும்ப மருத்துவ செலவினங்கள் அண்மை வருடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது.
நிர்மான் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட 3 முக்கியமான விசயங்கள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பாிய வேளாண் முறைகளில் சமூகத்தில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றுவதும், ஆனால் அதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமூகங்கள் இணைந்த அடிப்படையில் நடைபெறும் செயல்பாடுகளான விதை வங்கிகள் மற்றும் விதைத் திருவிழாக்கள் மறைந்து விட்டனர். மேலும் பெண்கள் ஆண்டு ஆண்டு காலமாக அனுபவித்து வந்த டொன்கார் நிலங்களின்மேல் உரிமை இழந்தால், அவர்களுக்கான பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவற்றின் அடிப்படையில், பாரம்பாிய பெண் விவசாயிகளின் பங்கிற்கான அங்கீகாரத்தை மீட்டெடுக்கவும், விதை வங்கிகள் மற்றும் விதைத்திருவிழாக்கள் போன்ற சமூக அடிப்படையிலான செயல்பாடுகளை புதுப்பிக்கவும், உள்ளூர் சமூகங்களின் டோன்கால் மற்றும் ஆண்டுஆண்டு கால நில உரிமைகளை அவர்களின் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காக (குறிப்பாக பெண்களுக்கு) சட்ட பூர்வ அங்கீகாரங்களை பெறுவதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கவும், நிர்மான் அணுகுமுறைகளை உருவாக்கியது.
பாரம்பாிய வேளாண் நடைமுறைகளை புதுப்பித்தல்:
2012 ஆம் ஆண்டில், நிர்மான் அமைப்பானது சமூகங்களோடு இணைந்து கலப்பு மற்றும் உயிர்பன்மய மற்றும் நிலைத்த வேளாண் முறைகளில் பணிகள் மேற்கொள்ள ஆரம்பித்தது. அதன் முதல் படியாக பங்கேற்பு கிராம மதிப்பீடு முறைகளை நடத்தி அதன் மூலம் அனைத்து கிராமங்களிலும் அடிப்படையான தகவல்களை தொகுத்தது. இதில் திரட்டப்பட்ட தகவல்களில் குடும்ப வருமானம், பாரம்பாிய வேளாண் செயல்முறைகள் பின்பற்றப்படும் விவரங்கள், விதைகளின் பன்மய தன்மையின் வீச்சு போன்ற பல்வேறு விசயங்கள் தொகுக்கப்பட்டன. பாரம்பாிய வேளாண்மை நடைமுறைகளை புதுப்பிப்பதற்காக வேலைகளில் சமூகங்களை உற்சாகப்படுத்தும் விதமாக, கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் பாரம்பாிய பயிர் வகைகளின் பன்மயத்தன்மை, பாரம்பாிய வேளாண் நடைமுறைகள் மற்றும் நிலைத்த வேளாண்மை போன்றவை அழிந்து வருவதன் காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. முதல் வருடத்தில், திட்டத்தின் செயல்பாடுகளாக கலப்புப்பயிர்களை அடிப்படையாக கொண்ட சிறுதானியங்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளும், இரண்டாம் வருடத்தில் நிலைத்த வேளாண் நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் கிராம அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்கள் கலப்புப் பயிர் வேளாண்மையை நடைமுறைப்படுத்தி பாரம்பாிய வேளாண் உயிரினப்பன்மய முறைகளை கடைபிடிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.
விதைப் பன்மயத்தை மீட்டல்:
எங்களின் செயல்பாடுகளில் முக்கியமான வழிமுறை பெண்கள் தலைமையேற்று நடத்தும் அணுகுமுறைகளை உருவாக்கி, அவர்களுக்கு தங்களின் உணவு உற்பத்தி முறைகள் மற்றும் பாரம்பாிய வேளாண் உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதை வலியுறுத்துவதாக இருந்தது. கிராம அளவிலான கூட்டங்கள் பெண்களோடும், கிராம அளவிலான நிறுவனங்களோடு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 21 கிராம அளவிலான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்கள் சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டு சமூக விதை வங்கிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் விசயங்களில் பயிற்றுவிக்கப்பட்டனர். சமூகத்திற்கு தேவையான விதைகளை நிறைவேற்றுவதை சமூக விதை வங்கிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 27 சமூக விதை வங்கிகள் உருவாக்கப்பட்டு, அதில் 27 கிராமங்களை சேர்ந்த 600 விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
சமூகங்கள் தங்களுக்கான பாரம்பாியமான விதைகளின் தேவைகளை மதிப்பிடப்படுகின்றன. விதை பாதுகாப்பிற்காக ஒரு முறை மட்டும் நிதிஉதவி உள்ளூர் சமூகங்களுக்கு 12 வகையான பாரம்பாியமான பயிர்கள் கொடுக்கப்பட்டன. இந்த 12 பயிர் வகைகளும் ஒரு பயிர் சாகுபடி காலத்தில் மீட்டெடுக்கப்பட்டன. தற்போது, சமூக அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதை வங்கிகள் 55 வகையான பாரம்பாிய விதைகளை பாதுகாத்து வருகின்றன. அவற்றில் சிறுதானியங்கள், சோளம், பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் உண்ணக்கூடிய கிழங்கு வகைகள் அடங்கும். சமூகங்கள் தற்போது 7 வகையான பாரம்பாிய நெல் வகைகள், 6 வகையான பாரம்பாிய சோள வகைகள், 3 வகையான பாரம்பாிய கேழ்வரகு வகைகள், 3 வகையான பாரம்பாிய சாமை வகைகள், 2 வகையான பாரம்பாிய குதிரை வாலி வகைகள், 2 வகையான பாரம்பாிய கம்பு வகைகள், 3 வகையான பாரம்பாிய திணை வகைகள், 4 வகையான பாரம்பாிய துவரை வகைகள், 2 வகையான பாரம்பாிய மக்காச் சோளம வகைகள், 2 வகையான பாரம்பாிய தட்டை பயறு வகைகள், 3 வகையான பாரம்பாிய அவரை வகைகள், 4 வகையான பாரம்பாிய நாட்டு அவரை வகைகள், 2 வகையான பாரம்பாிய உளுந்து, மற்றும் கொள்ளு வகைகள், 17 வகையான பாரம்பாிய உண்ணக்கூடிய கிழங்கு வகைகள் போன்றவை கலப்பு பயிர் வேளாண் முறைகளின் கீழ் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும், சமூகங்கள் 3 வகையான ஆமணக்கு, 2 வகையான கடுகு மற்றும் அதனுடன் நைஜர் மற்றும் எள்ளு, 7 வகையான காய்கறிகள், 17 வகையான உண்ணக்கூடிய கிழங்கு வகைகள், 2 வகையான மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு, வெங்காயம் மற்றும் சில இதர உள்ளூர் தானியங்கள் மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு வருகின்றனர். பாரம்பாிய பயிர்களை புதுப்பிப்பதிலும், சமூக அளவிலான விதை வங்கிகளை நிர்வகிப்பதிலும் மற்றும் பாரம்பாிய வேளாண் உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதிலும், பெண் விவசாயிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.
விதைப் பாிமாற்றத்தை வழிநடத்தும் சமூக அளவிலான விதைத் திருவிழாக்கள்:
குடியா கோண்ட் சமூகமானது, புர்லங் யாத்ரா என உள்ளூரில் அழைக்கப்படும் உயிரினப் பன்மய திருவிழாவை பயிர் அறுவடைக்கு பிறகு கொண்டாடுகிறது. இந்த திருவிழாவானது அன்னை பூமிக்கும் விவசாயத்திற்கு அடிப்படையான விதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. விதை திருவிழாக்கள் பாரம்பாிய விதைகளை பாிமாறிக்கொள்ளும் ஒரு தளமாக மட்டுமல்லாமல், அவற்றை பாதுகாக்கவும், அதன் வகைகளை அதிகப்படுத்துவதற்கான ஒரு களஞ்சியமாக திகழ்கிறது.
கடந்த 4 வருடங்களாக நிர்மான் இந்த புர்லங் யாத்ராவை கொண்டாடப்படுவதை வழிநடத்துகிறது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் இந்த சமூகத்தை அடிப்படையாக கொண்ட விதை திருவிழாக்களில் 700 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். 60க்கும் அதிகமான பாரம்பாிய விதைகள் விவசாயிகள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டும், பாிமாறப்பட்டும் வந்துள்ளது. பெண் விவசாயிகள் இந்த உயிரினப் பன்மயத் திருவிழாவை கொண்டாடுவதில் மீண்டும் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர்.
நிலம் மீதான வளரும் உரிமை
குடியா கோண்ட் சமூகத்திற்கு உள்ள மற்றுமொரு சவான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பரம்பரையாக தாங்கள் ஆண்டு அனுபவித்து வந்த நில மற்றும் சமூக வள ஆதாரங்கள் மீதான உரிமை அங்கீகாிக்கப்படாததாகும். வேளாண்மையில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றுவதால், உள்ளூர் சமூகத்திடம் இருந்த சட்ட பூர்வமான அங்கீகாரத்தை அவர்கள் பரம்பரையான தனிப்பட்ட நிலத்தின் மீது பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த நிலங்கள் சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும். வன உரிமைச் சட்டம் குறித்த உள்ளூர் சமூகங்கள் தகவல்கள் பெறவும், அந்த நிலங்கள் மீது தங்கள் உரிமைகளை கோருவதற்கான வழிமுறைகள் குறித்தும் கிராம அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒட்டு மொத்த இந்த வழிமுறைகள் சமூகத்தில் உள்ள தன்னார்வலர்கள் ஆதரவோடு துவங்கப்பட்டது. மொத்தமாக 89 குடும்பங்கள் தங்களின் நிலங்களின் மீதான தனித்தனியாக உள்ள பரம்பரை நில உரிமையை பெற்று பயனடைந்தனர். தனிப்பட்ட நிலச் சொத்துக்களின் மேல் பெண்களுக்கு இணைந்த சொந்த உரிமையும் வழங்கப்பட்டது. குடியா கோண்ட் சமூகத்தில் 15 கிராமங்களில் வன வள ஆதாரங்கள் மீதான சமூகத்தின் உரிமைகள் கொடுக்கப்பட்டன. தனிப்பட்ட மற்றும் சமூக நிலம் மற்றும் வள ஆதாரங்களின் உரிமைகள் பங்குதாரர்களுக்கு அவர்களின் உணவு உற்பத்திக்கும், உணவு இறையாண்மைக்குமான உரிமையை பலப்படுத்தும் நோக்கில் இவை மேற்கொள்ளப்பட்டன.
முடிவுரை:
அந்த சிறிய நிலப்பரப்பில் இருந்து கூடுதல் மகசூல் மட்டுமன்றி அதிக காலத்திற்கு மகசூல் கிடைப்பதை சமூகங்கள் அனுபவபூர்மாக கண்டனர். இழந்த பாரம்பாிய பயிர் வகைகளின் விதைகள் கிடைக்கப்பெறுவது அவர்களின் பயிர் கால அட்டவணையில் 45-60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த முயற்சியின் காரணமாக, குடியா கோண்ட் சமூகம் உணவு தன்னிறைவுக்கு மிக அருகில் சென்றுள்ளனர். நிகழ்காலத்தில் வேளாண்மையில் ஏற்பட்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வாக, பெண்களை மையப்படுத்தி சமூகங்களை சுயபலம் மிக்கவர்களாக, சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் உயிரினப் பன்மய வேளாண் முறைகளே தீர்வாக அமைகின்றன.
நன்றிக்குரியவர்கள்:
காந்தமாலில் நடைபெற்ற இந்த முயற்சிக்கு துணையாக இருந்த சிறுதானியங்களுக்கான இந்திய கூட்டமைப்பு (மினி) மற்றும் ஆக்சன் எய்டு நிறுவனங்களுக்கும், கருத்துக்கள் வழங்கிய வேளாண் முறை வல்லுநர் முனைவர். நிகமானந்தா ஸ்வான் ஆகியோருக்கு நிர்மான் நன்றி தொிவிக்கிறது.
திருமதி. யசோதா மஹியும் அவரது கணவர் திரு. அசோக் மஹியும் கந்தமால் மாவட்டத்தில் உள்ள தும்மிடிபண்டா வட்டத்தில் உள்ள டுபி கிராமத்தை சேர்ந்தவர்கள். திருமதி. மஹி அந்த கிராம பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர். இவர்களின் குடும்பத்திற்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் முக்கிய பயிர்களாக பாரம்பாிய சிறுதானியங்கள், நெல், பயறு வகைகள், கிழங்குகள் மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மலைச் சாிவுப் பகுதிகளுக்கு மத்தியில் இந்த குடும்பம் மாறி மாறி இடம் பெயர்ந்து மேற்கொள்ளும் வேளாண்மையை செய்து வருகின்றனர். கூடுதலாக, இந்த குடும்பம் பயிரிடப்படாத மரவேலைக்கு பயன்படாத வன பொருட்களான காட்டு கிழங்குகள், காளான்கள், உண்ணக்கூடிய இலைகள் மற்றும் கனிகளை சேகாித்து வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாடுகள் காரணமாகவும், தாறுமாறாக பெய்துவரும் பருவ மழையின் காரணமாகவும், மாறி மாறி இடம் பெயர்ந்து மேற்கொள்ளும் வேளாண் முறை ஒழிக்கப்பட்டு, பயிர் பன்மயத்தன்மையும் குறைந்து, அதன் விளைவாக குடும்பத்தின் வேளாண் உற்பத்தி குறைந்தும் மற்றும் பாரம்பாிய விதை வகைகளை இழக்கும் நிலை இருந்தது.
2012 நிர்மான் நிறுவனத்தின் வாயிலாக திருமதி. மஹி குடும்பம் இடம் மாறி மாறி மேற்கொள்ளும் வேளாண்மையை திரும்ப ஆரம்பித்தது. படிப்படியாக பயிர் மற்றும் விதை பன்மயம் அதிகாித்தது. திருமதி. மஹி குடும்பம் பயிரிட்ட சிறுதானியங்களின் வகைகள் 7 லில் இருந்து 25 ஆகவும், எண்ணெய் வித்துக்கள் 2 லில் இருந்து 7 ஆகவும், பயறு வகைகள் 5 லில் இருந்த 12 ஆகவும் உயர்ந்தது.
திருமதி. மஹி பருவநிலை மாற்றங்களில் இருந்து பயிரை காப்பதற்காக பயிர் விதைப்பு நேரத்தை எப்படி சீரமைப்பது என்பதை கற்றுக் கொண்டார். தாமதமாக பயிரை விதைப்பு செய்ததன் காரணமாக பயிர்கள் பூக்கும் நேரத்தில் முன்கூட்டியே தீர்மானிக்க இயலாக வகையில் மழை பெய்திருந்தாலும் அவரின் பயறு வகைப் பயிர்கள் பாதிக்கப்பட வில்லை. கிராமத்தில் உள்ள மற்றவர்கள் 3 குவிண்டால் மட்டுமே பயறு வகைப்பயிர்களில் அறுவடை செய்திருந்த தருணத்தோடு ஒப்பிடுகையில் இவர் 7 குவிண்டால் அறுவடை செய்திருந்தார். பயறு வகைப் பயிர்களின் குறைவான உற்பத்தியானது சந்தையில் கூடுதல் விலையாக கிலோவிற்கு ரூ. 40 முதல் ரூ. 65 வரை திருமதி. மஹியின் குடும்பத்திற்கு கிடைக்குமளவிற்கு வருமானத்தை ஈட்டித் தந்தது. உபாியான பயறு வகைகளை பயிர்களை விற்றதன் வாயிலாக அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 42,250 கிடைத்தது. இதன் மூலம் அவர்களின் குடும்பம் உள்ளூர் வட்டிக்கடைக்காரர்களிடம் தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பத்தின் மருத்துவச் செலவிற்காக கடனாக வாங்கியிருந்த ரூ. 10000த்தை அடைக்க முடிந்தது. மீதமிருந்த ரூ. 32,250 ஐ அவர்களின் குடும்பம் தங்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்காக சேமிக்கவும், இனி உள்ளூர் வட்டிக்கடைக்காரர்களிடம் இனி கடன் வாங்கக்கூடாது என்ற முடிவை எடுக்கவும் உதவியது. மேலும், இந்த குடும்பம் இந்திரா ஆவஸ் யோஜனா திட்டத்தில் இருந்த நிதியை கொண்டு வீடு கட்டவும், துவரை விற்றதில் இருந்து கிடைத்த சேமிப்பை கொண்டு வீடு கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. குடும்பத்தின் உணவு உத்திரவாதமும், வாழ்க்கை தரமும் மேம்பாடு அடைந்து, படிப்படியாக குடும்பத்தின் வருமானம் அதிகாித்தது. திருமதி. மஹி வறட்சியை வெற்றி கொண்ட உற்சாகத்தில் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இல்லாவிட்டால் அவரது குடும்பத்தின் பொருளாதாரம், உணவு மற்றும் வாழ்வாதார உத்திரவாதம் மிகப் பொிய பிரச்சனையில் சிக்கியிருக்கும்.
கந்தமால் புர்லாங் யாத்ராவில் எதிரொலித்த விதைக்கான விடுதலை
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள குடியா கோண்ட் சமூகங்கள், ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ஒரு வார காலத்திற்கு பாரம்பாிய விதை திருவிழாவை கிராம அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான சமூக விதை திருவிழா மார்ச் 5, 2017 அன்று ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள துமுடிபான்டா வட்டத்தின் பெல்கார் கிராம பஞ்சாயத்தில் உள்ள துக்கலா கிராமததில் நடைபெற்றது. 5 கிராம பஞ்சாயத்தில் உள்ள உள்ளூர் சமூகங்கள் இதில் பங்கேற்றனர். இந்த திருவிழாவில் 600க்கும் மேற்பட்ட ஆதிவாசி விவசாயிகளும் பங்கேற்றனர்.
திருவிழாவானது குடியா கோண்ட் சமூக பெண்கள் தங்களின் தலையில் விதைகளை சுமந்து வந்து தங்களிடம் உள்ள சிறப்பான விகைளை திருவிழா நடைபெறும் இடத்தில் காட்சிப்படுத்திய நிகழ்வோடு துவங்கியது. 90 வகைகளுக்கும் அதிகமான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை விவசாயிகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இது ஆதிவாசி விவசாயிகள் ஒன்றாக கூடி தங்களுக்குள் உள்ள பாரம்பாிய அறிவு, கருத்துக்கள் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விசயங்களை பாிமாறி கொள்வதற்கான ஒரு தளமாக உள்ளது. ஆதிவாசி பெண் விவசாயிகள் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளில் பாரம்பாிய விதைகளை பாதுகாப்பதன் மூலம் தற்சார்பு அடைந்து வருவது குறித்து பேசினர். குடியா விவசாயிகள் தங்களின் சிறப்பான பாரம்பாிய அறிவு மற்றும் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு உருவான உயிரினப் பன்மய வேளாண் முறைகளை புரிந்து கொள்வது குறித்தும், அது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பாிமாறப்பட்டது என்பது குறித்து நன்றியுடனும், அதன் சிறப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் பேசினர்.
பாரம்பாிய அறிவை பகிர்ந்து கொள்வதற்கான குடியா கோண்ட் இந்த விதை பாதுகாப்பு முயற்சிகளை பரவலாக்க இந்த கொண்டாடங்களை கிளஸ்டர் அளவில் நடத்தும் வகையில் நிர்மான் வழிநடத்தியது. நிர்மான் இயக்குநர் திரு. பிரசாந்த் மொகந்தி, ஆத்மா திட்டத்தின் துணை திட்ட இயக்குநர் திரு. ஹெமண்ட் தாஸ், பத்திரிக்கையாளர் திரு. திலீப் சுபுடி, சமூக ஆர்வலர் திரு. பிரமோத் தாஸ், தானம் அறக்கட்டளையின் மாநில் ஒருங்கிணைப்பாளர் திரு. பாசண்ட நாயக் திருவிழாவில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். வேளாண் உயிரினப் பன்மயத்தை பாதுகாக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சனதுகேலா கிராமத்தின் திருமிகு. ராஸ்மிடா மஹி, புகுர் கிராமத்தின் திருமிகு. சுசான்தி மஹி, சரதாபுர் கிராமத்தின் திருமிகு. புடுலி பாட்மஜ்கி மற்றும் பிடாபாடி மற்றும் டியொகாடா மற்றும் காலம்குடா கிராமத்தை சேர்ந்த இந்த கொண்டாட்டத்தின்போது கௌரவப்படுத்தப்பட்டனர். சமூக விதை திருவிழாவானது குடியா கோண்ட் சமூகத்தின் பாரம்பாிய நடனம் மற்றும் அவர்களின் பாரம்பாிய விதைகளை குடியா கோண்ட் மற்றும் கோண் சமூகத்திடம் பகிர்ந்து கொண்டதோடு நிறைவடைந்தது.
பிரசாந்த மொகந்தி மற்றும் கண்ணா கே. சிரிபுரபு
Prasant Mohanty Executive Director NIRMAN, S-3/751- Niladri Vihar, P.O: Sailashree Vihar, Bhubaneswar - 751021, India. E-mail: prasant@nirmanodisha.org Website: http://www.nirmanodisha.org
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1



