சிறு விவசாயிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வது


வேளாண் உயிர்ச்சூழலை மேம்படுத்துவதில் அரசு சாரா நிறுவனங்கள் முன்னோடிகள்.  விவசாயிகளை வளர்ச்சியின் பங்குதாரர்களாக உருவாக்கி, பி.ஏ.ஐ.எப் என்ற நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் 505 கிராமங்களில் 21000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தை மேம்படுத்தியுள்ளது. முக்கிய இடுபொருட்களான விதைகள், விதைக்கும் பொருட்கள் மற்றும் அறிவு மற்றும் உற்சாகம் அளிப்பது மட்டுமே அவர்கள் தற்போது இருக்கும் நிலையற்ற வேளாண் முறையில் இருந்து நிலைத்த பாதையை நோக்கி செல்வதற்கு போதுமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பழ மரங்கள், காட்டு மரங்கள் (தீவன மரங்கள், இழைதழை கொடுக்கும் வகைகள், மரவேலைக்கு பயன்படும் மரங்கள், எரிபொருளுக்கான மர வகைகள்) மண் மற்றும் நீர் மேலாண்மைக்காக வரப்புகள், அதன் மேல் தீவன மரங்கள் என சிறு மற்றும் குறு பண்ணையில் இணைத்த பி.ஏ.ஐ.எப் நிறுவனத்தின் (மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண்மையானது) கதையானது 1985 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. 1985 -1990 களில் மைசூர் மாவட்டத்தில் உள்ள குன்சர் தாலுக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண்மையானது பாிட்சாத்த முறையில் செயல்படுத்தப்பட்டது.
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறை என்பது என்ன?
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையானது ”வாடி” என்ற பெயாில் பிரபலமாக அறியப்படுகிறது. வாடி என்ற குஜராத் மொழி சொல்லுக்கு ”ஆர்ச்சட்/தோப்பு” என்று பொருள்.  மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறை என்ற பட்டியலில் குறைந்த செலவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளான தோட்டக்கலை மரங்கள், காட்டு மரங்கள், தீவன மரங்கள், தீவன புற்கள், ஊட்டமேற்றிய மட்கு உரங்களை பயன்படுத்துவது, இயற்கை முறையில் நோய் மற்றும் பூச்சி நிர்வாகம் செய்வது, பால் தரும் கால்நடைகளை வளர்ப்பது, சிறிய அசைபோடும் விலங்குகள் வளர்ப்பது, மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகளை கையாளுவது போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இந்த முறையில், விவசாயிகள் 35 முதல் 40 வகையான பழ மரங்களை (மா, புளி, முந்திரி, கொய்யா மற்றும் பல) மற்றும் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 வகையான காட்டு மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்தப்பட்டது. அதன்படி பழ மரங்கள் பயிரிடப்படும் நிலங்கள் அல்லது அவற்றை வெளிப்புற வரப்பு ஓரங்கள் அல்லது உள்புற வரப்பு ஓரங்களிலோ நடலாம்.  நட்ட 5 ஆவது ஆண்டில் இருந்து பழ மரங்கள் பழங்களை தரத் தொடங்கி விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்.
காட்டுத்தாவரங்கள் வரப்புகளிலும், நிலத்தின் எல்லைகளிலும் பயிரிடலாம். காட்டுத் தாவரங்களை கொண்டுவரும் போது விறகாக பயன்படும் மர வகைகளான அகேசியா ஆரிகுலிபார்மிஸ், கேசியா கிளைரிசிடயா, மர வேலைகளுக்கு பயன்படும் தேக்கு, சில்வர் ஓக், மிலியா டுபியா, டால்பர்ஐியா போன்றவை தேவைப்படும். அகத்தி, எரித்திரினியா, சூபாபுல் மற்றும் முருங்கை போன்றவை நல்ல தீவன உற்பத்தி கொடுக்கும் மரங்களாக இருப்பதால் பால் உற்பத்தி செயல்பாடுகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். நட்ட நான்காவது ஆண்டில் காட்டுத் தாவரங்கள் அதிக இலைதழைகளையும், விறகுக்கான மரத்தையும் கொடுக்க ஆரம்பிக்கும்.  காட்டுப்பயிர்கள கொடுக்கும் இலைதழைகளை மூலப்பொருளாக கொண்டு நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரசாயன உரங்களின் தேவையை குறைப்பதோடு புவிமண்டலத்தில் நைட்ரஸ் வாயுக்கள் உமிழ்வை குறைக்கவும் உதவும்.  நட்ட 5 ஆம் ஆண்டில் தேவையான எரிபொருளுக்கான/விறகுக்கான மர உற்பத்தி கிடைத்துவிடும். இது வீட்டுத் தேவைக்கான மர தேவைகளை பூர்த்தி செய்வதோடு, காடுகளுக்கு ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க உதவும்.  இங்ஙனம் 5-6 வருடங்களில் மரத்தை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளினால் தாிசு நிலங்கள் உணவு உத்திரவாதம், தீவன உற்பத்தி மற்றும் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் தொன்மைவாய்ந்த பண்ணைகளாக உருவாகும்.
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறை அல்லது இயற்கை வேளாண்மை செய்யப்படும் நிலங்களில் காணப்படும் மண்ணில் 733-3000 கிலோ அல்லது அதற்கு மேல் கார்பன்/கனிம சத்து ஒவ்வொரு ஹெக்டோிலும், ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் இருந்து சேர்க்கப்படுகிறது.  மண்ணில் கார்பன் அளவை அதிகாிப்பது பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதில் ஒரு முக்கியமான அம்சமாகும். கார்பன் அளவை அதிகம் உறிஞ்சும்போது, மரங்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் வேளாண் முறையில் நவீன வேளாண்  முறையை பின்பற்றும் நிலங்களில் ஏற்படும் தாக்கத்தை விட குறைவாக இருக்கும்.
புதிய யோசனையை ஒருங்கிணைப்பது:
வேளாண் முறையில் மரங்களை ஒன்றிணைப்பது பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஈடுசெய்யும் காப்பீடாக இருப்பதோடு மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. எனவே, மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையானது, வேளாண் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொிய அளவில் நன்மை பயக்கத்தக்கது. இருப்பினும், விவசாயிகள் மரங்கள் வளர்ந்து மகசூல் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால் இந்த வழியை அவர்கள் உணர்வதில்லை. எனவே, இந்த நிலையில் இவற்றை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு விவசாயிகளை மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறை குறித்து விளக்கி ஊக்குவிப்பதில் மிகப்பொிய பங்கு உள்ளது.
கிராமக் கூட்டங்கள், தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் குழுவிவாதங்கள் போன்றவை நடத்தப்பட்டு அவர்களுக்கு இந்த கருத்தாக்கம் தொடர்பாக, அதன் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பயன்கள் விளக்கப்பட்டன.  இதனை விளக்கும் கல்விச் சுற்றுலா ஏற்பாடு  செய்ததால் விவசாயிகளுக்கு இடையில் பாிமாற்றம் மற்றும் கற்றல் உருவாகிறது.  அதன் தொடர்ச்சியாக மரங்கள் நடுவதற்கு குழி எடுப்பது, குழி நிரப்புவது, செடிகள் நடவு முறைகள் மற்றும் பேசின் உருவாக்கம், நிழல் அமைப்பது, மூடாக்கு இடுவது மற்றும் அதனை பாதுகாக்கும் செயல்பாடுகள் குறித்து செயல் முறை விளக்கங்களும் நடத்தப்பட்டன.  நல்ல தரமான கன்றுகள் சாியான நேரத்தில் அவர்கள் நடுவதற்கு கொடுக்கப்பட்டன. நடப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஆடுமாடுகள் மேய்ந்துவிடாமல் இருப்பதற்காக உயிர் வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. கிராம அளவில் நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் பின் தொடர் கள ஆய்வுகள் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை செய்வதை உறுதிப்படுத்தின. மேலும், சந்தைப்படுத்துவது தொடர்பான இணைப்புகளை கட்டமைப்பதற்கும்,  அவற்றை அரசு துறைகளில் பலன்களை பெறும் வகையில் இணைப்பதற்கு வழிநடத்தப்பட்டது.
தாக்கங்கள்
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் நிலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மண்ணின் உற்பத்தித்திறன் அதிகாித்துள்ளது.  திட்டத்தின் இலக்கு கிராமங்கள் இருந்த மரங்களின் எண்ணிக்கை அந்தப்பகுதியில் நுண் காலநிலையை அதிகாித்தது.  மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையின் காரணமாக, மண் மற்றும் நீர் சேகாிப்பு, இயற்கை விவசாயம், கால்நடைகள் மற்றும் குடும்ப வருமானமும் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு அடைந்தது.  சராசாியாக மரக்கன்றுகள் நட்ட 5 ஆவது ஆண்டில் இருந்து ஒரு ஏக்கருக்கு ரூ. 10000 முதல் ரூ. 12000 வரை சம்பாதிக்க முடிந்தது.  இது, அதே நிலத்தில் ஊடுபயிர்களில் இருந்து கிடைத்த வருமானத்தோடு சேர்த்து கூடுதலாக கிடைத்தது.
வரப்புகளிலும், பொட்டல் நிலங்களிலும் பயிரிடப்பட்டிருந்த தீவன மரங்கள், சிறு செடிகள் மற்றும் புற்கள் தீவனம் கிடைப்பதை மேம்படுத்தியது.  இது விவசாயிகளை சிறு கால்நடைகளான ஆடுகள்/செம்மறி ஆடுகள் அல்லது ஒன்றிரண்டு பால் மாடுகள் வளர்ப்பதற்கு அவர்களை ஊக்குவித்தது.
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளை பின்பற்றிய குடும்பங்களில் அவர்களுக்கு தேவையாக எரிபொருள்/விறகுகள் அவர்களின் பண்ணையில் இருந்தே கிடைத்ததனால், அது பெண்கள் வெகுதொலைவு சென்று காடுகளுக்கு அருகிலும், பொது நிலங்களிலும் விறகு சேகாிக்கும் கடினமான பணியை வெகுவாக குறைத்தது. அதே நேரத்தில் காடுகளும் அழிவின் அழுத்தத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.
அதிகளவில் இலைதழைகள் கிடைப்பதால், விவசாயிகள் சிறு கால்நடைகளான ஆடுகள்/செம்மறி ஆடுகள் அல்லது ஒன்றிரண்டு பால் மாடுகள் வளர்ப்பதற்கு ஊக்குவித்தது.
திட்டத்தின் பங்குதாரராக விவசாயியின் பங்கெடுப்பை மேம்படுத்தியது.
பி.ஏ.ஐ.எப் இந்த மரங்களை அடிப்படையாக கொண்ட இந்த திட்டத்தை பல்வேறு நிதி நிறுவனங்களான டானிடா, கப்பார்ட், இந்திய அரசு, கர்நாடகா அரசு, நபார்ட் மற்றும் தேஷ்பாண்டே பவுண்டேசன் போன்றவற்றின் உதவியோடு நடைமுறைப்படுத்தியது.  இந்த அனைத்து திட்டங்களிலும், நிதி நிறுவனம், செயல்படுத்தும் நிறுவனம் மற்றும் விவசாயிகள் அனைவரும் இணைந்து வேலை செய்தனர். இந்த சில ஆண்டுகளில், இந்த திட்டங்கள் அனைத்திலும் அவற்றை திட்டமிடுதலிலும், நடைமுறைப்படுத்துவதிலும் விவசாயிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது தௌிவாக தொிய வருகிறது.
திட்டத்தின் முதல் கட்டத்தின்போது, ஒவ்வொரு புதிய யோசனைகளை நடைமுறைப்படுத்தும்போதும் விவசாயிகளுக்கு ஆதரவும், பொருளாதார உதவியும் கொடுக்கப்பட்டது. மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகளில் குழி எடுப்பதற்கும், கன்றுகள் நடுவதற்கும், பாதுகாப்பதற்கும், பண்ணையில் வரப்பு போடுவதற்கும், காவல் காப்பதற்கும், வேலி அமைப்பதற்கும், கோடையில் கன்றுகளுக்கு தண்ணீர் விடுவது என அனைத்திற்கும் நிதி ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டது. அது மட்டுமன்றி, கல்வி சுற்றுலா, பயிற்சிகள், கள செயல்முறை விளக்கங்கள் போன்ற மற்ற செலவினங்களும் செய்யப்பட்டன. முதல் கட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ஆன செலவு  ரூ. 30000 வரை செய்யப்பட்டது.
விவசாயிகள் அதிக அளவில் இதனை தங்களின் திட்டமாக உணர்ந்து கொள்ளச் செய்வதற்காக பி. ஏ.ஐ.எப் ஒவ்வொரு நேரத்திலும் அதன் அணுகுமுறையை மாற்ற வேண்டியிருந்தது. 1995 ஆம் ஆண்டில் இருந்து செலவினங்களை பகிர்ந்து கொள்வது என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டு, அது பணமாகவும், உழைப்பாகவும் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியாக, விவசாயிகளும் குறிப்பிட்ட சில செயல்பாடுகளான குழி எடுப்பது, கன்றுகள் நடுவது, பாதுகாப்பது போன்றவற்றிற்கு தங்களின் பங்களிப்பை அளிக்க துவங்கினர். சில நிகழ்வுகளில் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ. 500 வீதம் பணமாகவும், சில வேளைகளில் உழைப்பாகவும் தங்கள் பங்கை செலுத்த ஆரம்பித்தனர். இன்று, மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையில் பண்ணையை வடிவமைக்க ஒரு ஏக்கருக்கான செலவாக ரூ. 7000 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இது மனித உழைப்பு மற்றும் நிர்வாக செலவினங்களை உள்ளடக்கியது.
மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையானது இப்போது மேம்படுத்தப்பட்டு முக்கிய இடுபொருட்களான நல்ல தரமான மரக்கன்றுகளை மானிய விலைக்கு கொடுத்து, கல்விச் சுற்றுலா மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றை மட்டும் செய்தால் போதும் என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த மாதிரியானது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு கர்நாடக முழுவதும் விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியினர் மேம்பாட்டு நிதியின் வழியாக நபார்டு இந்த மாதிரியை நாட்டின் பிற பகுதிகளில் கொண்டு செல்கிறது. இந்திய அரசின் பழங்குடியினருக்கான துறை, பி.எ.ஐ.எப் நிறுவனத்தை இந்தியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ”வாடி” முறையை செயல்படுத்துவதற்கு வளஆதார நிறுவனமாக அங்கீகாித்துள்ளது.
பெட்டிச் செய்தி 1 : இர்ப்பான் தனது எதிர்காலத்தை மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையில் பார்க்கிறார்
31 வயதுடைய இர்ப்பான் கமடோலி ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹர்பென்டிகோி கிராமத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு 3 ஏக்கர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. முன்பு இர்ப்பான் கோவாவில் ஒரு கட்டிட வேலை பார்த்து வந்தார். 8 வருடங்களுக்கு முன் தனது கிராமத்திற்கு திரும்பியபோது, வேளாண்மைக்கு நீர் உத்திரவாதம் இல்லாத சூழலில் தனது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பத்தோடு இருந்தார். தனது 3 ஏக்காில் சோளம், சாமை மற்றும் நிலக்கடலை பயிரிட்டு ஏக்கருக்கு 30,000 மதிப்புள்ள தானியங்களை ஒரு வருடத்திற்கு விளைவித்து வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு ஜோடி காளைகள் மற்றும் இரண்டு பசுக்களும் இருந்தன. பயிர்களின் கழிவுகளை தீவனத்திற்கு பயன்படுத்துவதும் மற்றும் அவற்றை தனது நிலத்திற்கு மட்கு உரமாக பயன்படுத்தியும் வந்தார். வேளாண்மையில் 6 மாதங்களும், மீதம் உள்ள 6 மாதங்கள் கூலி வேலையிலும் ஈடுபட்டு வந்தார்.
துவக்கத்தில் இந்த மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறையை கடைபிடிக்க முடியுமா, நாம் வருடத்தில் 6 மாதம் மட்டுமே இங்கு இருக்கிறோம் மற்ற நாட்களில் கூலி வேலைக்காக சென்றுவிடுவோமே, இப்படியான சூழ்நிலையில் நம்மால் வருடம் முழுக்க செடிகளை பாதுகாப்பது முடியுமா என்ற தயக்கம் இருந்தது. இருப்பினும், முடிவாக 2010 ஆம் ஆண்டில் அவர் இந்த திட்டத்தில் சேர முடிவு செய்தார். இந்த திட்டத்தின் வழியாக முக்கிய இடுபொருட்களான ஒட்டு மாங்கன்றுகள், காட்டுச் செடி கன்றுகள் மற்றும் தீவன விதைகள் கொடுத்து உதவப்பட்டது. இர்ப்பான் அதிக சிரத்தையோடு பணியாளர்கள் கொடுத்த தொழிற்நுட்ப அறிவை பயன்படுத்தி 120 மர கன்றுகளை வளர்த்தார்.  கிராமத்தில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்தும், கோடை காலங்களில் வாடகைக்கு தண்ணீர் டாங்கர் மூலமும் தண்ணீர் கொண்டு ஊற்றி செடிகளை பாதுகாத்து வளர்த்தார்.
அவரது கடின உழைப்பு மகசூல் அளிக்க துவங்கியது. 2014 ஆம் ஆண்டில் அவர் தனது தரப்படுத்தப்பட்ட மாம்பழங்களை சந்தையில் விற்றார். சராசாியாக ஒரு வருடத்தில் அவருக்கு பழங்களை விற்றதில் ரூ. 30000 வரை கிடைத்தது. மேலும், அதில் ஊடுபயிராக சோளம் மற்றும் காய்கறிகள் வளர்த்து வருகிறார்.
தற்போது, மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறை அவரின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.  ஒவ்வொரு நாளும் தனது வயலுக்கு செல்லும் அவர் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே உள்ளது, எனது வயலின் பச்சையை பார்ப்பது மிகவும் மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார்.
பெட்டிச்செய்தி 2: கலப்புப்பயிர் வேளாண்மையில் இருந்து கிடைத்த பாிசு
ஸ்ரீ. கங்கையா விபுதிமாத் என்பவர் ஹவேரி மாவட்டத்தில் சவனூர் தாலுக்காவில் உள்ள மடப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. 2008க்கு முன்னால் ஆண்டுப்பயிர்களான சோளம், மக்காச்சோளம், மிளகாய் மற்றும் பயறு வகைப்பயிர்களை மானாவாரி நிலத்தில் செய்துவந்தார். 2008 ல் தனது வேளாண்மையை பல பயிர்களை இணைத்து அதில் சப்போட்டா, மா, எலுமிச்சை, கொய்யா, கறிவேப்பிலை போன்றவற்றை பயிரிடத் துவங்கினார். தேஷ்பாண்டே பவுண்டேசனில் இருந்து சம்ருத்தி திட்டத்தின் வழியாக அவருக்கு கன்றுகள் மற்றும் விதைகள் கிடைத்தன.
கோடைக்காலத்தில் தனது மரங்களுக்கு பாதுகாப்பு நீர்ப்பாசனம் அளித்து பாதுகாத்துக் கொண்டார். தற்போது அவரது நிலத்தில் 41 சப்போட்டா, 70 கறிவேப்பிலை, 8 மா மற்றும் 6 எலுமிச்சை மரங்கள் உள்ளன. மேலும் அவர் பூச்செடிகள் (ஆஸ்டர் மற்றும் கனகாம்பரம்) தீவன மற்றும் ஆண்டுப்பயிர்களை ஊடுபயிராக தனது நிலத்தில் வளர்த்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் இருந்து தோட்டக்கலைப்பயிர்கள் மகசூல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. 2015 ஆம் ஆண்டில் சப்போட்டா மற்றும் கொய்யா பழங்களை விற்று ரூ. 10000 வருமானம் ஈட்டினார். ஒரு மாதத்திற்கு பூக்களை விற்பனை செய்வதில் இருந்து மட்டும் ரூ. 20000 பார்க்கிறார். மடப்பூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள சவனூர் சந்தையில் பூக்களை விற்பனை செய்கிறார். அனைத்தையும் சேர்த்து அவருக்கு வருடத்திற்கு ரூ. 1.8 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இது ஆண்டுப்பயிர்களில் இருந்து கிடைக்கும் அறுவடை இல்லாமல், ஏனெனில் அவற்றை தனது வீட்டு நுகர்வுக்கு பயன்படுத்தி கொள்கிறார்.  பல பயிர் வேளாண் சாகுபடி முறை எனக்கு நல்ல வருமானத்தை கொடுத்ததால் எனது மகள்களின் திருமண செலவிற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று புன்னகை மலர்ந்த முகத்தோடு கூறுகிறார் கங்கையா.
எம். என். குல்கர்னி மற்றும் எஸ். எம். ஹிர்மாத்

M N Kulkarni and S M Hiremath
BAIF
Kusumanagar,
Dharwad, Karnataka.

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...