இரசாயன முறை சாகுபடியில் இருந்து இயற்கை முறை சாகுபடிக்கு மாறுவது சிறிய உதவிகளுடன் சாத்தியமே. ஓடிசாவின் பழங்குடி சமூக விவசாயியான கோலபியின் கதை இதனை நிரூபிக்கிறது. கோலபி ஒரு இயற்கை பருத்தி விவசாயி மட்டுமல்லாது, மற்ற பயிர்களிலும் உயிர்ச்சூழல் வேளாண்மை சாகுபடி முறைகளை கடைபிடித்து அவரின் பண்ணையில் நிலைத்த தன்மையை மேம்படுத்தியுள்ளார்.
கோலபி இல்லா ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயக்கட்டா மாவட்டத்தில் முனிகுடா வட்டத்தில் உள்ள பத்மனுஜீர்காகுபா கிராமத்தில் வசிக்கும் முப்பதுகளின் இடைப்பட்ட வயதுடைய பழங்குடி இன பெண்மணி ஆவார். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய அவருக்கு கணவரும், 6 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரை, அவரின் குடும்பம், அவர்களுக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலத்தில் இருந்து அவர்களின் வாழ்விற்கான இரசாயன வேளாண்மையையே அடிப்படையாக நம்பி வாழ்ந்து வந்தது.
நீர்பாசன வசதி இல்லாத காரணத்தால், அவர்களின் குடும்பம் காரீப் பருவத்தில் நெல் பயிரை மட்டுமே சாகுபடி செய்து வந்தது. நெல் அறுவடை முடிந்தபின் நிலத்தில் எஞ்சியிருக்கும் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ராபி பருவத்தில் சில பயிர்கள் பயிரிடப்படும். அனேக சமயங்களில் குறைவான அல்லது தாமதமாக மழைப்பொழிவின் காரணமாக நெல் பயிரில் மகசூல் இழப்பை சந்திக்கும். வறட்சியான காலங்களில் அவர்களுக்கு எந்த ஒரு சமாளிக்கும் வழிமுறையும் இல்லாத சூழலில் அருகில் உள்ள அம்படோலா என்கிற நகரத்திற்கு விவசாய கூலிகளாக வேலைக்கு செல்வதற்கு நிர்பந்திக்கப்படுவர். சில சமயங்களில் கோலபியின் கணவர்கள் ஒடிசா மாநிலத்தையும் தாண்டி இடம்பெயர்ந்து வேலை தேடி செல்வார். எட்டு உறுப்பினர்கள் கொண்ட ஒரு பொிய குடும்பத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது.
இயற்கை வழி பயணம்
2011 ஆம் ஆண்டு சேத்தனா ஆர்கானிக் என்னும் இயற்கை வழி உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனம் துவரை உற்பத்திக்கான ஒரு திட்டத்தை பத்மனுஜீர்காகுபா கிராமத்தில் துவக்கியது. விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட முறைகளில் துவரை சாகுபடியில் பயிற்றுவிக்கப்பட்டனர். சோளத்தில் துவரை ஊடுபயிராக பயிரிடப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் மகிளா கிஷான் கரன பாியோஜ்னா (எம்.கே.எஸ்.பி) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மகிளா கிஷான் கரன பாியோஜ்னா (எம்.கே.எஸ்.பி) தேசிய கிராமப்புற வாழ்வாதார மிஷின் (என்.ஆர். எல். எம்.) என்ற இந்திய அரசின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான மற்றும் துயர் துடைக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் சாியான வகையில் மூதலீடுகளை செய்து பெண்கள் பங்கேற்பு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தி கிராமப்புற பெண்களுக்கு வேளாண்மையை அடிப்படையாக கொண்ட வாழ்வாதார முறைகளை உருவாக்கவும், நிலைத்திருக்கவும் செய்து, வேளாண்மையில் பெண்களை சுயபலம் மிக்கவர்களாக ஆக்குவதாகும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அக்டோபர் 2013ல் மா பாய்ரபி சுயஉதவிக்குழு ஏற்படுத்தப்பட்டது. கோலபி இந்த குழுவின் உறுப்பினராக ஆனார். இந்த சுயஉதவிக்குழுவானது, சுய உதவிக்குழுவை வலுப்படுத்துவதிலும், இயற்கை வேளாண்மை மற்றும் மட்கு உரம் தயாரிப்பு போன்றவற்றில் பயிற்றுவிக்கப்பட்டனர். இவர் வேளாண் முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு, வீட்டு வேலைகளை மற்றும் நிர்வகிக்கும் பணியில் இருந்து விவசாயியாக தன்னை மாற்றிக்கொண்டார்.
2015 ஏப்ரலில் சேத்தனா ஆர்கானிக் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக “ நிலைத்த பண்ணைகள், நிலைத்த எதிர்காலம் (எஸ்.எப்.எஸ்.எப்) என்ற திட்டத்தின் கீழ் சமூகங்களோடு இணைந்து இங்கிலாந்து நாட்டின் டிரைட்கிராப்ட் மற்றும் தி பிக் லாட்டாி என்ற நிதி நிறுவனங்களின் உதவியோடு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் உணவு உத்திரவாத்தை அதிகாிப்பதும், தென்மேற்கு ஒடிசாவின் இரண்டு மாவட்டங்களில் பருத்தி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பங்களின் துயரங்களை குறைப்பதும் ஆகும். இந்த திட்டமானது அதிக அபாயம், அதிக செலவு மற்றும் நிலைத்ததன்மையற்ற பருத்தி விவசாயத்தில் ஈடுபடும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. திட்டத்தின் மற்ற முக்கியமான அம்சங்களாக சிறு அளவில் பருத்தி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பங்களில் உள்ள பெண்கள் தகவல், தொழிற்நுட்பம் மற்றும் வருவாய் பெருக்கும் சந்தர்ப்பங்களை பெருக்கி, குடும்பங்களில் அவர்களுக்கான அந்தஸ்துகளை அவர்களின் இயற்கை வளங்கள் மீது அவர்களுக்கான நேரடி கட்டுப்பாடு, பயன்பாடு மற்றும் உடமையை பெற்றத்தருவதாகும்.
2015 ஆம் ஆண்டு வரை கோலபி நெல், பயறுவகை, சிறுதானியங்கள் மற்றும் சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வந்தார். 2015 ஆம் ஆண்டில் சேத்தனா ஆர்கானிக் உதவியுடன் அவர் இயற்கை வழி பருத்தி சாகுபடியை மேற்கொள்ள ஆரம்பித்தார். அவர் பருத்தி சாகுபடியில் பல்வேறு இயற்கை வழி சாகுபடி முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டார். பயிற்சிகள் பயிர் பருவத்திற்கு முன்னதாகவும், பருவத்தின் போதும், பருவம் முடிந்த பின்னரும் என நடத்தப்பட்டன. பயிற்சியின் போதே அவர் குறைந்த விலையில் மரபணு மாற்றம் செய்யப்படாத பருத்தி விதைகள் கொடுக்கப்பட்டு இயற்கை வழி பருத்தியை சந்தைப்படுத்துவதிலும் உதவி செய்யப்பட்டது. இதற்கும் அப்பால் அவர் சுயஉதவிக்குழுக்களை பலப்படுத்துவது, தலைமைப்பண்புகளை உருவாக்கிக் கொள்வது, தகவல் தொடர்பு மற்றும் பாலின பிரச்சனைகள் குறித்தும் பயிற்சிகளை எடுத்துக் கொண்டார்.
உயிர்ச்சூழல் முயற்சிகள்:
இந்த திட்டத்தின் வாயிலாக விவசாயிகளை மிகவும் உயிர்ச்சூழல் முறை வேளாண்மைக்கு மாற்றுவதற்கு அநேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு, நீர் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கு இயற்கை வழி திருத்தமாக வண்டல் பயன்படுத்துவது. விவசாயிகள் அதற்கேற்ற பொருத்தமான அதிக படிமங்கள் சேர்ந்துள்ள குளங்களை கிராமங்களில் கண்டறிந்தனர். இந்த குளங்களில் இருந்து சேகாிக்கப்பட்ட வண்டல் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு அதில் உள்ள இயற்கை காிமத்தின் அளவையும், மண்ணில் உள்ள சத்துக்களின் அளவையும் அறிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு, விவசாயிகள் ஆய்வங்களில் இருந்து சாதகமான முடிவுகள் தொியவந்த பின் அவற்றை எடுத்து நிலத்தில் பயன்படுத்திக் கொள்வதறகு பாிந்துரைக்கப்பட்டனர். ஒவ்வொரு விவசாயியும், குறைந்தபட்சம் 10 டன் வண்டலை ஒரு ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்த பாிந்துரைக்கப்பட்டனர். 2017-18 ஆம் ஆண்டில் கோலபி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 16 டிராக்டர் வண்டலை பயன்படுத்தியிருந்தார். இந்த வண்டல் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாராகாட்டி அணையில் இருந்து எடுத்துவரப்பட்டது. அரசாங்கம் பஞ்சாயத்துக்கள் மூலமாக குளங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்வது எளிதாக அமைந்தது.
பயிர்களின் பன்மயத்தை அதிகாிப்பது மற்றுமொறு அணுகுமுறையாக பின்பற்றப்பட்டது. பல்வேறு வகைப்பட்ட பயிர்களை அடிப்படையாக கொண்டு பயிரிடும் முறைகளை ஊக்கப்படுத்தியதால், அது குடும்பத்தின் உணவு உத்திரவாதத்தை கட்டமைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கு உதவிற்று. முன்னதாக, கோலபியின் குடும்பம் நெல்லை பயிரிட்டு தங்களின் குடும்பத்தின் நுகர்விற்கும், பருத்தியை சந்தைக்கு விற்பதற்கும் பயிரிட்டனர். பருத்தி ஒரினப் பயிராக வளர்க்கப்பட்டது.
தற்போது துவரை பருத்தியில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. அது மண்ணில் வளத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாது பிரதான பயிரில் இழப்பு ஏற்படும் போது, காப்பீடு பயிராகவும் பயன்பட்டது. பருத்தி பயிரோடு இணைக்கப்பட்ட பச்சை பயிறு, உளுந்து, மற்றும் தட்டைப்பயறு போன்றவை பொறிப்பயிராகவும், அதே வேலையில் குடும்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சாமந்தி, வெண்டை மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்கள் பொறிப் பயிராகவும் வளர்க்கப்பட்டன. சோளம் மற்றும் மக்காச் சோளம் வரப்புப் பயிராக போடப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் வந்து செல்வதை அதிகப்படுத்தியது.
தாவரங்களுக்கு கொடுக்கப்பட்ட சத்துக்களை நிலத்தில் இருந்து எடுப்பதைவிட, இலைகள் மூலம் சத்துக்களை 20 மடங்கு விரைவாக எடுத்துக் கொள்வதால், திரவ உரங்களை இலைவழி ஊட்டமாக அளிப்பதற்கு விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டனர். திரவ உரங்கள் பண்ணை உரங்கள் அல்லது தாவர பொருட்களை நீரில் ஊற வைத்து சில நாட்களிலோ, வாரங்களிலோ நொதிக்கச் செய்து தயாரிக்கப்பட்டன. அடிக்கடி கலக்குவதன் மூலம் அது பிராணவாயுவை தூண்டி நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகாிக்க உதவுகிறது. தயாரிக்கப்பட்ட திரவ உரமானது இலைவழி உரமாகவும் அல்லது நிலத்தில் நேரடியாகவும் பயன்படுத்தப்பட்டது. தாவர வளர்ச்சிப் பருவம் மற்றும் இனப்பெருக்க சமயத்தில் கோலபி அவர்கள் பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்த கரைசல் மற்றும் மண்புழுஉர கரைசல் போன்ற சில திரவ உரங்களை பயன்படுத்தினார். இந்த திரவ உரங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளில் நிறைய நுண்ணுட்ட மற்றும் பேரூட்ட சத்துக்கள் நிறைந்து காணப்பட்டு, அது பயிரின் வளர்ச்சியையும், உற்பத்தியை பெருக்குவதற்கு உதவியது.
கோலபி பருத்தியிலும் மற்ற பயிர்களிலும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் நிறைய சவால்களை சந்திக்க நேர்ந்தது. அவர் அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு சேத்தனா பூச்சிகள் மேலாண்மை தொடர்பாக நிறைய பயிற்சிகளை அளித்து உதவியது. பூச்சிகள் தாங்கப்பட்ட பயிர்களில் மூலிகை பூச்சி விரட்டிகள் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் அவருக்கு அளிக்கப்பட்டு அதன் மூலம் மூலிகை பூச்சி விரட்டிகள் மற்றும் அது குறித்த அறிவினை பெறுவதற்கு தகவல்களும் அளிக்கப்பட்டன. அவர் வேப்பங்கொட்டை திரவத்தையும், மிளகாய் -பூண்டு கரைசல் போன்றவற்றை பருத்தி மற்றும் இதர பயிர்களில் தாக்கிய பூச்சிகளை மேலாண்மை செய்வதற்கு மாற்று வழியாக கையாண்டார். வரப்பை சுற்றி ஆமணக்கு மற்றும் சோளம் பயிரிட்டதால் அது பூச்சித் தொல்லைகளை குறைக்க உதவியது. கோலபி கைவினை முறைகளாக புழுக்களின் முட்டைகளை கையால் பொறுக்கி அழித்தல், குச்சியை வைத்து அடிப்பது, மரங்களை உலுக்குவது போன்றவற்றையும் கையாண்டார்.
சில தாக்கங்கள்:
தொடர்ச்சியாக இந்த இயற்கை வழி முறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் கோலபி முன்பைவிட நல்ல மகசூலை, ஒரு சில பயிரில் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு பயிர்களில் இருந்து பெற்றார். முதல் வருடம் அவர் 2 ஏக்காில் பருத்தி பயிரிட்டு 4 குவிண்டால் மகசூல் பெற்றார். இரண்டாம் வருடத்தில் அவரின் மகசூல் 7 குவிண்டாலாக அதிகாித்து, மூன்றாம் வருடத்தில் 12 குவிண்டால் வரை உயர்ந்தது. பருத்தி பயிரை அறிமுகப்படுத்தி சேத்தனா ஆர்கானிக் மூலம் கிடைக்கப்பெற்ற பல்வேறு ஊக்க செயல்பாடுகளினால் அவரின் குடும்ப வருமானம் முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகாித்தது. அட்டவணை இரண்டில் சராசாியாக பயிர் மகசூல் அதிகாிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
திறன் வளர்ப்பு பயிற்சிகள் கோலபி போன்ற விவசாயிகளின் நம்பிக்கை அதிகாித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களான டாடா அறக்கட்டளை மற்றும் எம்.கே.எஸ்.பி மற்றும் எஸ்.எப்.எஸ்.எப் போன்ற பல்வேறு நிறுவனங்ளோடு சேத்தனா மேற்கொண்ட ஒருங்கிணைப்பு முறைகள் அவர் நிலத்தின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தியதற்கு உதவியது. தற்போது கோலபி ஒரு சான்றளிக்கப்பட்ட இயற்கை விவசாயி.
அவரின் தலைமைத்துவ பண்புகள் அவரை மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் நடைபெறும் பயிற்சிகளில் மற்றும் கூட்டங்களில் பங்குபெற்று மேம்படுத்திக் கொள்ள உதவியது. குடும்ப அளவிலும், சமூக அளவிலும் முடிவு எடுக்கும் ஆளுமையாக அவரது முக்கியத்துவம் அதிகாித்துள்ளது. கிராமத்தில் உள்ள பல்வேறு குழுக்களில் உள்ள உறுப்பினர்களோடு சேர்ந்து அங்கு நிலவும் பல்வேறு சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தற்போது அவரால் முடியும். அவரின் சமூக பொருளாதார நிலைகள் மேம்பட்டு அவர்கள் சமூகத்தில் ஒரு கண்ணியமாக வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியுள்ளது.
ஒய். எம்.எம். ஸ்ரீரிக்கர் மற்றும் தேபேசிஸ் மோகப்த்ரா
Y M M Srikar Director- Programs Chetna Organic Farmers Association 3-5-703/4, Vittalwadi, Narayanguda, Hyderabad, Telangana, India -500029 E-mail: srikar@chetnaorganic.org.in Debasis Mohapatra Supply Chain Specialist Traidcraft India, 2nd Floor, Badhe House, 6-3-788/36& 37A, Durganagar, Ameerpet, Hyderabad-16 E-mail: mohapatra.debasis@gmail.com
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2



