தமிழ்நாட்டின் பெண்ணாகரம் தாலுக்காவில் உள்ள கோட்லுமரம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 40 வயதுடைய முருகேசன் ஆவார். 8 வருடத்திற்கு முன் அவர் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதில் 5ல் 1 பங்கு பகுதி தான் திறந்த வெளி கிணறு மூலம் நீர்ப்பாசன வசதி பெற்றது.
முருகேசன் அவரது நிலத்தில் பல்வேறு வகைப்பட்ட பயிர்களாக – ஒரு ஏக்கர் நிலக்கடலையும், கேழ்வரகு மற்றும் சாமை தலா அரை ஏக்கரும் பயிரிட்டு வருகிறார். எஞ்சியுள்ள 2 ஏக்கர் நிலத்தை 4 பகுதிகளாக பிரித்து அதில் காய்கறி பயிர்களான பீர்க்கு (0.5 ஏக்கர்), புடலை (0.5 ஏக்கர்) பாகல் (0.5 ஏக்கர்), மற்றும் உளுந்து மற்றும் பச்சை பயறு கலந்தும் விதைத்தார்.
இந்த காய்கறிகளை இவர் அகலமான வரப்பு மற்றும் குழி முறையில் ஒவ்வொரு வரப்பும் 8 அடி அகலத்தில் மற்றும் ஒவ்வொரு 4 அடி இடைவெளிக்கும் மத்தியில் மேட்டுப் பரப்பில் கொடி வகை செடிகளின் விதையை விதைத்தார். இந்த முறையில் மண்ணின் பரப்பிற்கு ஈரப்பதத்தை நிலைநிறுத்த அடிக்கடி நீர்ப்பாய்ச்ச வேண்டியிருந்தது. நீர்ப்பாசனம் அளிப்பது மிகப் பொிய சவாலாக இருந்ததால், அவர் காய்கறிப் பயிர்களை நீண்ட நாட்களுக்கு ஈரப்பத அழுத்த சூழலில் நிர்வகித்து வந்தார். நீண்ட நாட்களுக்கு ஈரப்பத அழுத்த சூழலில் பயிர் இருந்ததால், பயிர் வளர்ச்சி தாமதமாகவும், குறைவாக வளர்ச்சியும் அது தண்டுகள் மிகவும் பலமற்றும், பூக்கும் தன்மை குறைவாகவும், காய்கள் பலமற்றும் காணப்பட்டது. மேலும் அவர்கள் எப்போதும் போல் நடைமுறையில் மற்ற காய்கறி விவசாயிகள் பயிரிடுவது போல் தூவிவிட்டு விதைக்கும் முறையை பின்பற்றியதால், காய்கறிகளுக்கு அதிக அளவு உரங்கள் இடுவதற்கு செலவு செய்தார்.
2015 ஆம் ஆண்டு முருகேசனுக்கு ஏ.எம்.இ பவுண்டேசன் நடத்திய வயல் வெளிப் பள்ளியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஒரு வகுப்பில் அவர் உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவோடு ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதன் முக்கியத்துவத்தையும் அது நிலக்கடலையின் வேர் பகுதியில் உள்ள மண் துகள்களுக்கு இடையில் நீரை தேக்கி வைத்துக்கொள்வதை அதிகப்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொண்டார். இது அவருக்கு ஒரு புதுமையான யோசனையை கொடுத்தது. எனவே, முருகேசன் ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயன்படுத்தி குழு முறையில் சாகுபடி செய்ய விரும்பினார்.
விதைகளை எப்போதும் போல புதைப்பதற்கு பதிலாக, முருகேசன் ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், 1 அடி நீளத்திற்கு குழிகளை 1.5 ஏக்கருக்கு 4 அடிக்கு ஒரு வரிசை என எடுத்தார். இரண்டு வரப்புகளுக்குமான இடைவெளி 8 அடியில் இருந்து 5 அடியாக குறைக்கப்பட்டது. இதற்கு இடையில் அவர்கள் உயிர் உரங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றிய தொழுஉரத்தை தயாரித்தார். 300 கிலோ தொழுஉரத்தை அவர் ஒரு கிலோ ரைசோபியம், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் அரை கிலோ கிராம் டிரைக்கோடெர்மா சேர்த்து தயாரித்துக் கொண்டார். இந்த கலவை குவியல் நன்றாக கலக்கப்பட்டு, நீர் தௌிக்கப்பட்டு, ஈரச்சாக்கு கொண்டு மூடி வைத்து அதில் ஆக்ஸிசன் இல்லாத நிலையில் 20-25 நாட்களுக்கு மட்க வைக்கப்பட்டது. இந்த மட்கிய கலவையானது ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு கொட்டப்பட்டு அதன் மேல் தோண்டிய மண் இடப்பட்டு நிரப்பப்பட்டது. 1-2 கொடி விதைகள் ஒவ்வொரு குழியிலும் விதைக்கப்பட்டது. மேலும் அவர் ஒரு சிறிய நீர்ப்பாசன கால்வாயை ஏற்கனவே உள்ள நீர்பாதை வழியாக ஒரு அடி தூரத்திற்கு எடுத்து நீர் மற்ற இடங்களில் நனைத்து வீணாக்காமல் நேரடியாக குழிகளுக்கு செல்லும் வகையில் அமைத்தார். இரசாயன உரங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் மண்புழு உரத்தை பயன்படுத்தினார்.
இந்த முறையின் மூலம் முருகேசன் நல்ல முடிவுகளை பெற்றார். ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயன்படுத்தியதால் அது மண்ணில் ஈரப்பிடிப்பு தன்மையை மற்ற மண்ணைக் காட்டிலும் 5 மடங்கு தேக்கி வைக்கவும் உதவியது. இந்த முறையில் ஒவ்வொரு குழியில் இருந்தும் காய்கறி பயிர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் பெற்றன. பயிர்கள் நன்கு அபாிமிதமான வளர்ச்சியும், தண்டுகள் உறுதியாகவும், அதிக பூக்கள் மறறும் காய்கள் பொிதாகவும் வளர்ந்திருப்பதை அவரால் காண முடிந்தது. மிக முக்கியமாக பயிர் மற்றும் பூக்கும் சுழற்சியானது நீண்ட நாட்களுக்கு இருந்தது. இதன் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சுவதும் கூட வாரம் ஒரு முறை அல்லது இரு முறை என்ற அளவிற்கு தண்ணீர் பயன்பாடும் குறைக்கப்பட்டது.
இந்த முறைகளை பின்பற்றியதால் முருகேசன் நல்ல மகசூலையும் பெற முடிந்தது. மேலும் அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் நல்ல தரமானதாகவும் இருந்தது. காய்கறிகள் புதிதாகவும், நல்ல ஆரோக்கிய தோற்றத்துடனும் காணப்பட்டு அவற்றிற்கு சந்தையில் நல்ல விலையும் கிடைத்தது. மிக முக்கியமாக அவரது காய்கறிகள் அங்குள்ள பல்வேறு வியாபாரிகள் மத்தியில் நல்ல விலைக்கு விற்கும் அளவிற்கு ஒரு தேவையை ஏற்படுத்தியது.
Mr. Murugesan can be contacted at Door no. 2/300, Gotlumarampatti, Bikampatti post, Pennagaram taluk, Dharmapuri-636 813. The writeup has been developed by Mr. J Krishnan, AMEF. He can be contacted at krish72oxigen@gmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 4



