உயிர்ச்சூழல் பயிர் மேலாண்மையினால் பல்வகை பயன்களை பெறுதல்


உயிர்ச்சூழலுக்கு உகந்த மற்றும் பயிர் உயிர்பன்மயத்தை மேம்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றும் போது, மண் வளத்திற்கும், பூச்சி மேலாண்மை, பயிர் மகசூல், செலவினங்கள் மற்றும் வரவு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு நிறைய சாதகமான அம்சங்கள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, இது பண்ணையின் விரிதிறனை கட்டமைப்பதிலும், விவசாயியை தற்சார்பு உடையவனாகவும் உருவாக்குகிறது. பெண்ணாகரத்தில் உள்ள விவசாயிகள் இதற்கான வழியை காட்டுகின்றனர்.


தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் 80 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள பகுதிகள் மானாவாரி வேளாண்மையின் கீழ் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில், பெண்ணாகரம் வட்டம் 33 பஞ்சாயத்து கிராமங்களை கொண்டு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. பெண்ணாகரம் சிவந்த மணற்பாங்கான மண்ணை கொண்டது. தழைச்சத்து மற்றும் சுண்ணாம்புச்சத்துகள் இந்த மண்ணில் குறைவாக காணப்படுகின்றது. மானாவாரி நிலங்களில், விவசாயிகள் சிறுதானிய மற்றும் பயறுவகைகளான கேழ்வரகு, சாமை, கொள்ளு, மொச்சை மற்றும் துவரை போன்ற பயிர்களை மழை பெய்யும் பருவங்களில் பயிரிடுகின்றனர். சோளம் மற்றும் சாமை போன்ற சிறுதானியங்கள் காரிப் மற்றும் ரபி பருவத்தில் மானாவாரி பயிராக பயிரிடப்படுகின்றன.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நிச்சயமற்ற மற்றும் சீரற்ற மழை பொழிவை சந்தித்து வருகின்றனர். மேலும், குறைந்த அளவு காிம பொருட்கள் கொண்ட வளம்குன்றிய நிலம், குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம், அதிகளவு அரித்தோடும் மழை நீரினால் ஏற்படும் நீர் மற்றும் மண் அரிமானம், ஓரினச்சாகுபடி போன்ற பொருத்தமற்ற உற்பத்தி முறைகள், அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், அதிக வளங்களை கேட்டும் பயிர்கள் போன்றவை நிலையற்ற வேளாண்முறைக்கு இட்டுச் செல்கிறது. ஏ.எம்.இ பவுண்டேஷன் என்னும் ஒரு வளர்ச்சிக்கான நிறுவனம் 2011-12 ல் இருந்து பெண்ணாகரம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு உயிர்ச்சூழலுக்கு உகந்த முறையில் அவர்கள் மீள்திறன் வேளாண் முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவி செய்யும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிறது.

முயற்சிகள்
2011-12 ஆம் ஆண்டில் ஏ.எம்.இ. பவுண்டேஷன் 5 கிராமங்களில் பணியை தொடங்கி, 2016-17 ன் முடிவில் 25 கிராமங்களுக்கு விரிவடைந்தது. அனைத்து கிராமங்களிலும், சமூகங்களோடு விவாதிக்கவும், திட்டத்தின் நோக்கங்களைப் பற்றி விளக்கவும் பூர்வாங்க கூட்டங்கள் நடத்தப்பட்டது. கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் மூலம் கிராம சமூகங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடத்தில் அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் தொிவிக்கப்பட்டது. கிராமங்களின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும், குறிப்பாக மக்களைப் பற்றியும், அவர்களின் நிலைமைகள், அவர்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் சவால்கள் மற்றும் வரம்புகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, பங்கேற்பு கிராம ஆய்வுகள் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவியது. ஒவ்வொரு கிராமத்திலும், 60-80 விவசாயிகள், ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இது விவசாயக் குழுக்கள் தங்களின் வளஆதாரங்களை கூட்டாக பெறுவது, உறவுகள், பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகளை சித்தாித்து அவர்களின் வேளாண் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்க உதவியது.

ஒவ்வொரு கிராமத்திலும், ஆர்வமுடைய விவசாயிகள் கண்டறியப்பட்டு அவர்கள் இயற்கை விவசாய குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர். அனைத்து கிராமங்களிலும் இருபது உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் பயிர்களுக்கான திட்டம், தேவைப்படும் இடுபொருட்கள், குழு மேலாண்மை போன்றவை விவாதிக்கப்பட்டன. முதல் முறையாக இந்த விவசாயக் குழுக்கள் தற்போதைய சூழலை ஆய்வு செய்து, இடைவெளிகளை கண்டறிந்து மற்றும் சாதகமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. உதாரணமாக, 2013-14 ல் இந்தக் குழுக்கள் சாியான நேரத்தில் மழை பெய்யும் நேரத்தில் நிலக்கடலையை பிரதான பயிராகவும் துவரை, அவரை போன்றவற்றை ஊடுபயிராகவும், சோளத்தை வரப்புப் பயிர் அல்லது தடுப்புப்பயிர் மற்றும் ஆமணக்கை பொறிப் பயிராகவும் சாகுபடி செய்வதற்கு முடிவெடுத்தன.

2014-15 ல் மழைபொழிவு குறைவாகவே இருந்தது. 13 கிராமங்களில் விவசாயிகள் முன்கூட்டியே கிடைக்கும் பருவமழையை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க முடிவு செய்தனர். பிரதான பயிரில் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்ட, இந்த 13 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், குறைந்த காலப் பயிரான உளுந்து பயிரிட்டனர். மீதமுள்ள 7 கிராமங்களிலும், தாமதமான விதைப்பாக பல்வேறு பயிர்கள் – 3 கிராமங்களில் மக்காச் சோளம், 2 கிராமங்களில் சாமை மற்றும் 2 கிராமங்களில் கேழ்வரகும் செப்டம்பர் மாத இறுதியில் பயிரிட்டனர்.

செய்து கொண்டே கற்றல்:
விவசாயிகள் வயல்வெளிப் பள்ளி அணுகுமுறையை பயன்படுத்தி உயிர்ச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. வயல்வெளிப்பள்ளி என்பது பயிரின் பருவம் முழுவதும் நடைபெறும் ஒரு பயிற்சி. இதில் விவசாயிகள் தங்களின் பயிர் உயிர்ச்சூழல் முறைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பயிர் தொடர்பான முடிவுகளை குழுவாக எடுக்க கற்றுக் கொள்கின்றனர். கிராமங்கள் தோறும் நடைபெற்ற வயல்வெளிப்பள்ளி பயிற்சிகளில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வயல்வெளிப்பள்ளியை எவ்வாறு வழி நடத்துவது என்பது குறித்து முழுவதுமாக கற்பிக்கப்பட்டனர். வயல்வெளிப்பள்ளியானது மண் மற்றும் நீர் மேலாண்மை, மண் வளம் பயிர் உயிரினப்பன்மயம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ரகங்கள் தோ;வு, பயிர் மேலாண்மை, அறுவடை போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி நடத்தப்படுகிறது. இந்த கட்டுரையில் குறிப்பாக, அ) மண் வளத்தை மேம்படுத்துதல், ஆ) பயிர் உயிரினப் பன்மயத்தை மேம்படுத்துதல், இ) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகிய மூன்று அம்சங்களை பற்றி கொடுத்துள்ளோம்.

அ) மண் வளத்தை மேம்படுத்துதல்:
மானாவாரி நிலங்களில் மண் ஊட்டச்சத்து மேலாண்மைக்கு குறைந்த அளவே கவனம் அளிப்பது என்பது பொதுவான ஒன்றாகும். கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதே, மண்ணுக்குத் தேவையான இயற்கை உரங்களை கிடைக்காமல் போவதற்கான காரணமாக விவசாயிகள் பார்க்கின்றனர். இந்த தருணத்தில், சில மாற்று வாய்ப்புகளான விதை நேர்த்தி, பசுந்தாள் உரங்கள், பண்ணையில் இலைதழைகளின் அளவை மேம்படுத்துவது, தொழுஉரத்தை கூட்டுவது, உயிர் உரங்கள் மற்றும் ராக் பாஸ்பேட் பயன்படுத்துவது, போன்றவை விவசாயிகளுக்கு சிறந்த மாற்றுகளுக்கு புதிய வழியாக அமைந்துள்ளது.

உயிர் உரங்களான அசோஸ்பைல்லம், ரைசோபியம் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் விதை நேர்த்தி, பூஞ்சாணங்களுக்கு எதிராக வினையாற்றும் டிரைக்கோடர்மா விரிடி, மண்ணில் சூடோமோனஸ் போன்றவற்றை தொழு உரத்தோடு பயன்படுத்துவது ஆகியவை விவசாயிகள் தங்களின் பயிர்களை ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமாக வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான செயல்பாடாக கற்றுக் கொண்டனர். அந்த வழியில், அவர்கள் தங்கள் பயிர்களை பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல்களை எதிர்த்து வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் சாதகமற்ற சுற்றுச்சூழல் நிலைகளான பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவான மண் போன்றவற்றை வெற்றிகரமாக சமாளிக்கின்றனர்.

வயல்வெளிப்பள்ளி வாயிலாக விவசாயிகள் கற்றுக்கொண்ட மற்றுமொரு செயல்பாடு பசுந்தாள் உரம் ஆகும். பிரதான பயிருக்கு முன்னதாக பெண் விவசாயிகள் சணப்பை பசுந்தாள் உரமாக எடுத்துக் கொள்வார்கள். 2012-13 ஆம் ஆண்டில், இந்த கிராமங்களில் முதன் முறையாக விவசாயிகள் 1 முதல் 1.5 டன் வரையிலான சணப்பை தங்களின் நிலங்களில் பயன்படுத்தினார்கள். மேலும், சணப்பு பயன்படுத்தியதன் மூலம் எவ்வளவு அளவு தழைச்சத்தை அவர்கள் மண்ணில் நிலைநிறுத்தினார்கள் என்பதை அவர்கள் மதிப்பிடும்படி வழிகாட்டப்பட்டனர். விவசாயிகள் தங்களுக்கு சணப்பு விதைப்பது நல்ல குறைந்த செலவிலான மாற்றுமுறையாக கண்டறிந்தனர். வெளியில் இருந்து அவர்கள் வாங்கும் 1 லோடு டிராக்டர் தொழுஉரம் ரூ. 2500. அதே நேரத்தில் 2 முதல் 4 டன் வரையிலான சணப்பை ஏக்கருக்கு ரூ. 300-400 என்ற செலவிலே முடிந்துவிடுகிறது.

மண்ணில் தொழுஉரத்தை சேர்ப்பதனால் அது மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது என்பதை விவசாயிகள் கற்றுக்கொண்டனர். இந்த கூற்றை உறுதிப்படுத்த சிறு பாிசோதனைகள் நடத்தப்பட்டன. தொழுஉரத்திற்கு ஊட்டமேற்றுவது என்பது மண்ணில் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகாிக்கும் என்பதும் விவசாயிகள் கற்றுக்கொண்ட மற்றுமொரு செயல்பாடாகும். 300 கிலோ தொழுஉரமானது, 50 கிலோ ராக் பாஸ்பேட் மற்றும் ரைசோபியம், அசோஸ்பைல்லம், டிரைக்கோடொ;மா மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றிலும்1 கிலோ வீதம் சேர்த்து ஊட்டமேற்றப்பட்டது.
மண்ணில் இருந்து ஈரப்பதம் இழப்பை குறைப்பதற்கு மூடாக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. உதாரணமாக, 2013-14 ஆம் ஆண்டில் நிலக்கடலை சாகுபடி நிலத்தில் பிரதான ஊடுபயிராக துவரை இருந்தபோது, நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட பின், துவரை பூக்கும் தருணத்தில் ஈரப்பத பற்றாக்குறையை சந்தித்தது. பூக்கும் தருணத்தில் பொதுவாக எதிர்பார்க்கும் ஒரிரு மழை பொய்த்ததால், அப்போது அடித்த அனல் காற்று, மற்றும் ஈரப்பத இழப்பு 30-45 விழுக்காடு பூக்கள் உதிர்வதற்கு காரணமாக அமைந்தது. இது எதிர்பார்க்காததால், உடனடி நடவடிக்கையான பயிர்க்கழிவுகள் துவரைச் செடிகளுக்கு அடியில் மூடாக்காக போடப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக பூக்கள் மேலும் உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு, மூடாக்கு போடப்பட்ட பகுதியில் விளைந்த துவரை, மூடாக்கு போடாத பகுதியில் விளைந்த துவரையைக் காட்டிலும் 0.5 கிலோ முதல் 1 கிலோ வரை அதிக மகசூல் கொடுத்தது.

ஆ) பயிர் உயிரின பன்மயத்தை மேம்படுத்துதல்:
பண்ணையின் எதிர்த்தடிப்பு மேம்படுத்துதல், பூச்சி மேலாண்மை, நல்ல ஊட்டச்சத்தை அளித்தல்,  கூடுதல் உணவு மற்றும் வருமானத்திற்கான ஆதாரம் மற்றும் வறட்சி மேலாண்மை என பல்வகை பயன்களை அறுவடை செய்ய, பண்ணையில் பல்வேறு பயிர்களை இணைத்து, பயிர் உயிரின பன்மயத்தை மேம்படுத்துவதில் ஒரு அணுகுமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. காந்திநகர், திண்ணூர், அனுமந்தபுரம், அட்டபள்ளம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு பயிர் வகைகளை இணைத்து பயிரிட்டு முயற்சித்துள்ளனர். நிலக்கடலையை அடிப்படையாக கொண்ட பயிர் சாகுபடி முறையில், பொறிப்பயிராக ஆமணக்கும், வரப்புப்பயிராக சோளம், முக்கிய ஊடுபயிராக துவரையும், மற்றுமொரு ஊடுபயிராக தட்டைப்பயிரும் 280 விவசாயிகள் மேற்கொண்டனர். பலபயிர்களை உள்ளடக்கிய சாகுபடி முறையானது பூச்சி தாக்குதலை சமாளிப்பதற்கான ஒரு வழிமுறையாக மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள் தொடர் பயிர்களை சாகுபடி செய்வதற்கு வழிகாட்டப்பட்டு உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு பயிர் உற்பத்தி கால அளவை மேலும் 40 நாட்களுக்கு நீட்டிக்கச் செய்யப்பட்டது. இது பிரதான பயிரான நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட பிறகு, அந்த நிலத்தில் உள்ள எஞ்சிய ஈரப்பதத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 300 விவசாயிகள் 150 ஏக்காில் தொடர்பயிராக கொள்ளுப்பயிரை சாகுபடி செய்தனர். பிலியனூரை தவிர அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் இரண்டாம் பயிராக கொள்ளு பயிர் சாகுபடி செய்து, நிலத்தில் இருந்த எஞ்சிய ஈரப்பதத்தையும், நிலக்கடலை பயிரால் நிலைநிறுத்தப்பட்டிருந்த சத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டனர். இது அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் கால்நடைகளுக்கான தீவனத்திற்கான ஆதாரமாகவும் அமைந்தது.

இ) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
உயிரியல் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத வழிகளில் பயிர்களை மேலாண்மை செய்யமுடியும் என்பது குறித்து விவசாயிகள் புரிந்து கொள்வதற்காக, வயல்வெளிப்பள்ளிகளில் நிறைய பாிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பண்ணையில் உள்ள உயிர்ச்சூழலில் உள்ள உயிரியல் மற்றும் உயிரற்ற அழுத்தங்கள் குறித்த மதிப்பீடுகளை செய்து பார்த்து, அதற்கேற்றவாறு பூச்சி மேலாண்மை முறைகளை முடிவு எடுக்கும் வகையில் விவசாயிகள் உற்சாகப்படுத்தப்பட்டனர். உதாரணத்திற்கு, இலை வெட்டுச் சோதனைகள் அவர்கள் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு உதவியது. பொறிப் பயிர் மற்றும் வரப்புப் பயிர் போன்றவற்றின் முக்கியத்துவம் பாிசோதிக்கப்பட்டது. சில வயல்வெளிப்பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில், விவசாயிகள் நிலக்கடலையோடு துவரை மற்றும் அவரையை ஊடுபயிராகவும், சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்திழுக்க சோளம் வரப்புப்பயிராகவும், தட்டைப்பயிர் மற்றும் ஆமணக்கு பொறிப்பயிராகவும் செய்து பார்க்கப்பட்டது. சாமையில், அவர்கள் சோளத்தை வரப்புப் பயிராகவும், துவரையை ஊடுபயிராகவும் பயிரிட்டிருந்தனர்.

ஜெர்மலாம்பட்டி, அரங்கபுரம், பி. அக்ரகாரம், காட்டுநாயக்கனஹள்ளி மற்றும் கௌரிசெட்டிப்பட்டி போன்ற 5 கிராமங்களில் இருந்த வயல்வெளிப்பள்ளி திடல்களில் இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் ஒட்டுப் பொறி, மற்றும் விளக்குப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. மஞ்சள் ஒட்டுப் பொறியானது பழைய மண் பானை, பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தி, அவைகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளை பிடிப்பதற்கு மட்டுமல்லாது, மற்ற விவசாயிகளின் கவனத்தை கவர்ந்திழுப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பிடிபட்டிருந்த சாறு உறுஞ்சும் பூச்சிகளை கண்டு அவர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். ஒரு பொறியில் 267 வகையான பல்வேறு சாறு உறிஞ்சும் பூச்சிகள் பிடிபட்டிருந்ததை பங்கேற்பாளர்கள் எண்ணி ஆச்சாியமடைந்தனர் (பார்க்க : பெட்டி செய்தி 1)

இதனைக் கண்டு உற்சாகமடைந்து, குண்டகேட்டுகுளி, மஞ்சநாயக்கன்ஹள்ளி, நலம்பட்டி, சின்னபூம்பள்ளம், வானதிப்பட்டி விவசாயிகளும் அவர்களாகவே மஞ்சள் ஒட்டுப் பொறியை உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு தயாரித்து அமைத்தனர். பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் மட்டைகள், உடைந்த மண் பானைகள் போன்றவற்றை பயன்படுத்தி அவர்கள் மஞ்சள் ஒட்டுப் பொறியை உருவாக்கினர். ஒரு திடலில் அவர்கள் 15 மஞ்சள் ஒட்டுப் பொறியை அமைத்தனர். இந்த ஒட்டுப் பொறி அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்திழுப்பதையும், அதன் காரணமாக நிலக்கடையில் பூச்சித் தாக்குதல்கள் குறைந்து பயிர் பாதுகாக்கப்படுவதையும் விவசாயிகள் உணர்ந்து கொண்டனர். மேலும், ஒட்டுப் பொறிகளிலே மஞ்சள் வண்ணம் தான் சிறந்தது என்பதையும், மஞ்சள் ஒட்டுப் பொறிதான் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த உயிர்ச்சூழல் மாற்றுவழி என்பதையும் கற்றறிந்து கொண்டனர்.

சில தாக்கங்கள்:
உயிர் உரங்களை கொண்டு செய்யப்பட்ட விதை நேர்த்தி முறைகள் வேர் வளர்ச்சி முறைகளை மேம்படுத்தியது. இது தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவதையும் தாண்டி, மண்ணில் ஈரப்பத பற்றாக்குறை போன்ற அழுத்தங்களை தாங்கும் திறன் பெற்றிருப்பதையும் காட்டியது.
அரிசி கஞ்சி தௌிப்பு போன்ற உடனடியாக மேற்கொள்ள வேண்டியவை வறட்சி மேலாண்மை நடவடிக்கைகளாக நிலக்கடலை பயிரை ஈரப்பத இழப்பு போன்ற அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளாக எடுக்கப்பட்டது. அரிசி கஞ்சி தௌிப்பானது (கொள்ளு பயிரின் மீது) பயிரின் வளர்ச்சி பருவத்தில் அடிக்கும்போது அது இலை துளைகள் திறப்பதை கட்டுப்படுத்துவதனால், அதன் மூலம் நீராவிப் போக்கினால் நடைபெறும் ஈரப்பத இழப்பை குறைக்க உதவியது.

பல இடங்களில், சணப்பு போன்ற அதிக அளவு பயோமாஸ் பயன்படுத்தியது, ஊட்டமேற்றிய தொழுஉரம், உயிர் உரங்கள் போன்றவற்றோடு, அதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் ஈரப்பத பாதுகாப்பு நடவடிக்கைகள் பயிர்களை அதிக ஈரப்பத அழுத்த நிலைகளில் இருந்து பாதுகாத்தது. மண் சீர்திருத்த நடவடிக்கைகளாக தொழு உரம் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரங்கள், ராக் பாஸ்பேட் போன்றவை மண்ணின் கட்டமைப்பை தக்கவைக்கவும், வறட்சி காலங்களில் வேர் மண்டலங்களில் வெப்பத்தை குறைக்கவும் பயன்பட்டது. 30 தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய அளவிலான மாதிரிகள் வயல்வெளிப்பள்ளி திடலுக்கும், விவசாயிகளின் நிலத்திற்கும், ஒரு தாவரத்தில் உருவாகியிருந்த கடலைகளின் எண்ணிக்கை, தாவரங்களின் எண்ணிக்கை, கிளைகளின் எண்ணிக்கை, முடிச்சுகள் மற்றும் ஒரு தாவரத்தில் காணப்பட்ட ஒட்டுமொத்த இலைகள் போன்றவற்றில் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை காட்டியது.

பொருத்தமான ரகங்களை பயன்படுத்தியதும் ஈரப்பத இழப்பு அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உதவியது. விவசாயிகள் வி.ஆர்.ஐ 2 என்ற வறட்சியை தாங்கி வளரக் கூடிய ரகத்தை பயிரிட்டிருந்ததால், அது விரைவாக கிளையடித்து, இலைகள் விட்டு மண் பரப்பில் பரவி சுய மூடாக்காக பயன்பட்டது. அதோடு கூட, வி. ஆர்.ஐ.2 ரகத்திற்கு விதை வீரியம் மற்றும் மண்ணில் நன்கு வேர் ஊடுருவாக்கக்கூடிய தன்மை கொண்டிருந்தது.

இயற்கைக்கு உகந்த செயல்பாடுகளை கடைபிடிக்கும்போது இது வறட்சியினால் ஏற்படும் ஒட்டு மொத்த பயிர் இழப்பில் இருந்து பாதுகாக்கிறது. உதாரணத்திற்கு 2015-16 ஆம் ஆண்டில் அறுவடைக்கு 10 -15 நாட்களுக்கு முன்பாக சில இடங்களில் மழை குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகவும் பெய்தது. இது நிலக்கடலை, துவரை மற்றும் தட்டைப்பயிரை பாதித்தது. இருப்பினும் லீசா அணுகுமுறையை நடைமுறைப்படுத்திய நிலங்களில் பயிர்களில் பாதிப்புகள் இல்லை. அதிக அளவில் தொழுஉரங்கள் பயன்படுத்தப்பட்டது, மண்ணின் ஈரப்பத பிடிப்பு தன்மையை அதிகாிக்க உதவியது.

பயிர்களில் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் நடவடிக்கைகள் விவசாய சமூகங்களுக்கு பயிர் மகசூலை அதிகாித்தும், பல்வகையான உணவுகளை கொடுக்கவும் உதவியது. பல்வகை பயிர்கள் பயிரிடும் முறையில், பிரதான பயிரோடு, விவசாயிகள் நிறைய பலனை ஊடுபயிர்கள், வரப்பு பயிர்கள் மற்றும் தொடர்பயிர்களில் இருந்து பெறுகின்றனர். பிரதான பயிர்களாக நிலக்கடலை மற்றும் கேழ்வரகோடு, விவசாயிகள் சராசாியாக நிலக்கடலையில் ஊடுபயிராக போடும் தட்டைப்பயிரில் 8-10 கிலோ பெறுகின்றனர். பொறிப்பயிராக பயிரிடப்படும் ஆமணக்கில் 80-100 கிலோவும், வரப்புப்பயிராக பயிரிடப்படும் சோளத்தில் 10-25 கிலோவும் கூடுதல் மகசூலாக கிடைத்தது. விவசாயிகள் 500 கிலோவிற்கான சோளத்தட்டையை தங்களின் கால்நடைகளுக்கு தீவனமாக பெற முடிந்தது. எஞ்சிய ஈரப்பதத்தில் தொடர்பயிராக போடப்பட்ட கொள்ளு, விவசாயிகளுக்கு மற்றுமொரு உணவாக கிடைத்தது. 2014-15 ஆம் ஆண்டில் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு கொள்ளு பயிரில் இருந்து 300-350 கிலோ மகசூல் பெற்றனர். அதில் 100-150 கிலோ தங்களின் குடும்ப நுகர்வுக்கு போக எஞ்சிய 200 கிலோவை விற்றுப் பயனடைந்தனர்.

மாற்று வழி முறைகளை கடைபிடித்ததால், அது இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கான செலவினங்களை குறைத்து, அதன் மூலம் ஒட்டுமொத்த சாகுபடி செலவினங்களையும் குறைத்தது. மண் வள மேலாண்மை முறைகளை பயன்படுத்தியதால் குறைந்த உரங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை பயன்படுத்தியது, குறிப்பாக மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்பாடு, பூச்சிக்கொல்லி தௌிப்புகளின் எண்ணிக்கையும், அதன் விளைவாக நீர் பயன்பாட்டையும் குறைத்தது. சாகுபடி செலவினங்கள் நிலக்கடலையில் 24 விழுக்காடும், கேழ்வரகில் 20 விழுக்காடும், சாமையில் 3 விழுக்காடும் குறைந்தது. சாகுபடி செலவினங்கள் குறைந்ததால், நிகர வருமானத்தில் அதிக லாபம் கிடைத்தது அறியப்பட்டது. நிகர வருமானம் நிலக்கடலையில் 82 விழுக்காடும், கேழ்வரகில் 42 விழுக்காடும், சாமையில் 71 விழுக்காடும் அதிகாித்தது.

முடிவுரை:
விவசாயத்தை மிகுந்த அளவில் லாபம் தரக்கூடியதாக ஆக்குவதற்கும், இயற்கை வள ஆதாரங்களை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்துவதற்கும் ஒரு ஒட்டு மொத்த பயிர் மேலாண்மை அணுகுமுறை தேவைப்படுகிறது. விவசாயிகள் வயல் வெளிப்பள்ளி போன்ற பருவம் முழுக்க மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை விவசாயிகளுக்கு ஆய்ந்து பார்க்கவும், பண்ணையிலே கற்றும், கண்டுபிடித்து அறிந்தும், உயிர்ச்சூழலை மற்றும் வேளாண்மையின் உயிரியல் அறிவியலை புரிந்து கொள்ளவும் ஒரு மிகப் பொிய வாய்ப்பாக அமைகிறது.

பெட்டி செய்தி:
“மஞ்சள் ஒட்டுப் பொறி” பற்றிய வயல் தின விழா:
2012-13 ஆம் ஆண்டில் நல்லம்பட்டி கிராமத்தில் ஒரு கள தினம் 5 கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள மிகப் பொிய அளவில் நடத்தப்பட்டது. மஞ்சள் ஒட்டுப் பொறியை மையப்படுத்தி அதனை விவசாய சமூகங்களின் மத்தியில் பரவலாக்கும் வகையில் முதல் முறையாக நடத்தப்பட்டது. கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் நடத்தப்பட்டதே “மஞ்சள் ஒட்டுப்பொறி தினம்” ஆகும்.

உபயோகமற்ற பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் உபயோகமற்ற மரப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையிலான பொருட்களை மஞ்சள் வண்ண வர்ணங்கள் மற்றும் தூரிகைகளை பயன்படுத்தி, விவசாயிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் மஞ்சள் ஒட்டுப் பொறியை தயாரித்தனர். ஒவ்வொருவரும் மஞ்சள் ஒட்டுப் பொறியை கொடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு தயாரித்து, அதன்மேல் ஒட்டும் பொருளாக ஆமணக்கு எண்ணையை பூசினர். தன்னார்வலர்கள் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவத்தை குறித்தும், வயல்வெளிப்பள்ளிகள் நடத்தும்போது அவை பயனளித்த முடிவுகளையும் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக, ஒவ்வொருவரும் ஒட்டும் பொறியை தங்களின் நிலங்களில் அமைப்பதற்காக எடுத்துச் சென்றனர். மொத்தமாக 5 கிராமங்களில் 765 மஞ்சள் ஒட்டுப் பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டது.
நிலைத்த விவசாய முறைகள் குறித்த கற்றல்களை பகிர்ந்து கொள்ள வயல் தின விழா போன்ற நிகழ்வுகள் ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டது.

டி.எம். ராதா மற்றும் ஜெ. கிருஷ்ணன்


T M Radha
AME Foundation
#204, 100 Ft. Ring Road,
Banashanakari 2nd Block,
3rd Stage Bangalore - 560085
E-mail: amefprog@yahoo.com;
amefbang@yahoo.co.in

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 20, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...