தமிழ் நாட்டில் உள்ள பெண்ணாகரம் என்ற வட்டத்தில் மங்கரை என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தை சொந்தமாக பெற்றுள்ளார், இந்திராணி என்ற சிறு விவசாயி. அவருடைய கணவர் அரசு ஊழியர் என்பதால், விவசாயம் இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டது. நிலக்கடலை மற்றும் நெல்லை சாகுபடி செய்துவந்தாலும், நல்ல சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் ஆர்வமில்லாமல் இருந்தார். உள்ளூர் இடுபொருள் வியாபாரியை நம்பி, இவர்களின் அறிவுரைப்படி, பயிர்களுக்கு இரசாயனங்கள் இட்டார். இரசாயன விவசாயத்துக்கு மாற்று விவசாயம் இருப்பது கூட இவருக்கு தொியவில்லை.
இந்திராணி சுய உதவி குழுவின் உறுப்பினர் மட்டுமில்லாமல், அவர் இதுபோல் நான்கு குழுக்களை மேம்படுத்தி வருகிறார்.12 ஆண்டுகளுக்கு முன், மைராடா என்ற தொண்டு நிறுவனம் மூலம் இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டது. இயக்குநர் மற்றும் நெறியாளராக இருப்பதால் ஒவ்வொரு மாதமும், மைராடா இயக்குனர்கள் கூட்டத்தில் இந்திராணி பங்கேற்பார். இவ்வாறு நடந்த ஒரு கூட்டத்தில், மைராடா மேலாளர் பக்கத்து கிராமத்தில் ஏ.எம்.இ பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய வயல்வெளிப் பள்ளியில் ஏற்பட்ட வெளிப்பாடு குறித்து பகிர்ந்துகொண்டார். இந்திராணி செய்த சாகுபடி முறையின் மூலம் எந்த இலாபமும் ஈட்டமுடியவில்லை என்பதை உணர்ந்தார். முதல் முறையாக உயிர்ச்சூழல் வழியில் விவசாயம் செய்வதற்கு கற்றுகொண்டார். ஆர்வமிகுதியால், வயல் வெளிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்களிடம் கலந்துரையாடினார்.
2015 ஆம் ஆண்டு, அவரது கிராமத்தில் ஏ.எம்.இ நிறுவனம் உயிர்ச்சூழல் வழி வேளாண்மை விவசாயிகள் பின்பற்றுவதற்கு உதவியாக பணி செய்ய நுழைந்தது. வயல் வெளிப்பள்ளி குழு ஒன்று ஒருங்கிணைப்பதற்கு, இந்திராணி தானே முன்வந்து சிறப்பாக பணியாற்றினார். அவர் அனைத்து வயல்வெளிப்பள்ளி வகுப்பிலும் கலந்துகொண்டு உயிர்ச்சூழல் வேளாண்மை குறித்த அறிவை புதுப்பித்துக் கொண்டார். தனது பண்ணையில் உள்ள பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வு காணும் அளவிற்கு அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் இலைவழி பூச்சிக்கொல்லி கரைசல்களை பயன்படுத்த ஆரம்பித்தார். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்வதற்கு, மஞ்சள் ஒட்டு பொறியை அமைத்தார். களைகளைக் கட்டுப்படுத்த நிலக்கடலை விதைப்பதற்கு முன் சணப்பையை விதைத்தார். இரசாயன உரத்திற்கு பதிலாக, உயிர்உரங்கள் பயன்படுத்தினார். இதனால் செலவுகள் குறைந்து வருவதை கண்டார். தற்போது வேப்ப விதை கரைசல் மற்றும் மஞ்சள் ஒட்டு பொறியை நானே சொந்தமாக தயாரித்துக் கொள்கிறேன். நான் இரசாயன பூச்சிக்கொல்லிகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள், களையெடுப்பதற்கான கூலி ஆகியவற்றிற்கான செலவு ஏக்கருக்கு ரூ.8000 – 10000 வரை முன்பு செலவு செய்தேன். ஆனால் தற்போது நான் சுமார் ரூ.4000 மட்டுமே செலவு செய்கிறேன். மாற்று முறைகளை பயன்படுத்துவதால், ஏக்கருக்கு ரூ.3000 முதல் 4000 வரை என்னால் சேமிக்க முடிகிறது என்று இந்திராணி கூறினார் .
எனினும், உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றியதால், 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியிலும் தன்னுடைய பயிரைக் காப்பாற்ற முடிந்தது. மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, மண்ணின் கனிமச் சத்து அதிகாிக்க, சணப்பையை மடக்கி உழுதல், மண்ணின் நீர்ப்படிப்புத் தன்மையை அதிகாிக்க ஊட்டமேற்றிய தொழுஉரத்தை இடுதல் மற்றும் சாிவுக்கு குறுக்கே உழவு ஓட்டுதல் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை இந்திராணி பின்பற்றினார். பூக்கும் பருவம், வேர் மற்றும் காய் விடும் பருவம் ஆகிய நிலக்கடலையின் முக்கிய பருவங்களின் போது தண்ணீர் பற்றாகுறை மற்ற வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும், எனது நிலக்கடலை வயலில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. என்னால் 50 முதல் 60 % நிலக்கடலை அறுவடை செய்ய முடிந்தது. பயிர் சேதம் 40 முதல் 50 % ஏற்பட்ட அதே சமயத்தில் மற்ற விவசாயிகளின் பயிர் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டது என்றார் இந்திராணி.
இந்திராணி தற்போது மகிழ்ச்சியான விவசாயியாக, உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றி, நிலக்கடலை, சாமை, கேழ்வரகு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். உயிர்ச்சூழலுக்கு உகந்த வழியில் சாகுபடி செய்து பயன்பெற்றதனால், மற்ற மூன்று சுய உதவிக் குழுக்களுக்கு இவற்றை பரப்பும் கருவியாக மாறியுள்ளார். கிராம சபா மற்றும் பஞ்சாயத்து கூட்டங்களில் அவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். அனைத்து விதமான நிலங்களில் (மானாவாரி, இறவை மற்றும் தோட்டகால்) நாம் உயிர்ச்சூழல் வேளாண்மையை பின்பற்றினால் நமது கிராமம் இயற்கை மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை மீண்டும் அடையலாம் என்று இந்திராணி உறுதியாக கூறுகிறார்.
Ms. Indrani can be contacted at 9943316249. The writeup has been developed by Mr. J Krishnan, AMEF. He can be contacted at krish72oxigen@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3



