தாிசு நிலத்திலிருந்து செல்வவளத்தை நோக்கி காலநிலை மீள்தன்மையை நோக்கிய ஒரு பயணம்


சாலிக்ஸ் (வில்லோ) தோட்டங்களுடன், பருப்பு வகை ஊடுபயிர்கள் மற்றும் அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை ஒருங்கிணைக்கும் இந்த வேளாண் காடு வளர்ப்பு முறை, சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு நடைமுறை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய தீர்வை வழங்குகிறது. நிறுவன ரீதியான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் விவசாயிகளின் இத்தகைய கண்டுபிடிப்புகள், காலநிலை மீள்தன்மைக்கான மீண்டும் உருவாக்கக்கூடிய பாதைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த மாதிரி நிரூபிக்கிறது.


நிச்சயமற்ற மழைப்பொழிவு மற்றும் சீரழிந்த மண் வளம் ஆகியவை வேளாண்மைக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் இமாச்சலப் பிரதேசத்தின் கீழ்மலைப் பகுதிகளில், முற்போக்கு உழவரான திரு. அங்குஷ் ஒரு கடினமான யதார்த்த நிலையை எதிர்கொண்டார். அவருக்குச் சொந்தமான ஒரு பொிய நிலப்பரப்பு தாிசாகவும், மிகக் குறைந்த அல்லது விளைச்சலே இல்லாத நிலையிலும் இருந்தது. அந்தப் பிராந்தியத்தின் பலவீனமான சூழலியல், குறைந்துபோன மண் வளம் மற்றும் கணிக்க முடியாத காலநிலை மாற்றும் ஆகியவை அவரது நிலத்தில் வழக்கமான விவசாயத்தை மேற்கொள்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாற்றின. ஆனால், தோல்வியை ஒப்புக்கொண்டு பின் வாங்குவதற்குப் பதிலாக, திரு. அங்குஷ் நமது நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் மாற்றியமைக்கக்கூடிய காலநிலை மீள்தன்மை கொண்ட மாற்று வழிகளை ஆராய்ந்தார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திரு. அங்குஷ் ஒரு துணிச்சலான முடிவை எடுக்கத் தீர்மானித்தார். பிரச்சனை மிகத் தௌிவாக இருந்தது. போதிய மண் வளம் இல்லாமை, நீரைத் தக்கவைக்கும் திறன் குறைவு மற்றும் பொருளாதார வருமானம் எதுவுமே இல்லாத நிலை. இதற்கான தீர்வு இயற்கையைச் சார்ந்ததாகவும், குறைந்த செலவிலானதுமாகவும், உள்ளூர் வேளாண் – உயிர்ச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, நௌனியல் உள்ள டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மார் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தின் மர மேம்பாடு மற்றும் மரபணு வளத் துறைக்கு அவர் சென்றார். அங்கிருந்த வில்லோ (சாலிக்ஸ் இனம்) மரத்தின் மேம்படுத்தப்பட்ட நகல் ரகங்களின் களச் செயல்விளக்கத்தை அவர் பார்வையிட்டார்.

திரு. அங்குஷ், சூழலியல் மற்றும் வணிக ரீதியான மதிப்பிற்குப் பெயர்பெற்ற, வேகமாக வளரக்கூடிய மற்றும் கடினமான மர இனமான சாலிக்ஸ் (வில்லோ) மரத்தின் மேம்படுத்தப்பட்ட நகல் ரகங்களை நடவு செய்யத் தீர்மானித்தார். வில்லோ மரங்கள் விரைவாக வேரூன்றி வளரும் தன்மை, பரந்த பக்கவாட்டு வேர் அமைப்பு மற்றும் வளரும் காலத்தில் அதிகப்படியான நீராவிப்போக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதனால், பருவகாலங்களில் நீர் தேங்கும் அல்லது கால்நடைகள் மேய்ச்சலுக்கு உட்படுத்தப்படும் மலைப்பகுதிகளிலும் மண் வளத்தை பாதுகாப்பதற்கு இவை மிகவும் ஏற்றவை. மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து சுழற்சி, காிமப் பொருட்களின் படிவு, மேம்பட்ட மண் அமைப்பு, அதிகாித்த நீர் ஊடுருவல் மற்றும் பயனுள்ள மண் அரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மண் வளத்தை மீட்டெடுப்பதில் வில்லோ ரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை இலையுதிர் வகை மரங்கள் என்பதால், இவற்றிலிருந்து உதிரும் இலைச்சருகுகள் காிமப் பொருட்களின் சேர்க்கைக்குப் பொிதும் பங்களிப்பதோடு, நுண்ணுயிர்களின் செயல்பாட்டை ஊக்குவித்து மண்ணின் பிணைப்பை மேம்படுத்துகின்றன. நுண்வேர்களின் பரந்த வலையமைப்பைக் கொண்ட வில்லோவின் நார்க்கு வேர் அமைப்பு, நீரை மற்றும் ஊட்டச்சத்துக்களைத் திறன்பட உறிஞ்சுவதுடன், மண் அரிப்பைத் தடுக்க மண்ணை இறுகப் பற்றிக்கொள்கிறது.

செயல்முறை:
2013-ஆம் ஆண்டில், திரு. அங்குஷ் அவர்கள், உயர் தரமான சாலிக்ஸ் ரகங்களைச் சேகாித்தார். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை சோலன் (இமாச்சலப் பிரதேசம்), நவனியிலுள்ள டாக்டர். ஒய்.எஸ்.பி.யு.எச்.எப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வழங்கினர். இந்த ரகங்கள் அவற்றின் தகவமைப்புத் திறன், நேரான வளர்ச்சி (தொழில்துறை பயன்பாட்டிற்கு அவசியமான பண்பு) மற்றும் போத்துக்களை வெட்டி நடுவதன் மூலம் எளிதாகப் பெருக்கமடையும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர் பாழடைந்த நிலங்களில் வில்லோ தோட்டங்களை உருவாக்கினார். வில்லோ சாகுபடிக்குத் துணையாக, அவர் ராஜ்மா மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகை பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டார். இது வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தவும், நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், மண்ணின் காிமச் சத்தை மேலும் அதிகாிக்கவும் உதவியது. இந்த முன்னேற்றங்களால் ஊக்கமடைந்த அவர், வருமான வாய்ப்புகளை அதிகாிக்கும் நோக்கில், சீரமைக்கப்பட்ட அந்தப் பகுதியில் ஆப்பிள் கன்றுகளை நட்டார்.

திரு. அங்குஷ், உயர் தர வில்லோ ரகங்களின் வழங்கல் மற்றும் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வழிகாட்டல் உள்ளிட்ட விரிவான நிறுவன ஆதரவைப் பெற்றார். இந்த ஆதரவில் நடவு நுட்பங்கள் (குழி தோண்டுதல், இடைவெளி விடுதல், குழிகளை நிரப்பும் ஊடகங்கள்), நீர்ப்பாசன கால அட்டவணை மற்றும் களை மேலாண்மை ஆகியவை அடங்கும். வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகளின் வழக்கமான நேரடி கள ஆய்வுகள் மற்றும் டாக்டர். ஒய்.எஸ்.பி.யு.எச்.எப் பல்கலைக்கழகத்தில் உள்ள வில்லோ தோட்டங்களுக்குச் சென்ற அனுபவப் பயணங்கள் ஆகியவை விவசாயிகளின் திறனை மேலும் வலுப்படுத்தியதோடு, நிலத்தின் அறிவியல் பூர்வமான மேலாண்மையையும் உறுதி செய்தன.

தாக்கம்
வில்லோ ரகங்கள் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து பல்வேறு பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் கால்நடைத் தீவனம் (இலைகள் மற்றும் இளம் தண்டுகள்), தாவரச் சீரமைப்பிற்கான உயிரிப் பொருட்கள், எரிபொருள் மரம் மற்றும் கூடை முடைதல் போன்ற கைவினைப் பொருட்களுக்கான நீண்ட குச்சிகள் ஆகியவை அடங்கும். எரிபொருள் மற்றும் நீண்ட குச்சிகளுக்கான வணிக ரீதியிலான அறுவடை, பொதுவாகத் தோட்டம் அமைக்கப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மரங்களின் முதிர்ச்சிக்கு ஏற்பத் தொடங்குகிறது. தற்போது, திரு. அங்குஷ் அவர்கள் சாலிக்ஸ் மரங்களை மரம், எரிபொருள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெறுகிறார். இந்த வில்லோ ரகங்கள், பாரம்பாிய இந்திய வில்லோ மரங்களை விட நேராக இருப்பதால், சந்தையில் அதிக விலையைப் பெறுகின்றன. இவை குறிப்பாக, பிளைவுட் தயாரிப்பு, விளையாட்டுப் பொருட்கள் (குறிப்பாக கிரிக்கெட் மட்டைகள் உற்பத்தி), மற்றும் ஷிடேக் காளான் வளர்ப்பிற்கான தளவாடப் பொருட்களாகவும் பெரும் தேவையைக் கொண்டள்ளன.

அதன் சுற்றுச்சூழல் தாக்கம் ஒரு சில ஆண்டுகளிலேயே கண்கூடாகத் தொிந்தது. ஒரு காலத்தில் தாிசு நிலமாக இருந்த பகுதி, தற்போது பறவைகளை ஈர்க்கும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் மற்றும் உள்ளூர் நுண் காலநிலையை சீரமைக்கும் ஒரு துடிப்பான பசுமை வளையமாக மாறியுள்ளது. மண்ணில் ஏற்பட்ட ஈரப்பத முன்னேற்றம், மற்ற தரைவழித் தாவரங்களின் வளர்ச்சிக்கும் உதவியது.
மீட்புப் பணியின் போது, விவசாயி ஒரு தனி நிலப்பகுதியில் ஆப்பிள் மற்றும் பருப்பு வகை பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் தனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார். பாழடைந்த நிலப்பகுதி வில்லோ சார்ந்த தலையீடுகள் மூலம் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்சியடைந்து கொண்டிருந்த வேளையில், இது அவருக்கு ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்தது.

இந்த முயற்சி சமூகத்தில் ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சந்தேகத்துடன் இருந்த பக்கத்;த விவசாயிகளும் இதே போன்ற மாதிரிகளைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் எளிதான இனப்பெருக்க முறை மற்றும் கண்கூடான பலன்களால் ஊக்கமடைந்த பல விவசாயிகள், தங்களது தாிசு நிலங்களில் சாலிக்ஸ் நடவு செய்யத் தொடங்கினர். இதன் மூலம் வேளாண் காடு வளர்ப்பை ஒரு காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வாழ்வாதார உத்தியாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

வெற்றிக்கான காரணிகள்
வில்லோ மரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நிலச் சீரமைப்பு மாதிரியின் வெற்றிக்கு, சூழல் சார்ந்த, அறிவியல் மற்றும் சமூக-பொருளாதாரக் காரணிகளின் ஒருங்கிணைப்பே முக்கியக் காரணமாகும். முதலாவதாக, உள்ளூர் காலநிலை மற்றும் நிலப்பரப்பிற்கு ஏற்ற வில்லோ ரகங்களைப் பயன்படுத்தியது. பாழடைந்த நிலங்களிலும் அவை அதிக அளவில் உயிர் பிழைப்பதையும் நிலைபெறுவதையும் உறுதி செய்தது. டாக்டர். ஒய்.எஸ்.பி.யு.எச்.எப் மற்றும் வேளாண் அறிவியல் மையத்தின் தொடர்ச்சியான அறிவியல் ஆதரவு இதில் முக்கியப் பங்கு வகித்தது. ரகத் தேர்வு, நடவு நுட்பங்கள், நீர்ப்பாசனம் மற்றும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றில் அவர்களின் வழிகாட்டல் உறுதுணையாக இருந்தது. இந்தத் திட்டம் குறைந்த செலவில், குறைந்த பராமாிப்புடன் மேற்கொள்ளப்பட்டதால், சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதில் மேற்கொள்ளப்பட்டதால், சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதில் பின்பற்றும் வகையில் அமைந்தது. இந்த மாதிரியான சிறப்பம்சம் அதன் ஒருங்கிணைந்த மற்றும் படிநிலையான அணுகுமுறையாக சூழலியல் மீட்பிற்காக முதலில் வில்லோ மரங்களை நடுதல், மண்ணைச் செழுமைப்படுத் பருப்பு வகை ஊடுபயிர்களை பயிரிடுதல், இறுதியில் வருமானத்தை ஈட்ட ஆப்பிள் போன்ற பழப்பயிர்களை அறிமுகப்படுத்துதல். இது நிலத்தின் படிப்படியான நிலையான மாற்றத்தை உறுதி செய்ததோடு பொருளாதார வாய்ப்புகளையும் வழங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாயியின் தொலைநோக்குப் பார்வை, பொறுமை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. 12 ஆண்டுகாலம் அவரது விடாமுயற்சியும், நிறுவனங்களின் ஆதரவும் இணைந்து, ஒரு தாிசு நிலத்தை உற்பத்தித்திறன் மிக்க மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண் காடு வளர்ப்பு முறையாக மாற்றியுள்ளது.

முடிவுரை மற்றும் பாிந்துரைகள்: 
இந்த முன்முயற்சியானது, சாலிக்ஸ் (வில்லோ) மரங்களுடன் பருப்பு வகை ஊடுபயிர்களை ஒருங்கிணைத்து, பின்னர் ஆப்பிள் போன்ற அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த நிலச் சீரமைப்பு மாதிரியாகும். இது ஒரு விவசாயியின் தலைமையிலான புதுமையாகும். இதற்கு அறிவியல் மற்றும் நிறுவனங்களின் ஆதரவு வலுசேர்த்துள்ளன. பாழடைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கு இது ஒரு நடைமுறைக்கேற்ற மற்றும் காலநிலையைத் தாங்கக்கூடிய தீர்வை வழங்குகிறது.
திரு. அங்குஷ் அவர்களின் கதை, தாிசு மற்றும் உற்பத்தித் திறனற்ற நிலங்களை எவ்வாறு நிலையான சொத்துக்களாக மாற்றலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்தக்காட்டாகும். நிறுவன ஆதரவுடன் கூடிய விவசாயிகளின் கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிகளை உருவாக்கும் என்பதை இவரது மாதிரி நிரூபிக்கிறது. மேலும், மரம் சார்ந்த விவசாய முறைகளை ஊக்குவிக்கவும், நீண்ட காலப் பயிர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பாரம்பாியமற்ற விவசாய விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை வழங்கவும் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்களின் அவசியத்தை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. காலநிலை மாற்றம் வழக்;கமான விவசாயத்திற்குச் சவாலாக இருக்கும் இவ்வேளையில், இத்தகைய கள அனுபவங்கள் பாடங்களை மட்டுமல்ல, நம்பிக்கையையும் அளிக்கின்றன.

ஷிகா பக்தா, உஷா சர்மா, அஜய் பிராக்டா, நகேந்தர பால் புடைல், ஜெய் பால் சர்மா


Shikha Bhagta, Usha Sharma, Ajay Bragta, and
Nagender Pal Butail
Krishi Vigyan Kendra Rohru,
Shimla Himachal Pradesh – 171207
E-mail: bhagtashikha@gmail.com

Jai Pal Sharma
College of Horticulture and Forestry Thunag,
Mandi Himachal Pradesh – 173230.

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2025, வால்யூம் 27, இதழ் 2

அண்மைய இடுகைகள்
மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை...

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும்,...