சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும், சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒரு முக்கிய பயிரான மரவள்ளிக்கிழங்கு, பாரம்பாியமாக கைகளாலேயே அறுவடை செய்யப்படுகிறது. இது அதிக உழைப்பு கொண்தாகவும், உடல் ரீதியாக சோர்வளிக்கக்கூடியதாகவும், அதே சமயம் சூழலியல் ரீதியாக நிலைத்ததன்மையற்றதாகவும் உள்ளது. விவசாயிகளான இரண்டு சகோதரர்கள், உடல் உழைப்பைக் குறைக்கும், மண் அரிப்பைத் தடுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் கருவியை உருவாக்கினர். ப்ரோலினோவா அமைப்பின் ஆதரவுடன், இந்த கண்டுபிடிப்பு தற்போது இந்தியா முழுவதும் பரவி வருவதுடன் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய அளவில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் கேரளா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் இப்பயிர் பெருமளவில் பயிரிடப்படுகிறது. சிறு குறு விவசாயிகளைப் பொருத்தவரை, மரவள்ளிக்கிழங்கு வீட்டுத் தேவைக்கும், உள்ளூர் சந்தை விற்பனைக்கும் ஒரு முக்கிய பயிராக விளங்குகிறது. பாரம்பாிய முறையில், குனிந்து நின்று கைகளால் கிழங்குகளைப் பிடுங்கி எடுப்பதன் மூலமே அறுவடை செய்யப்படுகிறது. இந்த முறை மிகக் கடுமையான உடல் உழைப்பைக் கோருவதுடன், முதுகு மற்றும் முழங்கால்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இது மண்ணைத் தளர்த்துவதால் மண் அரிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகாிக்கிறது. களை எடுத்தல் போன்ற உடல் ரீதியாக சோர்வளிக்கக்கூடிய மற்ற வேலைகளையும் பெண்களே கவனிப்பதால், இந்தச் சுமை பெரும்பாலும் அவர்களையே அதிகம் பாதிக்கிறது. இத்தகைய சிரமங்கள் காரணமாக, விவசாயிகள் பெரும்பாலும் களைகளை வேரோடு பிடுங்குவதற்குப் பதிலாக தண்டுப் பகுதியில் வெட்டி விடுகின்றனர். இது களைகளின் வளர்ச்சியைச் சற்று தாமதப்படுத்துகிறதே தவிர, அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகிறது.
புதிய கண்டுபிடிப்பு:
இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த ஜோஸ் கே.வி மற்றும் ஜோஸ் சொியன் ஆகிய இரு சகோதரர்கள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் களைகளைப் பிடுங்குவதற்கு ஏதுவான குறைந்த எடையுள்ள, நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கருவியை உருவாக்கினர். இந்தக் கருவியின் வடிவமைப்பு ஒரு எளிய தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. செடியின் தண்டுப்பகுதி கருவியின் பற்களுக்கு இடையே வைத்துப் பிடிக்கப்படுகிறது. பின்னர், அதன் கைப்பிடியை மெதுவாகப் பின்னோக்கிச் சாய்ப்பதன் மூலம் விவசாயி முன்னே குனிய வேண்டிய அவசியம் இல்லாமலேயே செடி வேரோடு பிடுங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட இந்தச் சிறிய மாற்றம், அறுவடைச் செயல்பாட்டையே மாற்றி அமைக்கிறது. இது தேவையான உடல் உழைப்பைக் கணிசமாகக் குறைப்பதோடு, மண்ணில் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.
இந்தக் கருவி உறுதியானது, அதே சமயம் கையாளுவதற்கு எளிதானது. இதனை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட பயன்படுத்த முடியும். பலமுறை மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பிற்குப் பிறகு, தற்போது இதில் இரண்டு பிரத்யேக மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்காகவும், மற்றொன்று களைகளை அகற்றுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தும் விவசாயிகள், இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு இரண்டு மரவள்ளிக்கிழங்கு செடிகள் அல்லது ஆழமாக வேரூன்றிய நான்கு களைகளைப் பிடுங்க முடிவதாகக் கூறுகின்றனர். இது வேலையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதுடன் உடல் சோர்வையும் பெருமளவு குறைக்கிறது.
ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தாக்கம்
இந்தக் கண்டுபிடிப்பாளர்கள், இக்கருவியைத் தயாரித்து விநியோகிப்பதற்காக ஒரு சிறு தொழிலைத் தொடங்கினர். இன்றுவரை, 2000-க்கும் மேற்பட்ட கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் பல நன்மைகளைக் காட்டுகின்றன. உடல் உழைப்பு மற்றும் முதுகுவலி குறைதல், மண்ணைத் தோண்டுவது குறைவாக இருப்பதால் மண் வளம் காக்கப்படுதல் மற்றும் அறுவடையின்போது மரவள்ளிக்கிழங்குகள் சேதமடைவது தடுக்கப்படுதல் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கருவி மரவள்ளிக்கிழங்கு வயல்கள் மட்டுமன்றி மற்ற இடங்களிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குறிப்பாக, குறுந்தொட்டி எனும் பல்லாண்டு குறுஞ்செடியைப் பயிரிடும் மருத்துத் தாவர விவசாயிகள், அதனை அறுவடை செய்ய இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கருதுகின்றனர். கேரள ஸ்டார்ட்அப் மிஷன் மற்றும் யு.என்.டி.பி –யின் பசுமை கண்டுபிடிப்பு நிதியத்தின் ஆதரவுடன், “கிரியேட்டிவிட்டி கவுன்சில்” என்ற லாப நோக்கற்ற தொடக்க நிறுவனம், விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடையே இந்த தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது.
விவசாயிகளின் அனுபவங்களின் அடிப்படையில், கண்டுபிடிப்பாளர்கள் இந்தக்கருவியின் வடிவமைப்பைத தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். கடினமான நிலங்களில் பயன்படுத்தும்போதோ அல்லது வழக்கத்திற்கு மாறான பொிய வேர்களைப் பிடுங்கும்போதோ, கருவியின் வளைந்த பகுதி நௌிந்துவிடுவதாகப் பயனாளர்கள் தொிவித்தனர். இதைக் கருத்தில் கொண்டு கண்டுபிடிப்பாளர்கள் அந்த நௌியும் பகுதியை வலுப்படுத்தினர். அதேபோல், ஈரமான மற்றும் சேற்று நிலங்களில் பயன்படுத்தும்போது நகரக்கூடிய தாடைப் பகுதி அவ்வப்போது உடைந்தால், அதுவும் பலப்படுத்தப்பட்டது. இத்தகைய தொடர்ச்சியான மேம்பாடுகள், விவசாயிகளால் வழிநடத்தப்படும் கண்டுபிடிப்புத் திறனின் துடிப்பான செயல்பாட்டை விளக்குகின்றன. இங்கே களத்திலிருந்து கிடைக்கும் கருத்துப்பின்னூட்டங்கள் தொழில்நுட்பத்தின் செம்மைப்படுத்தலுக்குத் தொடர்ந்து வடிவம் கொடுக்கின்றன.
உயிர்ச்சூழல் சார்ந்த விவசாயம் மற்றும் இயற்கை வள மேலாண்மையில் உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் உலகளாவிய அமைப்பான புரோலினோவா வலையமைப்பு, விவசாயிகளின் கண்டுபிடிப்புகளை அங்கீகாிப்பதிலும், இந்தத் தொழில்நுட்பத்தை விரிவான மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஏப்ரல் 2024-ல், நைரோபியில் புரோலினோவா கென்யாவால் நடத்தப்பட்ட விவசாயிகள் கண்டுபிடிப்புச் சந்தையில், இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி காட்சிப்படுத்தப்பட்டது. சிறு வீடியோ விளக்கக்காட்சிகள் மூலம், ஆசியாவின் அடித்தட்டு, மக்களின் கண்டுபிடிப்புகள் ஆப்பிரிக்க விவசாயக் கண்டுபிடிப்பாளர்களுக்கும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது பிராந்தியகளுக்கு இடையிலான தொழில்நுட்ப பாிமாற்றத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
முடிவுரை
கேரளாவைப் சேர்ந்த இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் கருவி, அடித்தட்டு மக்களின் புத்திக்கூர்மை எவ்வாறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் சூழல் நட்புத் தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். உடல் உழைப்பின் சுமையைக் குறைப்பதன் மூலமும், மண் அரிப்பைத் தடுத்ததன் மூலமும், விவசாயிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் மூலமும், இக்கருவி மிகவும் நிலையான சிறு விவசாயிகளின் வேளாண்மை நோக்கிய ஒரு படியைக் குறிக்கிறது. இதன் வெற்றி, புரோலினோவா போன்ற தளங்களின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது. இவை ஒத்துழைப்பை வளர்ப்பதுடன், கலாச்சாரங்களுக்கு இடையிலான பாிமாற்றத்தை எளிதாக்கி, விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்கின்றன. இத்தகைய முயற்சிகள், உள்ளூர் சூழலில் உருவாக்கப்பட்ட தீர்வுகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, உலகம் முழுவதும் அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் தூண்டுதலாக அமைவதை உறுதி செய்கின்றன.
பெட்டிச்செய்தி:
விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்ட அரை-தானியங்கி மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் கருவியின் செயல்பாட்டு மதிப்பீடு
மரவள்ளிக்கிழங்கு கேரளாவின் ஒரு முக்கியமான உணவுப் பயிராகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் 12504 ஹெக்டர் பரப்பளவில் (பண்ணை வழிகாட்டி, 2020) பயிரிடப்படும் இது, கேரளாவின் மொத்த சாகுபடி பரப்பில் 20.14 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இது அந்த மாவட்டத்தில் மிகவும் பரவலாகப் பயிரிடப்படும் முக்கிய கிழங்கு வகைப் பயிர்களில் ஒன்றாகும். மரவள்ளிக் கிழங்கின் முக்கிய ஊட்டச்சத்து காரணி ஸ்டார்ச் (கஞ்சிப்பசை) ஆகும். இது கிழங்கின் கலவையில் சுமார் 40 சதவீதம் வரை உள்ளது. சாதகமான சூழ்நிலையில் ஒரு கிழங்கின் எடை 3.5 முதல் 6.0 கிலோ வரை மாறுபடலாம். ஒரு செடியில் வேர்களின் (கிழங்குகளின்) எண்ணிக்கை 2 முதல் 8 வரை இருக்கும். அறுவடை நேரத்தில், இவை சராசாியாக 250-650 மி.மீ நீளமும், 30-60 மி.மீ விட்டமும் கொண்டதாக இருக்கும்.
பொதுவாக, மண்வெட்டி போன்ற உள்நாட்டுக் கருவிகளின் உதவியுடனோ அல்லது உதவியின்றியோ, வெறும் கைகளால் மரவள்ளிக்கிழங்கைப் பிடுங்கி எடுக்கும் முறையே பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இருப்பினும், இந்த முறையானது, அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவை, அதிக நேரத்தை எடுத்துக்கொள்பவை. மேலும், அறுவடையின்போது கிழங்குகள் உடைந்து போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மண்ணின் தன்மையைப் பொருத்து, செடியைப் பிடுங்குவதற்குத் தேவைப்படும் விசையும் அதிகாிக்கிறது. இது ஒரு நாளில் அறுவடை செய்யப்படும் நிலப்பரப்பின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக, அதிக கூலிச்செலவு காரணமாக விவசாயிகளின் லாபம் குறைகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், ஜோஸ் கே.வி மற்றும் ஜோஸ் சொியன் ஆகியோரால் 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரை-தானியங்கி மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்கருவி, நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில செயல்படுகிறது. இதன் மூலம் கடினமான உடல் உழைப்பு குறைக்கப்பட்டு, அறுவடைத்திறன் மேம்படுத்தப்படுகிறது.
இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்கருவி மூன்றாம் வகை நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இக்கருவியின் எடை 3.5 கிலோ ஆகும். இது 8 மி.மீ ஸ்பிரிங் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், நல்ல வலிமையையும், அதே சமயம் நெகிழ்வுத்தன்மையையும் கொண்டுள்ளது. இக்கருவியின் முக்கிய பாகங்களாகக் கைப்பிடி, ஆதாரப்புள்ளி மற்றும் நெகிழ்வான தாடை ஆகியவை உள்ளன. இந்தக் கருவியின் விலை தோராயமாக ரூ. 2500 ஆகும்.
சாதாரணக் கைமுறை அறுவடை முறையில் ஒரு மணி நேரத்திற்கு 12-15 செடிகளை மட்டுமே அறுவடை செய்ய முடியும். ஆனால், இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு 50-60 செடிகள் வரை அறுவடை செய்ய முடியும். இத்தகைய சிறு அளவிலான இயந்திரமயமாக்கலின் முக்கிய நன்மைகள் யாதெனில், செலவும் மிச்சப்படுத்தப்படுகிறது.
| காரணிகள் | அரை-தானியங்கி மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் கருவி | சாதாரண முறை |
| கிழங்கு உடைவது (%) | 12.50 | 41.70 |
| கள திறன் (எண்ணிக்கை/மணி) | 50-60 | 12-14 |
| கூலிஆட்கள் தேவை (மனிதன்-மணி/ஹெக்டர்) | 46 | 205 |
| இயக்கும் செலவு (ரூ/மணி) | 34,500 | 1,53,750 |
| கூலி சேமிப்பு % | 77.56 | – |
| முயற்சி | குறைவு | அதிகம் |
இக்கருவியின் குறைந்த விலை மற்றும் எளிமையான செயல்பாட்டு முறை ஆகியவை, திருவனந்தபுரம் மாவட்ட விவசாயிகளிடையே இதனை மிகவும் பிரபலப்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கள விளக்கக் காட்சிகளின்போது, பின்வரும் தொழில்நுட்ப அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன.
முடிவுரை
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துப் பின்னூட்டகளின் அடிப்படையில், இந்த அரை-தானியங்கி மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்கருவி மிகவும் பயனுள்ளதாகவும், கையாளுவதற்கு எளிமையானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
1. இந்தச் சாதனம் கையாளுவதற்கு மிகவும் எளிதானது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட எந்தவிதமான முன் தொழில்நுட்பப் பயிற்சியும் இன்றி இதை இயக்க முடியும்.
2. இது செயல்பாட்டின்போது மிகக் குறைந்த உடல் உழைப்பையே கோருகிறது. இதன் மூலம் சாதாரணக் கைமுறை அறுவடையில் ஏற்படும் சோர்வு மற்றும் கடின உழைப்பின் சுமை குறைகிறது.
3. இதிலுள்ள நெகிழ்வான தாடையின் வடிவமைப்பு, தண்டினைத் தாடைகளுக்கு இடையே எளிதாகப் பொருத்த உதவுகிறது. இது தண்டை உறுதியாகப் பிடிப்பதையும், சீராகப் பிடுங்குவதையும் உறுதி செய்கிறது.
4. இக்கருவி கிழங்குகள் உடைவதைக் குறைக்கிறது. இது அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கின் தரம் மற்றும் சந்தை மதிப்பைத் தக்க வைக்கிறது.
5. இது அதிகப்படியான களத்திறனை வழங்குகிறது. இதன் மூலம் பாரம்பாிய முறைகளை விடக் குறைந்த நேரத்தில் அதிக நிலப்பரப்பை விவசாயிகள் அறுவடை செய்ய முடிகிறது.
6. இக்கருவி எளிமையான வடிவமைப்பு, குறைந்த எடை மற்றும் சுலபமான செயல்பாட்டு முறையைக் கொண்டுள்ளது. இதனால் பெண் விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பு பயனர்களுக்கும் இது ஏற்றதாக அமைகிறது.
7. குறைந்த விலையில் கிடைப்பதால், இக்கருவி பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாகவும், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளால் வாங்கக்கூடியதாகவும் உள்ளது. இது கள அளவில் இக்கருவியின் பயன்பாடு பரவலாவதை ஊக்குவிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, கிழங்கு வகைப் பயிர் சாகுபடியில் உடல் உழைப்பைக் குறைப்பதிலும், செயல்பாட்டுத் திறனை அதிகாிப்பதிலும் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதிலும் விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்பத் தலையீடுகளின் வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
ஜேம்ஸ் டி.ஜே, ஷரத் தாய், சேஷா வெட்டாசின்ஹா, ஆண் வாட்டர்ஸ்-பேயர், ஸ்டெபின் கே மற்றும் ஹப்பி மேத்யூ
James TJ A1 , Bhavani Residency ,Poothole PO, Thrissur, Kerala, India Pin 680004. E-mail:james.tj6@gmail.com Sharad Rai Golfutar, Buddhanilkantha-8, Kathmandu - 44600, Nepal. E-mail: rsharad246@gmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 4



